A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, April 1, 2012

கால்ற்ரனில் தமிழ்க் கலைவிழா-2012

கால்ற்ரன் தமிழ் மாணவ மன்றத்தின் 24ம் ஆண்டு நிறைவையொட்டிய கலைவிழா சிறப்பாக நேற்று நடந்து முடிந்தது. கால்ற்ரன் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் தமிழ் மாணவர்கள், எண்ணிக்கையளவில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் இன்றைய ஆண்டுகளிலும் விழாவின் ஒழுங்கமைப்பிலோ, கலை நிகழ்ச்சிகளின் தரத்திலோ சற்றும் சளைக்காமல் வெற்றிகரமாக விழாவை நடாத்தி முடித்தமை மிகவும் பாராட்டுக்குரியது.

”தூறல்” என்ற ஆண்டு மலர் நல்ல முயற்சி. பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, நகைச்சுவை நாடகம், இலக்கிய நாடகம் (அரிச்சந்திர மயானகாண்டம்), கவிதை, சிறுவர் நடனங்கள், சினிமாப் பாடலுக்கான நடனங்கள், பாடல்கள் என்று சிறப்பாக திட்டமிட்டு நடாத்தியிருந்தார்கள். அந்த மாணவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். முந்தைய ஆண்டின் “CUTSA’ தலைவர் இந்த ஆண்டின் விழாவிற்கும் முற்றுமுழுதாக அர்பணிப்போடு தன்னை ஈடுபடுத்தியிருந்தது மிகவும் வரவேற்கப்படவேண்டிய, பின்பற்றப்படவேண்டிய ஒன்று.   

1988 ஆம் ஆண்டு தமிழ் மாணவர் மன்றம் கால்ற்ரன் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு ’பரவட்டும் கலாசாரப் பண்புகள்” எனும் சுலோகத்துடன் வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது. எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கும் பொறியியலாளர்கள் அடங்கலாக பல தமிழ்க் கல்வியாளர்கள் தடம்பதித்த கால்ற்ரனின் தமிழ் நீரோட்டம் சுவையானது; சமூக அக்கறையோடு அவர்கள் நடந்த பாதை வரலாற்றுக்குரியது; வெறும் கல்வியாளர்களாக மட்டும் அல்லாமல், புலம்பெயர்ந்த தமிழர்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களை தாங்கிப்பிடிக்க அவர்கள் சிந்திய வியர்வை சிந்திக்கக் கூடியவை. ஒட்டாவா தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை இன்றைய அனைத்து கலாசார விழாக்களிற்கும் அத்திவாரமாக, அடிச்சுவடாக இருந்த பெருமையும் கால்ற்ரன் தமிழ்மாணவர் மன்றத்திற்கு மட்டுமே உண்டு.  

அண்மைக்காலமாக கால்றரன் – ஒட்டாவா பல்கலைக்கழகங்களிற்கு கல்விகற்க வரும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மட்டுமல்ல, அவர்கள் கனேடிய சூழலில் பிறந்து வளர்ந்தவர்களாக இருப்பதும்தான் இன்றைய நிலை; இருந்தும்கூட நேற்று அவர்கள் நடாத்தி முடித்த கலைவிழா உயிர்ப்பூட்டமாக இருந்தது. சோரம் போகாமால், நிலைகுலையாமல் நிதானமாக அவர்களின் விழா நேர்த்தியாக இருந்தது. வெள்ளை வேட்டி, செல்லத்தமிழ், தீர்க்கமான முடிவுகள், தொலைநோக்குச் சிந்தனை, எதிர்கால கனவுகள்…..இப்படியாக அவர்கள் அங்கு பரப்பரப்பாக செயலாற்றியமை சுவாரசியமானவை; நிஜமானவை; நிச்சயமாக பாராட்டப்படவேண்டியவை.

மனிதனிற்கு சமூகப்பொறுப்பு என்பது மாணவப்பருவத்திலேயே உருவாக வேண்டும்; மாணவப்பருவத்தில் சமூகப் பொறுப்போடு உருவாகியவர்கள்தான் மிகச்சிறந்த தலைவர்களாக உருவாகி நல்ல சமூகங்களையும் உருவாக்கியுள்ளனர். இந்தச் சமூக அக்கறையை மாணவப் பருவத்தில் உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியர், பெற்றோர், சமூக அமைப்புகள் மற்றும் பழைய மாணவர்களிற்கு உண்டு. ஆனால் சமூக அக்கறையுள்ளவர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள், பழையமாணவர்களாக மோதிரத்தை தூக்கி காட்டுபவர்கள், சமூகத்தின் தூண்களாகவும் தமிழின் வேர்களாகவும் காட்ட முனைபவர்கள் பலர் நேற்றைய விழாவிற்கு சமூகம் தரவில்லை, ஒரு சிலமாணவர்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்து, விழுந்துபடாமல் விழா ஒன்றை நடாத்த முன்வந்து, அதை அழகாக அமைத்து, பல அமைப்புக்களோடு தொடர்புகொண்டு, விளம்பரமும் சரியாகச் செய்திருந்தபோதும் பார்வையாளர்கள் போதாமல் விழா கொஞ்சம் பின்தங்கியிருந்தது. பார்வையாளர்கள் போதாமை இந்த விழாவிற்கு பெரும்குறையாகப்பட்டது. இது சமரசம் செய்ய முடியாத பெரும் சமூகக் குறைதான். இக்குறையை உணர்ந்து அடுத்த ஆண்டு நாம் திருந்திக்கொள்வோம். அடுத்த ஆண்டு பவளவிழா, 25ம் ஆண்டுவிழா, பெரிதாக திட்டமிருக்கிறார்களாம். வாழ்த்துவதோடு நின்றுவிடாமல் செயலாற்றுவோம். வளர்ப்போம், வளருவோம்; பரவட்டும் கலாசாரப் பண்புகள்.


நன்றி,

நட்புடன்,

அ.பகீரதன்


Friday, March 30, 2012

மனச்சாட்சி


நோன்பிருக்கும் பெண்டிருக்கும்
மான்புமிகு தலைவருக்கும்
மனச்சாட்சி இல்லையென்றால்
மானிடத்தின் கதியென்ன?

எழுத்தாளன் பேனாவிற்கு
அழுத்தம் வந்தபோது
மனச்சாட்சி தோற்றுவிட்டால்
மானிடத்தின் கதியென்ன?

தொண்டனுக்கு பதவித்துண்டும்
தோழனுக்கு பணத்துண்டும்
அவசியமாய் ஆகிவிட்டால்
மானிடத்தின் கதியென்ன?

பச்சைக் கட்சியும்
வாக்குகளின் வாய்ப்புக்காய்
மரங்களை வெட்டிவிட்டால்
மானிடத்தின் கதியென்ன?

சீர்திருத்தும் சிறைக்குள்ளும்
ஆன்மீக அறைக்குள்ளும்
போதையும் போகமும் ஆகினால்
மானிடத்தின் கதியென்ன?

காந்திகளும் கத்தியெடுத்து
காமராஜர்களும் ஊழலாகி
அரிச்சந்திரர்களும் பொய்யானால்
மானிடத்தின் கதியென்ன?

விவசாயி தலைகளிலே
விலைவாசி சிலைகளாகி
உழைப்பாளி உறிஞ்சப்பட்டால்
மானிடத்தின் கதியென்ன?
 
சத்தியத்தை கைவிட்டு
சந்திரனில் கால்வைத்தும்
கருணையற்ற வளர்ச்சிகண்டால்
மானிடத்தின் கதியென்ன?

தொலைநோக்குத் தேவையாம்
தொலைத்தொடர்பு சேவையாம்
கொள்ளையரே முதலாளியானால்
மானிடத்தின் கதியென்ன?

ஆசிரியனின் பார்வையாலே
அந்தணனின் வேதத்தாலே
மாணவிக்கு களங்கம்வந்தால்
மானிடத்தின் கதியென்ன

தாய்போட்ட கணக்கினிலே
தாய்ப்பாலுக்கும் விலையிருந்தால்
தரணியிலே உயிர்வாழும்
மானிடத்தின் கதியென்ன?
 
மனச்சாட்சியை அடகுவைத்து
மானத்தை பறக்க விட்டு
மணிக்காக மணிக்கணக்காய் பணிசெய்தால்
மானிடத்தின் கதியென்ன?

மனச்சாட்சியை அடகு வையாதீர்
அதன் பெறுமதி அதிகம் என்பதற்காய்.......

நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, March 23, 2012

உயிருள்ள ரோஜா


உயிருள்ள ரோஜா ஒன்று-என்
உயிருக்குள் வீழ்ந்தாள் இன்று
அழகாலே மனசை வென்று-என்
உலகாக நின்றாள் இன்று

எல்லாமே அவளானாள்- எனக்கு
எப்போதும் தாயானாள்
உயிருக்குள் நிலையானாள்-என்
உண்மைக்கு விலையானாள்

கன்னத்தின் குழியாக-என்
எண்ணெத்தில் சுழியானாள்
காதலின் குறியீடாய்-என்
வாழ்விற்கு குறியானாள்

திறந்த மனசுடன் வாடி-உன்
பிறந்த மேனியை தாடி
ஆழ்ந்து உறங்கநான் ரெடி-நம்
ஆசை இறங்கலாம் கோடி

வாழ்க்கையொரு பொற்குகை-அங்கு
காதல்மட்டுமே இயற்கை
கட்டியணைக்கலாம் வாடிநம்
கட்டில்உடையலாம் வாநீ

இளமையொரு சொர்க்கம்-அங்குகாதல்
இல்லை என்பதே இல்லை
காதலென்பது இறைவன் தந்தது-அது
கடைசிவரைக்கும் உயிர்ப்பு தந்தது

போதை என்றால் என்ன-நீ போகும்
பாதை தான் பெண்ணே
மேதை என்றால் என்ன-வாழ்வில்
உன்காதல் தான் பெண்ணே

கடவுள் என்றால் என்ன-உன்
கனவு தான் பெண்ணே
இறைவன் என்றால் என்ன-நான்
இறக்கும்வரைக்கும் நீதான் பெண்ணே

அறிந்து கொள்ளடி பெண்ணே-உனக்காய்
அழிந்து போகவும்நான் ரெடி
மூச்சாய் இழுக்கிறேன் உன்னை-என்
முழு உலகமும் நீதான் பெண்ணே
 
உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, March 9, 2012

பயம் கொள்


அச்சம் என்பது
ஆண்மையில்லை கற்புமில்லை
ஆனாலும் கொஞ்சம் பயம்கொள்

தாயின்
தண்டனைக்கு பயப்படாதே
அன்புக்கு பயம்கொள்

மனைவியின்
கண்ணீருக்கு பயப்படாதே
கருணைக்கு பயம்கொள்

கணவனின்
கண்டிப்புக்கு பயப்படாதே
காதலுக்கு பயம்கொள்

தந்தையின்
கோலுக்கு பயப்படாதே
நாவுக்கு பயம்கொள்

குருவின்
போதனைக்கு பயப்படாதே
திறமைக்கு பயம்கொள்

நண்பனின்
பிரிவிற்கு பயப்படாதே
நட்புக்கு பயம்கொள்
 
காதலின்
முடிவிற்காய் பயப்படாதே
காதலுக்கு பயப்படு

ஆண்டவனின்
விதிமுறைக்கு பயப்படாதே
அறத்திற்கு பயம்கொள்

அறியாமையின்
மூடநம்பிக்கைக்கு பயப்படாதே
அறிவியலுக்கு பயம்கொள்

முதலாளியின்
பணத்திற்கு பயப்படாதே
கடமைக்கு பயம்கொள்

அதிகார வர்க்கத்தின்
சூழ்ச்சிகளிற்கு பயப்படாதே
சாணக்கியத்திற்கு பயம்கொள்

கனடாவின்
குளிருக்கு பயப்படாதே
குறளுக்கு பயம்கொள்

நாட்டின்
காவற்துறைக்கு பயப்படாதே
சட்டத்திற்கு பயம்கொள்

பணத்தின்
வலிமைக்கு பயப்படாதே
கடன்பட பயம்கொள்

வாழ்வின்
தோல்விகளிற்கு பயப்படாதே
தேவைகளிற்கு பயப்படு

சமூகத்தின்
ஏளனத்திற்கு பயப்படாதே
கேள்விகளிற்கு பயம்கொள்

நோயின்
அறிகுறிக்கு பயப்படாதே
வைத்தியருக்கு பயம்கொள்

முதுமையின்
வருகைக்கு பயப்படாதே
ஆரோக்கியத்திற்கு பயம்கொள்

யமனின்
கயிற்றுக்கு பயப்படாதே
உண்மைக்கு பயம்கொள்

நீ
வாழவும் பயப்படாதே
சாகவும் பயப்படாதே

நட்புடன்,
அ.பகீரதன்