A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, July 19, 2013

வாலி எனும் கவிவள்ளல்


வலிக்கு இன்று மருந்தாக-எங்கள்

வாலிக்கு வடிப்போமா ஒருகவிதை

வயல்எலி சேர்த்த நெற்கதிராக-எந்தன்

வாய்சொல் சேருமோ நற்கவியாக

 

திருச்சியில் உருவான தீக்குச்சி-அது

திருவிளக்கானது தமிழின் உச்சிக்கு

திருவரங்கம் பெற்றெடுத்த பகிரங்கம்-அதன்

திருக்கரங்கள் எப்போதும் கவிசுரக்கும்

 

பாட்டெழுதி வென்றாயே பத்மஸ்ரீ-உன்

பாட்டாலே பெற்றாயே பலவிசிறி

பாண்டவர் பூமி எழுதிய நீஞானி-இங்கு

மாண்டவர் போதும் எழுந்து வாநீ

 

முக்காலம் உணர்ந்த முனிவனும்-நீ

முக்காலா முக்காபில்லாவார்த்தை

சிக்காமல் போட்டா வித்தகனும்நீ-இங்கு

மாண்டவர் போதும் எழுந்து வாநீ

 

ஐம்பது ஆண்டுகளாய் எழுதியும்

குறைவேதும் இல்லை உன்பணியில்

ஐந்து தலைமுறைக்காய் எழுதியும்

குறையேதும் இல்லை உன்பணிவில்

 

கவிபாடும் உன்னழகில் எழில் கொஞ்சும்

உன்கதையே கவியாகும் அதைஎது மிஞ்சும்

உணர்வாலே குளிப்பாட்டி வார்த்தை கொட்டும்

உண்மைக்கவிஞன் என உனைஉலகம் போற்றும்

 

எங்களிற்காய் கவிபடித்த உன்வதனம்

எம்வாழ்வில் எப்போதும்அது உன்னதம்

எதுகையும் மோனையும் உன்வசம்

இனிஎப்போ காண்போமே உன்னிடம்

 

இந்த மகா கவிஞனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

Saturday, May 18, 2013

அண்ணனுக்கு ஆயிரம் தம்பிகள் (முள்ளிவாய்க்கால் 4ம் ஆண்டு)


அவலங்களின் தாய் நிலமாகி, வரலாற்றுச் சுவடுகளை மட்டுமே தாங்கி, சீரழிந்து போய் கிடக்கும் முள்ளிவாய்க்கால் பற்றி கவிதை ஒன்று வடிக்கவே முனைந்தேன்; கண்ணீர்த் துளிகளோடு தோற்றுப் போனேன். வெறும் பொருளாதார வளர்வை மட்டும் நமதாக்கி, வெறும் சுகபோகங்களை மட்டுமே அறுவடை செய்யும் புலம் பெயர்ந்த தமிழனால் எப்படி புலம்பாமல் இருக்க முடியும்? ஆயிரம் ஆயிரம் அகதிகளின் குமுறல்கள் உலகத்தின் மனச்சாட்சிக்கு புரியாமல் போகலாம். சீரியஷாக சிந்தித்தால் அடிவயிறு பற்றி எரியும் இந்த புலம்பெயர்ந்த அபலைகளின் அழுகுரல் உலக மனித நேயத்தை உலுக்காமல் விடலாம். தாய்மொழியை இழந்து, சொந்த தேசத்தின் வாஞ்சையையும், வாசனையையும் தொலைத்து, பண்பாட்டையும் பறிகொடுத்து, அடிமைப்பட்ட தன்மக்களிற்காக குரல் கொடுக்க வக்கில்லாமல், இறுதிவரை அநீதியை எதிர்க்க திராணி இல்லாமல், இயந்திரச் சுடுகாட்டிற்கு போகப்போகும் நம் அவலத்தை நினைத்தால் வாழ்க்கை வெறுக்காமல் என்ன செய்யும்?

பன்னெடுங்காலமாக வீரத்தை பறைசாற்றிய தமிழன் மண்டியிட்ட இடமா முள்ளிவாய்க்கால்? களத்தில் புதிய வியூகம் ஒன்றை உருவாக்க முனைந்து வியூகமே வினையாகிப்போன இடமா முள்ளிவாய்க்கால்? அல்லது, கருணையில்லா உலக வல்லரசுகளின் கொடிய கரங்களிற்குள் சிக்குண்டு தமிழர் வீரம் தோற்கடிக்கப்பட்ட இடமா முள்ளிவாய்க்கால்? தாழ்வுவரினும், வீழ்ச்சி கொள்ளினும் தமிழீழம் மட்டுமே தமிழர்களிற்குச் சரியான இலக்கு என்பதை  கணித்து, வீரத்தோடும் விவேகத்தோடும் ஒரு இனம் தன்னை தானே அழித்துக்கொண்டு, அந்த அழிவினூடாக புதிய விடுதலை விதை ஒன்றை புதைத்த இடமா முள்ளிவாய்க்கால்? என்னைப் போன்ற சாதாரண மனிதனால் கணிக்க முடியாத கணக்கு முள்ளிவாய்க்கால் எனும் பெருங் கணக்கு. இந்த கணக்கைப் பற்றி வசைபாடுகின்றவர்களும், பெரிதாக்கி இசை பாடுகின்றவர்களும் கொஞ்சம் நிதானிக்க வேண்டும். ஏனெனில் இது பலரின் இரத்தத்தால் நிரப்பப்பட்ட கணக்கு. எதிர்கால முடிவுகளால் மட்டுமே தீர்மானிக்கப் படப்போகும் நெடுங்கணக்கு.

முள்ளிவாய்க்கால் பற்றி எழுத முற்படுகையிலே பிரபாகரனை எண்ணத் தோன்றுகிறது. சிலவேளைகளில் பிரபாகரனைப் பற்றி சிந்தித்தால் பலருக்கு கண்ணீர் முட்டும், ஒரு சொந்த சகோதரனை தொலைத்த வாஞ்சை மனதை வாட்டும். எங்கள் தேசத்திற்காக இருந்த கடைசிக் கட்டுமானம் அவனல்லவா என சொல்லி அழத் தோன்றும். அவமானப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட நம் தேசத்திற்கு புலிக்கொடியை உடையாக்கி அழகு பார்த்த செம்மல் அவனல்லவா என மனசு விசும்பும். வன்முறை, பாஸிசம், பயங்கரவாதம் என்று சிலர் கொச்சைப்படுத்தினாலும், எம் தேசிய ஆன்மாவிற்கு பலம் சேர்த்தவன் அவனல்லவா? சாதியாலும், வர்க்க வேறுபாட்டாலும், வறட்டுக் கௌரவங்களாலும் சிதறி கிடந்த எம் மக்களின் மனதில் புரட்சியை உருவாக்கி, தமிழ் சமூகத்திற்கு சமத்துவமும் முதாலாளித்துவமும் கலந்த நேர்பாதை ஒன்றை அமைத்தவன் அவனல்லவா? முற்றுமுழுதான சுதந்திரத்தை நாம் அனுபவிக்க, தமிழீழம் மட்டுமே சாத்தியம் என்ற மையக் கருத்தை ஆழமாக வேரூன்றியவன் அவனல்லவா? நாம் நெஞ்சை நிமிர்த்தி தமிழன் என்று சொல்லக் கூடிய இனமானத்தை தந்தவன் அவனல்லவா?  சரி கொஞ்சம் பொறுமையாக பின்னோக்கிப் பார்ப்போம்.

யாரும் எதிர்பாராத தருணத்தில், ஆனால் தேவையான நேரத்தில்தான் பிரபாகரன் போன்ற தலைவர்கள் கைத்துப்பாக்கியோடு களத்தில் காலடி எடுத்து வைத்தார்கள். அகிம்சையின் வழி நின்று, சாத்வீகமான வழியில் சிறுபாண்மையினத் தமிழர்களிற்கு விமோசனம் இல்லையென்ற உண்மையை உள்வாங்கிக் கொண்டுதான் எழுபதுகளின் ஆரம்பத்தில் பிரபாகரன் போன்ற தலைவர்களை வரலாறு சமைத்திருக்க வேண்டும். ஜி.ஜி பொன்னம்பலம் மற்றும் தந்தை செல்வாவும், நவரெத்தினமும், அவர்கள் வழிவந்த தோழர்களும் (அமிர்தலிங்கம் உட்பட) குறைந்தவர்கள் அல்ல. உலக ஒழுங்கில் ஓடி, காந்தீய முறையில் அணுகி, கிடைப்பதை பெற்றுக்கொண்டு, படிப்படியாக தனியரசு நோக்கிய கனவை அடைவதே அவர்களின் பாதையாக இருந்தது. தமிழர் போரட்டத்தின் பரிணாம வளர்ச்சிப் பணியில் அவர்கள் நடந்த போதுதான், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பல்வேறு வகையான இன வர்க்க ஒடுக்குமுறைகளை சந்திக்க நேர்ந்தது. அரசாங்க தரப்பில் தலை விரித்தாடிய  எல்லாவிதமான அத்துமீறல்களுக்கும் அவர்கள் தலையாட்ட மறுத்தபோது, ஆயுத ரீதியாக ஒடுக்கப்பட்டார்கள்; அவமானப் படுத்தப்பட்டார்கள்; காரணமின்றி சிறையிலிடப்பட்டார்கள்; அரசியல் சூழ்ச்சிகளால் களுத்தறுக்கப்பட்டார்கள். இந்த போக்கின் முடிவை ஊகித்தறிந்த இளைஞர் குழாம் ஆயுதவழி செல்ல தீர்மானித்தார்கள். அவர்கள் எடுத்த முடிவு சரி என்பதை மாறி மாறி வந்த  சிங்கள அரசுகள் பின்னாளில் நிரூபித்தன. அதையே இப்போதைய அரசும் அப்பட்டமாக நிரூபித்துக் காட்டியுள்ளது.

புலிப்பாஸிசம் என்கின்ற கொச்சை விமர்சனம், பாதிக்கப்பட்ட சொந்த மக்களின் சாபங்கள், பலமான அரசியல் எதிர்வினைகள், இடையிடையே நடந்த உள்வீட்டுக் குளறுபடிகள், இந்திய வல்லரசின் நெருக்கடிகள், பொருளாதாரச் சிக்கல்கள் இவற்றோடுதான் பிரபாகரன் என்கின்ற ஆளுமை கட்டியெழுப்பப்பட்டது. தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாமல் போன சகோதர யுத்தம், ஜே,ஆரின் சாணக்கியமான அரசியல், இந்திரா காந்தியின் திடீர் மரணம்; அகிம்சைவாதிகளின் பிரசாரம், ஆயுதப்போராட்டம் மீது கற்றவர்களும் பெரியவர்களும் வைத்திருந்த அவநம்பிக்கை, கற்றவர்களை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் யாழ்ப்பாண மேல்தட்டு மக்களின் மனோவியாதி, இப்படியாக பல தடைகளை பிரபாகரன் மிக நுட்பமாக தாண்டித்தான் வெளியே வந்தார்.

போராளிகளை தன்னுடைய குழந்தைகளைப் போல அரவணைத்துக் கொண்டது முதல் ஏழைகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும், பணக்காரர்களையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் சமதளத்தில் வைத்துக் கொண்ட சமத்துவம்வரை பிரபாகரனை போற்றிப் புகழ ஆயிரம் காரணங்கள் உண்டு. அவருடைய குழந்தை மனம்; அந்த மனதை அப்படியே பிரதிபலிக்கின்ற அழகிய தோற்றம்; பழகும்போது மிக எளிமை; மனதால் அகங்காரம் கொள்ளாத பக்குவம்; இளமைப் பருவத்திலிருந்தே முற்றாக தன்னை பொது வாழ்க்கைக்கு அர்பணித்துக் கொண்ட இயல்பு; மிகவும் கறாரான ஒழுக்கம்; குறைவான பேச்சு, நிறைவான செயல். இதுதான் பிரபாகரன் என்கின்ற இளைஞன், தேசியத் தலைவனாகியதன் சூட்சுமம். கணவனின் பொதுவாழ்க்கையை புரிந்து கொண்ட வாழ்க்கைத்துணை, வரம் போல வாய்த்த பிரிகேடியர் பால்ராஜ் போன்ற தளபதிகள்; செய் என்று சைகை செய்தால் போதும், செத்து மடியும் போராளிகள், இம்மியும் பிசகாமல் இலக்கை சுக்கு நூறாக்கும் கரும்புலிகள், வறுமையிலும், அபாயத்திலும் எப்போதும் புலிகளைத் தங்கள் பிள்ளைகளாக பார்க்க பழகிக் கொண்ட சுதந்திர தாகம் மீதூரப் பெற்ற பொது ஜனங்கள், வள்ளல் எம்.ஜி.ஆர், அண்ணன் வைகோ மற்றும் நெடுமாறன் ஐயா போன்ற நல்ல இதயங்களின் ஆசிகள். இவைதான் பிரபாகரன் என்கின்ற தேசிய விருட்ஷத்தின் கிளைகள்.

தனக்குத் தெரிந்தவற்றை அப்படியே அழகாக செய்து முடிப்பதில் பிரபாகரன் ஒரு சிற்பி; சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் சாதுரியமாக காய்களை நகர்த்துவதிலும் பெரும் கில்லாடிதான். யார் எதிர்க்கினும் தனக்கு சரி என்பதை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துவதில் அவர் ஒர் நல்ல தலைவன். அலெக்சாண்டர், நெப்போலியன், கரிபால்டி, சேகுவரா, உமர் முக்தார் போன்ற உலகத் தலைவர்கள் வரிசையில் வைத்துக் கொண்டாடக் கூடிய வீரமகா புருஷன். மக்கள் மற்றும் போராளிகள் நலன், தேசத்தின் எதிர்காலம், தமிழீழம் என்கின்ற கட்டமைப்பு, எதற்கும் சோரம் போகாத இலட்சியம் இதுதான் பிரபாகரன் தன்னை நிலைநிறுத்திய தளம்.  

எதிர்க்கின்றவன் யமனாக இருந்தாலும் ஓங்கி அடிக்கின்ற மகா துணிச்சல். வாழையை வெட்டவும் கூரிய வாளோடு போகின்ற முன்னெச்சரிக்கை. எதிரிகளின் கோட்டைகளிற்கு மட்டுமல்ல, சகாக்களின் தலையணைக்குள்ளும் ஊடுருவித் துலாவுகின்ற புலனாய்வு எனும் மகா தந்திரம். மக்களும் புலிகளும் ஒன்றுதான் என்கின்ற விம்பத்தை உருவாக்கிய சாணக்கியம். கண்மூடித்தனமான பயிற்சியும், பயிற்சிக்கேற்ற முயற்சியும். இப்படித்தான் பிரபாகரன் தன்னை வளர்த்து எடுத்துக் கொண்டார்.

இலட்சியத்தின் மீது என்றும் மாறாத இயல்பான காதலும், உலக நாடுகளே வியக்கின்ற வகையில் வெற்றி கண்ட யுத்த களங்களும் பிரபாகரனுக்கு சர்வதேச அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தன. பிரபாகரனின் இலட்சியக் கனவை சரியாக புரிந்து கொண்ட உலகத் தமிழர்கள் அவரை தமிழினத்தின் ஒரேயொரு தனிப்பெரும் தலைவனாக போற்றிக் கொண்டாடினார்கள். இப்படியொரு தலைவன் எமக்கு எப்போதும் வாய்த்தது இல்லை, இனியும் வாய்க்க வாய்ப்பில்லை என நம்பினார்கள். பிரபாகரனுக்கு தெய்வ அந்தஸ்து கொடுக்கும் மனோநிலையில் பலர் உருவாகினார்கள்.

1983 ஆம் ஆண்டு ஆடியில் கண்ணிவெடித் தாக்குதல், 1985 ல் ”ஓபரேஷன் லிபரேஷன்”, 1987 ல் இந்திய இராணுவத்திற்கெதிரான யுத்தம், 1990 ல் மாங்குளம், கொக்குளாய் முகாம்கள் அழிப்பு, 1992 ல் கடற்படை விரிவாக்கம், 1994 ல் அவ்ரோ வகை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டவை, 1996 ல் பாரிய முல்லை முகாம் தகர்ப்பு மற்றும் கொழும்பில் பாரிய குண்டுத்தாக்குதல்கள், 1997 ல் ஜெயசுக்குறுவிற்கு எதிரான மாபெரும் மரபுவழியிலான நெடுஞ்சமர், 2000 ல் ஆனையிறவு முகாம் நிர்மூலம் என்று பிரபாகரன் அடித்த ஒவ்வொரு அடியும் எதிரி நிலைகுலைந்து, அரசாங்கம் சித்தம் கலங்கிய சமர்கள். சேர, சோழ படைக்கு நிகரான படை பிரபாகரனது புலிப்படை என யாரும் யோசிக்காமல் சொல்லுமளவிற்கு பிரபாகரன் களத்தில் சாதித்துக் காட்டியவன். இதில் இரண்டுபட்ட கருத்துக்கு இடமில்லை. விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சியின் தேவையாக, 2000 ஆம் ஆண்டுக்கு பின்பாக பிரபாகரன் சர்வதேச தளத்திலும் கவனம் செலுத்தி, சரியாக பயணிக்க வேண்டிய நிலைக்கு உந்தப்பட்டார்.

2001 புரட்டாதியில், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது பின்லாடனின் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்பாக, உலக நாடுகள் உஷாராகிக் கொண்டன. யாராக இருந்தாலும் சரி, அது விடுதலைப்போராக இருந்தாலும் சரி, பயங்கரவாத முத்திரை குத்தி பூண்டோடு அழிக்க வேண்டும் என திடசங்கற்பம் எடுத்துக் கொண்டார்கள். இதற்கு சமாந்தர காலகட்டத்தில்தான் பிரபாகரனும் வெளிநாட்டு புலிகள் அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முற்ப்பட்டிருந்தார். கே.பி, காஸ்ரோ, நெடியவன் என்றெல்லாம் சில மாற்றங்கள் நடந்ததாக ஊகங்களாக சொல்லப்பட்டது.

2004 ஆரம்பத்தில், கருணா அம்மான், ரணில் விக்கிரமசிங்காவின் சூழ்ச்சியில் அகப்பட்டு புலிகளிடமிருந்து பிரிந்து அரசோடு ஒட்டிக்கொண்டார். சர்வதேச சிக்கலுக்கு முகம் கொடுக்க இலகுவாக இருக்கும் எனக்கருதி புலிகளே ரணிலை ஒதுக்கி வைத்துவிட்டு, 2004 சித்திரையில் மகிந்த ராஜபக்‌ஷவை அதிபராக்கினார்கள். அதே நேரத்தில், இந்தியாவில், 2004ம் ஆண்டு வைகாசியில், திருமதி சோனியா ராஜீவ்காந்தியின் ஆட்சி சபையேறியது. இதற்கு முன்பாகவே 2002 இறுதியில் அமெரிக்க-இங்கிலாந்தின் ஆசியோடு, நோர்வே புன்சிரிப்போடு சமாதானத் தூதுவராக கைகுலுக்கி இருந்தது. வெள்ளைப் புறாவை கையிலே வைத்துக்கொண்டு, கறுத்த மனசோடு அங்கே வந்தார்கள். இந்த காலகட்டங்களில்தான், பல உலகநாடுகள் ஏற்கனவே புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து, தங்கள் நாடுகளில் இயங்க தடை செய்து இருந்தார்கள். 2006 மார்கழியில், வெளிநாட்டு தலைவர்களோடு குறைந்த பட்ச தொடர்புகளை பேணி வந்த அன்ரன் பாலசிங்கமும் மரணமானார். இந்தியாவின் அனுசரணையுடன் கடல்வழிப்பாதை முடக்கப்பட்டு ஆயுத வினியோகமும் தடைப்பட்டிருந்தது. கபடம், நயவஞ்சகம், சூழ்ச்சி அத்தனைக்கும் பெயர்போன உலக வல்லரசுகளின் கூட்டு முயற்சிக்கு எதிராக பிரபாகரனுக்கு காய்நகர்த்துவது கடினமாக இருந்தது.

பலநாடுகளின் இராணுவ உதவிகளோடு, நவீன ரக ஆயுதங்களோடு களத்தில் மூர்க்கத்தனமாக வந்த பல்லாயிரக் கணக்கான இராணுவப்படைக்கு எதிராக பிரபாகரனால் ஈடு கொடுக்க முடியவில்லை. முடிந்தவரை தாக்குப்பிடித்தார். இறுதியில்பிரிகேடியர் தீபன் உட்பட பல பெரும் தளபதிகள் சகிதமாக பிரபாகரன் நேரடியாக களத்தில் மாபெரும் முறியடிப்புத் தாக்குதலை நடாத்தினார். அந்த தாக்குதலையும், இந்திய அரசின் நவீனமயமான கருவிகள் ஊடாக எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து அரசாங்கம் இலகுவாக முறியடித்தது. இறுதியாக புலிகளின் விமானத் தாக்குதலும் கைகொடுக்காமல் போக புலிகளிற்கு மாற்று வழி இல்லாமல் போனது.

ஏதாவது ஒருவகையில் மகிந்த அரசாங்கத்தை சர்வதேச சிக்கலுக்குள் மாட்டி, தான் மீண்டும் தலைதூக்க சரியான இடமாக முள்ளிவாய்க்கால் களத்தை பிரபாகரன் தேர்ந்தெடுத்திருக்கலாம். இது இனப்பிரச்சனை, இங்கே நடப்பது இனப்படுகொலை என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி தான் மீண்டும் சர்வதேச அனுதாபத்தையும் நியாயத்தையும் பெறலாம் என அவர் கருதி இருக்கலாம். ஏதோ ஒரு கணக்கு அதன் பின்னால் இருந்தது மட்டும் உண்மை. சில ஆண்டுகளிற்கு முன்பாகவே உலகநாடுகளின் உதவியுடன் 2009 ஆம் ஆண்டிற்குள் தாங்கள் அழிக்கப்பட்டு விடலாம் என யோகரெத்தினம் யோகி ஒரு மேடையில் பகிரமங்காக பேசியிருந்தார். எனவே புலிகள் முன்கூட்டியே இதை அனுமானித்ததோடு, புலிகளும் ஒரு கணக்கோடுதான் நிச்சயமாக இருந்திருப்பார்கள்.

கிருஷ்ணனின் வஞ்சகத்தால் சூழ்ச்சி செய்யப்பட்டு, களத்தில் தனித்து நின்ற கர்ணனைப் போலவே உலகச் சூழ்ச்சியில் அகப்பட்டு, பிரபாகரன் என்கின்ற மாவீரனும் களத்தில் நின்றான். முன்னவன் செஞ்சோற்றுக் கடனுக்காக நின்றான்; பின்னவன் மாவீரர்களிற்கும் கரும்புலிகளிற்கும், மக்களிற்கும் கொடுத்த வாக்கை காப்பாற்ற களத்தில் நின்றான். எல்லா நம்பிக்கைகளையும் இழந்து, தன்னம்பிக்கையோடு மட்டும் நிர்க்கதியாக நின்ற அந்த மகாத்மாவை நினைக்கையில் நெஞ்சம் கனக்கிறது.

முப்பது ஆண்டு கால பிரபாகரனது பொதுவாழ்க்கை மட்டுமல்ல, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும், வசைகளும், அவருடைய முடிவுகள் பற்றிய அதிருப்தியும் வரலாற்றின் வழியில் ஆராயப்படும். நல்லவை கோலோச்சும்; தவறானவை சுட்டிக்காட்டப்படும். ஆனால் மூன்று தலைமுறையும் இறுதிவரை அடிபணியாது களத்தில் நின்ற அந்த வீரவரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். மக்கள் தலைவர்கள் ஒருபோதும் இறப்பதில்லை. இலட்சிய அண்ணனுக்கு இலட்சக் கணக்கான தம்பிமார்கள் இருப்பார்கள். ஒரு ஒழுங்கான அண்ணன் இல்லாமல், நல்ல தலைவன் இல்லாமல் என் இனம் குட்டிச் சுவராகிய வண்ணமே இருப்பதுதான் மகா துரதிஸ்டம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

உங்கள் நேரத்திற்கு நன்றி,

அன்புடன்,

அ.பகீரதன்

Friday, March 8, 2013

பெண் எனும் பெருஞ்செல்வம்


சத்திரத்தில் சாமியார்

சமையலறையில் மாமியார்

உலகில் உன்னைவிட பாவியார்

உனக்குஏனம்மா இன்னுமொரு பாரதியார்
 


வேலையிலே எஜமான்

மாலையிலே உன்மான்(Man)

இப்படியே நீஏனம்மா அலைவான்

சபித்துவிடு இருவரும் தொலைவான்
 


 
இலக்கியத்தில் மட்டும்உனை பூவாய்

இல்லத்தில் எப்போதும்நீ நாராய்

மொத்தத்தில் நீபாலைவன தேராய்

எழுந்துவாம்மா ஆணுக்கு நிகராய்

 

நாட்டின் பெருஞ்செல்வம் நீயம்மா

நாவிழந்து நிற்பதுஉனக்கு தகுமா

நமக்கெல்லாம் நீதானே தாயம்மா

கூனிக் குறுகுவது நீஏனம்மா

 

விண்வெளியில் கால்பதித்தாய்

வீரமண்ணில் களம்பதித்தாய்

இன்னுமென்ன உறக்கமம்மா

கற்றுயர்ந்து ஆணையிடு ஆணையும் மிஞ்சிவிடு

 

நன்றி,

அ.பகீரதன்


Monday, February 4, 2013

சுதந்திர தினமா? அடிமை இனமா?


தமிழ்க்குடிகள்,

இருட்டறையில் இருந்து

தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு

புனர்வாழ்வுப் பொய்யர்கள்

வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்

 

தோற்றுப் போனவர்கள் பாவம்

தொலைந்தும் போனார்கள்

வென்றவர்களும் ஏனோ வெற்றிக்குள்

தொலைந்து போனார்கள்

நாற்றமடிக்கிறது தேசம்

பிணங்கள் அகற்றப்பட்ட பின்பும்…

 

தமிழ் குடிமக்கள்,

இருட்டறையில் இருந்து

தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு

புனர்வாழ்வுப் பொய்யர்கள்

வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்

 

ஜனாதிபதி உரை,

கண்ணகி போற்றப்படுகிறாள்

கற்பிற்காக அல்ல

மதுரையை எரித்ததற்காக.

மாண்புமிகு ஜனாதிபதியாம்…

 

யாழ் அரச அதிபர்….

கூடைப் பந்தாடும் குமரிகள்

கூந்தலை குட்டையாய் வெட்ட வேண்டுமாம்

குமரிகளும் குதூகலிக்கிறார்கள்…..

வெட்டப்படுவது எதுவென்று அறியாமல்

 

பள்ளியில்கூட ஈரமில்லை

பாலியலுக்காய் கண் சிமிட்டுகிறான் ஆசிரியன்

பாவம் மாணவி

புள்ளிகளிற்காய் பல் இளிக்கிறாள்

 

கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாம்

கன்னிகளை தேடுகிறார்கள் இளசுகள்

சுதந்திர தேசம் மலர்ந்து விட்டதாய்….

பின்னால் பின்னப்படும் கண்ணிகளை அறியாமல்

 

மார்புச் சேலையை மறைத்து மறைத்து

நெல் குத்திய என்சகோதரி

சேலை விலக்குகிறாள்

பாவம் சோற்றுக்காய் போலும்

 

புனர்வாழ்வு எனும் குடிகாரன்

அரங்கேறுகிறான் ”சுதந்திரம்” நாடகத்தில்

நாய் வேஷம் போட்டு

நிமிர்த்தி காட்டுகிறான் நாய்வாலை

கரகோஷங்கள் நின்றபாடில்லை

 

அரசியல் வெள்ளாந்திகளே…

இராவணனுக்கு சீதை தேவையில்லை

சீதைக்கும் கற்பு பொருட்டில்லை-ஆனால்

இராமனுக்கு மனைவி தேவை

ஏன் என்றுமே புரிவதில்லை உங்களுக்கு

 

சுதந்திரம் வேண்டாம்

சிலர் கூச்சலிடுகிறார்கள்

காந்தி மீண்டும் சுடப்படுவாராம்

குரல் வெளியில் இருந்தும் உள்ளே ஒலிக்கலாம்

 

உங்கள் நேரத்திற்கு நன்றி.

அன்புடன், அ.பகீரதன்

Thursday, January 31, 2013

எனக்கும் ஒரு விருது!


(முத்தமிழால் எனக்கொரு விருது
தமிழ்மொழியால் வந்த விருந்து)

 விருதுகளும் பொன்னாடைகளும் மலிந்து போய்க்கிடக்கும் இன்றைய சூழலில் எனக்கும் ஒரு விருது வழங்கப்பட்டிருக்கிறது. படித்தவர்களும், அரசியல் மற்றும் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை உள்ளவர்களும் நிறைந்த ஒட்டாவா தமிழ்ச்சமூகத்தில் அறிவும் ஆற்றலுமிக்க முத்தமிழ் கலாமன்றத்தினர் எனக்கு செந்தமிழ் நாவலன் எனும் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். புலவர் ஐயாவின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின் கையால் வழங்கப்பட்டது என் வாழ்வின் நற்பாக்கியம். எனது பரந்துபட்ட வாசிப்புக்கும், எனது பேச்சுவன்மைக்கும், எழுத்துக் கூர்மைக்கும், ஒட்டாவா தமிழ்சமூகத்தோடு கலைத் தோழமை கொண்டமைக்காகவும் நான் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.

என் மொழிக்காகவும் பண்பாட்டிற்காகவும் நான் செய்தவை மிகச்சொற்பம். நாடக நடிகனாக, இயக்குனராக, தரமான பேச்சாளனாக, சமூக நலன் விரும்பியாக நான் கலையோடு என்னை இணைத்துக் கொண்டாலும், தமிழ் சமூகத்திற்கு நான் செய்தவை மிகச்சொற்பம். செய்ய வேண்டியவை மிக அதிகம். காலச் சூறாவளியில் வேரோடு புடுங்கி வீசப்பட்ட மரமாக நாம் புலம்பெயர்ந்து கிடக்கிறோம்; ஆனாலும் அலையால் மீண்டும் மீண்டும் தூக்கி கரைக்கு வீசப்படும் சருகுபோல நம் கலை ஆர்வங்களும் தூக்கி வீசப்படுகின்றன. ஒரு தேசாந்திரியைப்போல என் கலைகளும் மனதளவில் அலைந்து திரிகின்றன. இறக்கி வைக்க இடம் தேடி அவை அவதிப்படுகின்றன. ஆனாலும்  தன்னை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்தும் குரைத்துக் கொண்டேயிருக்கும் நாயைப்போல கலைஞர்கள் நாம் தொடர்ந்தும் குரைத்துக்கொண்டே இருக்கலாம்; குரைத்துக்கொண்டே இறக்கலாம். அறுவடையை எதிர்பார்க்காமல் விதைத்துக்கொண்டே இருக்கலாம்.

 கொஞ்சம் பின்னோக்கி பார்க்கிறேன். பல மேடைகள் ஞாபகம் வருகிறது. 15 வயதில் என் பக்கத்து கிராமத்து சிவராத்திரி விழாவில் கதாநாயகியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆண் இடையில் விட்டோட, அந்த வாய்ப்பு கிராமத்து எல்லைதாண்டி எனக்கு வந்தது. அது 3 மணித்தியாலய பெருநாடகம். அந்த பாராட்டுக்கள் என்னில் இப்போதும் அப்படியே புதைந்து கிடக்கின்றன. கண்ணகியாக, அரிச்சந்திரனாக……..எல்லா நினைவுகளும் பசுமையாக.கவியரங்கள் தொடங்கி………

இந்த நேரத்தில் என் கிராமத்தையும், என்மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல், சக கலைஞன் மீது அவதூறு கொள்ளாமல் என்னை மேடைகளிற்கு தள்ளி விடுகின்ற நண்பர்களையும் நான் நன்றியுணர்வுகளோடு நினைத்துப் பார்க்கிறேன். என் ஆளுமை மீது நம்பிக்கை கொண்டு எனக்கு கோடு போடுகின்ற, என்னை விமர்சிக்கின்ற எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள். நீங்கள் தந்த இந்த பட்டத்தை காப்பாற்றக்கூடிய அளவில் எனது பேச்சுலகமும் எழுத்துலகமும் ஆமையைப்போல மெல்ல நகர்ந்து இலக்கினை அடையும் என நம்புகிறேன்.

Tuesday, November 27, 2012

இயங்க மறுக்காதா எங்கள் இதயம்



இன்று,

கார்முகிலைக் காணாமலே

கானமயில் தோகை விரித்து ஆடும்

விடியமுன்பே சாமத்து சேவல்கள்

மாவீரா எனக் கூவும்.

 

இன்று,

பிடிபட்ட மானை கைவிட்ட புலி

வேட்டையாட வந்தவனுக்கு

தன்னை விருந்தாக்கி விழும்

 

இன்று,

கோயில்மணி  ஓங்கி  அடித்தும்

கோபுரத்தில் இருந்த பறவைகள்

எழுந்து பறவாமல் அச்சமின்றி  அங்கிருக்கும்

 

இன்று,

தேவியரோ கூந்தல் முடித்திழுத்து

முற்றத்தில் கோலமிட்டு

வீரருக்காய் தீபமேற்றி வணங்குவர்

 

இன்று,

பூசாரி தமிழில் மந்திரம் சொல்லுவான்

இஸ்லாமியன் பள்ளிக்கு ஆறுதடவை செல்வான்

தேவாலயத்தில் மெழுகுவர்த்திகள் நீண்டெரியும்

 

இன்று

அரசியல்வாதி இன்றாவது

நல்லது செய்ய எண்ணுவான்

காமடியனும் கண்ணீர் வடிப்பான்

கொடுங்கோலனும் பூமரங்களிற்கு தண்ணீர் அடிப்பான்

 

இன்று,

கவிஞன் கண்ணீரை மையாக்கி

கற்பனையின்றி கவி வடிப்பான்

எழுத்தாளன் வரலாற்றை எழுதியும் அழித்தும்

அழித்தும் எழுதியும் தடுமாறுவான்

 

இன்று,

தாயொருத்தி

கோப்பாய் மாவீரர் மயானத்தில்

இடிந்த கல்லறையிடையே இடிந்து போய் கிடப்பாள்

 

இன்று,

ஏதிலியாய் இறந்துபோன

கிருஷாந்தியும் தர்ஷினியும்

வீரத்தாயின் கருவறையில் கருத்தரிப்பர்

 

இன்று,

இரக்கமற்ற யமனுக்கு

ஆயிரம் பத்தினிகள் சாபமிடுவர்

தேவர்கள் எதிராய் வழக்குத் தொடுப்பர்

 

இன்று

ஐநாவில் அமைதிக்காக

போலிக் கூட்டம் வைப்பார்கள்

முள்ளிவாய்க்காலில் மரங்கள்

மீண்டும் தளிர்க்கத் தொடங்கும்

 

வீடுகளில் எல்லாம்  இன்று விளக்கானீர்

விடுதலைக்கு  ஒளியேற்றியதால்

விரும்பி வணங்குகிறோம்  உமை

 

உங்கள் நேரத்திற்கு  நன்றி

அன்புடன்,  .பகீரதன்

Monday, November 26, 2012

அதிசயத் தலைவன் எங்கள் பிரபாகரன்


தங்கத்தால் உடல் அமைஞ்சு

தாமரையால் மனசு செஞ்சு

தமிழ்த்தாயின் குருதி பாய்ச்சி

தமிழருக்காய் ஓர் வரவு

 

அடிமை வலி பொறுத்திருந்த

அருமைத்தாய் பார்வதியோ

இடுப்பு வலி பொறுக்காமல்

ஈன்றெடுத்தாள் ஒரு சேகுவரா

 

முதலிரவு கூடுகையில்-ஆத்தா

முருகனின் சித்திரத்தை நினைத்தாளோ?

முழுகாமல் இருக்கையிலே-ஆத்தா

மூவேந்தர் சரித்திரத்தை படித்தாளோ?

 

தொப்புள் கொடி யறுத்து-தாதி

தமிழ்க் கொடியை இணைத்தாளோ?

தலைகீழாய் பிடிக்கையிலே-தாதி

தமிழ்க் கீதம் இசைத்தாளோ?

 

ஆயுதமின்றி இருந்ததன் விளைவே

ஆயிரம் இழப்பென உணர்ந்தான்

கைமோதிரம் விற்று காசினைப் பெற்று

கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றான்

 

பட்டினியால் பச்சை மரவள்ளி உண்டான்-போர்

வித்தைகள் கற்று விஷக்கிருமிகள் கொன்றான்

எத்துணையுமின்றி அத்தனை பாடும் பட்டான்

தம்பியாய் இறங்கி அண்ணனாய் உயர்ந்தான்

 

சீலனாய் மில்லராய் திலீபனாய் சூசையாய்

சங்கராய் மாலதியாய் புதுவையாய்

அத்தனை துறையிலும் மிளிர்ந்தான்

ஆடுகளத்தில் தானும் புலியாய் நின்றான்

 

துரோகங்கள் துயரங்கள் தோல்விகள்

இடராக தொடராக வந்தும்

தியாகங்கள் மாயங்கள் வியூகங்கள்

வகுத்து தமிழ் மானத்தைக் காத்தான்

 

முடிவில்லாப் போரை முடிக்க முனைந்து

முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்தான்

மூவேழு நாட்டினை ஒன்றாக எதிர்த்து

முப்படையின் துணையோடு தனியாக நின்றான்

 

காவியர் நாடும் காந்தீய நாடும்

காவியத் தலைவனை வஞ்சகமாய் வீழ்த்த  

தன்னுடன் தந்தையும் தனயனுமாய்-மூன்று

தலைமுறையோடு களத்தில் நின்றான்

 

களத்தில் வீழ்ந்து புலத்தில் எழுந்தான்

காலத்திற்கு ஏற்ப புதுக்களத்தை வரைந்தான்

ஈழத்தின் தேவையை உலகத்தில் ஆழமாய் பதித்தான்

உலகத் தமிழரின் தலைவனாய் வரலாறு படைத்தான்

 

 
உங்கள் நேரத்திற்கு நன்றி.

அன்புடன், .பகீரதன்

 

Sunday, November 25, 2012

களமும் காதலும்


அம்மி மிதிக்கும் வயதில்

விம்மி வெடித்தீர்

கும்மி அடிக்கும் பருவத்தில்

குப்பி கடித்தீர்

 

கல்வி கற்கும் வயதில்

சொல்லி அடித்தீர்

செல்வி கலையும் பருவத்தில்

வேள்வி வளர்த்தீர்

 

முத்தங்கள் தொடுக்கும் வயதில்

யுத்தங்கள் தொடுத்தீர்

அர்த்தங்கள் புரியும் பருவத்தில்

அனர்த்தங்கள் தடுத்தீர்

 

பெண்ணைக் காதலிப்பதே

பேருவகை என அவன் நினைக்க

மண்ணைக் காதலிக்கும்

மகத்துவத்தை போதித்தீர்

 

இடுப்புவலி அடுப்புவழி தொடரும்பழி

அதுவே பெண்ணென அவன் நினைக்க

கரும்புலி கருணைமொழி காக்கும்விழி

அதுவே பெண்ணென நிரூபித்தீர்

 

அடிமைப்பூ அழுமூஞ்சி அருளிக்கொட்டை

அதுவே பெண்ணென அவன் நினைக்க

விடுதலைப்புலி உரிமைக்குரல் சயனற்வில்லை

அதுவே பெண்ணென சாதித்தீர்

 

வெள்ளியும் செவ்வாயும்

விரதமிருந்த பெண்டீர்-எமக்காய்

கொள்ளியும் கொலையும் எடுத்தீரே

எண்ணியும் வணங்கியும் உமைவாழ்த்துறோம்

 

ஈழத்து நிலமெல்லாம் நீ

பூவாய் மலரும்

தாயகத்து தாயிடத்தே நீ

சேயாய் வளரும்

 

உங்கள் நேரத்திற்கு  நன்றி

அன்புடன்,  .பகீரதன்