A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, April 3, 2014

மனதில் பட்டது


நீதிக்கான குரல்....
உனது கருத்துக்கள் அதிகாரத்தில் இருப்பவர்களிற்கும் அருவருடிகளிற்கும் சுயநலக் கும்பல்களிற்கும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் அடிமட்டத் தொண்டனிற்கும் அநீதியை எதிர்த்து நிற்கும் ஏழையின் செவிகளிற்கும் இனிப்பாக இருக்க வேண்டும். சமூக நடப்பு, சாணக்கியம் என்பவற்றையும் தாண்டி சத்தியத்திற்காக உனது குரல் ஓங்கி ஒலிக்கட்டும். இந்த உலகம் பல பிரமாக்களையும், பிதாமகர்களையும் சந்தித்து இருக்கிறது. இவர்கள் நிலையற்றவர்கள். இவர்கள் எடுத்துக் கொண்ட உண்மை மட்டுமே நிலையானது. அதுவே உலகை மாற்றிய அற்புதக் கருவிகள். அந்த உண்மைதான் காந்தியாக, கார்ல் மார்க்ஸாக நமக்குப் பயன்பட்டது. சுயநல, அயோக்கியத்தனம் சார்ந்த இந்த பூமிப் பந்தை நல்வழிக்கு உருட்டும் நெம்புகோலாக உன்னால் இருக்க முடியாமல் போகலாம்; வாய்மூடி மௌனமாக நகரும் சுயநல மனித சமூகத்தை உன்னால் ஒன்றுபடுத்த முடியாமல் போகலாம்; தர்மத்திற்காக போராடும் வர்க்கத்தை உன்னால் ஒன்றிணைக்க முடியாமல் போகலாம். ஆனாலும் என்ன? காதில் விழுவதை கணக்கில் எடுக்காமல் நெஞ்சில் எழுவதை சொல். உன் வார்த்தைகளால் நீதி கிடைக்காமல் போனலாலும் கூட, அது நாளை அநீதி செய்ய இருப்பவர்களிற்கு எச்சரிக்கையாக இருக்கட்டும். கோபத்துடன் எழுபவன் நட்டத்துடன் உட்காருவான் என்று ”கோச்சடையான்” சொல்கிறது. ஆனாலும் சமூகக் கோபம் தேவையானது. நீதிக்கான உன் கோபம் தொடர்ந்து ஒலிக்கட்டும். உன் குரல்வளையை மற்றவர்கள் நெரித்தாலும் உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். தனிமனித நட்புக்களையும், கதிரை சார்ந்த இலாப நட்டக் கணக்குகளையும் தாண்டி அவை வெளியே வரட்டும். உண்மையை முதலில் அலசி ஆராய்ந்த பின்பு பேசக் கற்றுக் கொள்வோம் அனைவரும். வாழ்வின் முடிவு எல்லோருக்கும் பொதுவானது, அது மரணம் எனும் மகிமை. அதுவரைதான் நம் ஆட்டம். வயிறும் உடலும் பசிக்கும் வரைதான் வாழ்வு.......

Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா


 
(பாலு மகேந்திரா )
 

எழுத வேண்டும் என

எத்தணிக்கிறது என்பேனா

 

எதை எழுதுவது?

எழுதி என்னாவது?

புழுதி படர்ந்த புத்தகமாய்

என் பேனா

 

ஆற்றாமை

அழுத கண்ணீராக……

தேற்றாமை

பெரும் துக்கமாக….

 

பாலு மகேந்திரன்

எங்கள் ஈழ மகேந்திரன்

கோடாம்பாக்கமே புருவம்

உயர்த்திய வானச் சந்திரன்

 

சிறுவயதில்

தீவிர  வாசிப்பு

தீரா  வெறியோடு

சினி்மா  நேசிப்பு

 

லண்டனில் பட்டப் படிப்பு

புனேயில் சினிமாப் படிப்பு

இறுதியாய் சினிமா மட்டுமே பிடிப்பு

உறுதியாய் அதுவே சுவாசத் துடிப்பு

 

முதல் படம்

”அழியாக் கோலம்”

சினிமாவில் அவருக்கு

அழியாக் கோலம்

 

ஐந்து முறை

தேசிய விருது

அதில் இரண்டு

ஒளியமைப்பிற்காக

 

 

பிடல் காஸ்ரோவை

பின்பற்றித் தொப்பி

கடல் கடந்து சாதித்த

ஈழத்தின் சிற்பி

 

படைத்தவனே பிரமிக்கும்

பன்முக ஆற்றல் அவர்க்கு

படைத்தார் ”பாலா” க்களை

நிலைத்தார் ”சீமான்” களாய்

 

சினிமாப்

பட்டறை வைத்தார்

பலருக்கு அங்கே

முகவுரை கொடுத்தார்

 

உன் பணி தொடர

பலர் வருவார்

உன் படம் போல

இனியார் தருவார்?

 

”வீடு” படம் எடுத்தபோது

வீடுபேறு அடைந்துவிட்டாய்








விடைபெறு தந்தையே-உன்






படை  வரும் நல் படைப்புக்களாய்


 

ஆன்மா சாந்தியடையட்டும்.


 

அ.பகீரதன்

Tuesday, February 4, 2014

பலூனின் சுதந்திரம்


காற்றடைக்கப்பட்ட பலூன்

ஊசிக்காக காத்துக் கிடக்கிறது….

 

ஊசிகள் சில இன்னும்

தூண்டில் ஊசிகளாக

 

ஊசிகள் சில இன்னும்

தாசிகளின் மேற்சட்டையில்

 

ஊசிகள் சில இன்னும்

விருந்தாளியின் பல் இறுக்குகளில்

 

பார்வைக்கு

அழகாகத் தெரியும்

பலூனிற்குள் காற்றின் சுதந்திரம்

கேள்விக்குறி யாக்கப்படுகிறது?

 

பலூன் ஊதப்படுகின்றது

குழந்தைக்கு கும்மாளம்

ஊதியவனிற்கு சிம்மாசனம்

காற்றிற்கு மட்டும் அவமானம்

 

காற்றின் துணையோடு

பலூன் பறக்கிறது

பலூனிற்கு சுதந்திரம்

காற்றிற்கு நிர்ப்பந்தம்

 

காற்றின் துணையோடு

பட்டம் பறக்கிறது

பட்டத்திற்கும் கொண்டாட்டம்

காற்றிற்கும் விடுதலை

 

பட்டம் கயிறிடம்

சுதந்திரத்தை இழந்து கிடக்கிறது

காற்றிற்கு விடுதலை வழங்கிவிட்டு

 

பட்டத்தின் பெருந்தன்மை

பலூனிற்கு இல்லை

அதுதான் பட்டம் உயரப் பறக்கிறது

பலூன் தாழப் பறக்கிறது

  

காற்றிற்கு புரியவில்லை

பலூனின் பலவீனம்

 

பலூன் சூம்பிக் கிடப்பதாய்

ஒப்பாரி வைக்கின்றன ஊசிகள்

 

காற்றடைக்கப்பட்ட பலூன்

ஊசிக்காக காத்துக் கிடக்கிறது

 

ஊசிகளோ

சல்லாரி அடிப்பவர்களால்

நாதஸ்வரத்தில் தொங்கிக் கிடக்கிறது

 

காற்றின் சுதந்திரமே நம்சுவாசமாய்

சுதந்திரம் கேள்விக் குறியாகும்போது

சுவாசமும் தடைசெய்யப்படலாம்

Sunday, February 2, 2014

கனடாவின் தலைநகரில் தைப்பொங்கல் விழாவும் தமிழ் மரபுத் திங்களும்


கனடாவின் தலைநகராகிய ”ஒட்டாவா(Ottawa)” நகரில் முத்தமிழ் கலாமன்றம் பொங்கல் விழாவை வருடா வருடம் மாபெரும் நிகழ்வாக கொண்டாடி வருகின்றது. புலம்பெயர்ந்த வாழ்விலும், தமிழரின் மொழி, கலை, கலாசாரம், பண்பாடுகள் சார்ந்த வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதே இந்த விழாவின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது; அதில் வெற்றியும் அடைந்துள்ளது. “புலம்பெயர்ந்தவர்கள்” என்ற வரையறைக்குள் தங்கள் வாழ்வைச் சுருக்கிக் கொள்ளாமல் தங்களையும் தங்கள் மரபு சார்ந்த பின்புலங்களையும் வளப்படுத்திக் கொள்வதில் தமிழருக்கு நிகர் எவருமில்லை. கனடாவில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழுகின்றார்கள்; இவர்களில் பெரும்பான்மையானவர்கள் என்பதுகளின் மத்திய பகுதிக்குப் பிற்பாடு வந்து குடியேறிவர்கள். குடியேறிய இவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் கடின உழைப்பாலும் ஊக்கத்தாலும் அறிவியல், பொருளாதாரம் மற்றும் பண்பாடு ரீதியாக எட்டிப் பிடித்திருக்கும் உயரம் மிகப்பெரியது; பிரமிப்பானது; மலைக்கத் தக்கது. இந்த வளர்ச்சிப் பாதையின் சிறுகூறாக, முத்தமிழ் கலாமன்றத்தின் பெருமுயற்சியால் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக ஒட்டாவா நகர அரசும் அறிவித்திருப்பது இவ்வாண்டின் இனிப்பான பொங்கல் செய்தியாகும்.  

ஒட்டாவா வாழ் தமிழர்களின் முயற்சியின் விளைவாக இவ்வாண்டிலிருந்து சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக(Tamil Heritage Month) ஒட்டாவா நகர அரசு அறிவித்திருக்கின்றது. தமிழர்கள் தங்களின் மொழித்தோன்றல், வழித்தோன்றல், கலை, இலக்கியம், ஆன்மீகம், கலாசாரம், பண்பாடு, அரசியல் மற்றும் வரலாற்றின் பெருமைகளையும் விழுமியங்களையும் தங்கள் குழந்தைகளிற்கு மட்டுமல்லாது கனடாவில் வாழும் பிற இனத்தவர்களிற்கும் எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாக இந்த அங்கீகாரம் அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் செறிவாக வாழும் நகரமாகிய ”மார்க்கம்(Markham)” நகரசபை முதலாவதாக 2011 மார்கழியில் தமிழ் மரபுத் திங்களை ஏற்றுக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக பல நகர அரசுகள் ஏற்றுக்கொண்டன. இந்த அங்கீகாரத்தை மாகாண, மத்திய அரசுகள் ஏற்றுக் கொள்வதற்கான பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளின் முக்கிய கர்த்தாக்களாக இருந்த அரசியல் பிரமுகர்கள் நீதன் சான்(Nethan Shan), லோகன் கணபதி போன்றவர்களும் மற்றையவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கனடா பல்லினங்கள் வாழுகின்ற நாடு; பாகுபாடுகளின்றி பல்கலாசாரங்களை வரவேற்கின்ற, ஊக்குவிக்கின்ற அரசு. இதை தங்களிற்கு அனுகூலமாக எடுத்துக் கொண்டு தமிழர்கள் மொழி சார்ந்து, பண்பாடு சார்ந்து தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில் மாபெரும் வெற்றி அடைந்து வருகின்றார்கள். மொழியும், மொழி சார்ந்த பண்பாடும் காப்பற்றப்படவேண்டும் என்பதில் புலம்பெயர்ந்த பெரும்பாலான தமிழர்கள் மிகவும் ஜாக்கிரதையாக உள்ளனர். ஈழத்திலோ அல்லது தமிழ் நாட்டிலோ இருக்கும் தமிழ் குழந்தைகளின் தமிழர் சார்ந்த ஆளுமைகளிற்கு நிகராகவோ அல்லது மேலாகவோ புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகளின் தமிழர் சார்ந்த ஆளுமைகள் உள்ளன. பரதநாட்டியம் தொடங்கி தமிழ் சினிமாவரை அவர்களிற்கு அத்துபடி; மீன்குழம்பு தொடங்கி பணியாரம் வரை நன்றாக இறங்கும். செந்தமிழ் அவர்களால் பேச முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள இயலும். இளையராஜாவின் இசை தொடங்கி பவர் ஸ்ரார் வரை அவர்களால் விமர்சனம் செய்ய முடியும். திருவள்ளுவர், ஔவையார், கம்பன், பாரதி போன்றவர்கள் தமிழ் வளர்த்த பெரியவர்கள் என்பது புரியும். விரும்பியோ விரும்பாமலோ வழிபாட்டுத் தலங்களிற்கு போகிற பண்பாடு அவர்களிடம் உண்டு. கால ஓட்டத்தில் இவையாவும் கரைந்து, கலைந்து போய்விடும் என வெட்டியாக வாதிடுவோர் இருக்கவே செய்வார்கள். நாம் இருக்கும்வரை நம் விழுமியங்களோடு வாழ்வதும், அதற்காக இயன்ற முயற்சிகளை எடுப்பதும் நமக்கு எந்த வகையிலும் தீங்கன்று.

ரொறன்ரோவின் இடியப்ப கடை தொடங்கி நியூயோர்க்கின் வோல்(Wall street) வீதி வரை தமிழன் கால்பதிப்பதை, வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றது. பில்கேட்ஸ் அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் கணணித்துறையில் பில்கேட்ஸ் அளவுக்கு வளர்ந்தவர்களில் பல தமிழ்ப் பெயர்களுமுண்டு. வடஅமெரிக்காவின் தொழிநுட்ப வளர்ச்சியில் தமிழ் மூளைகளிற்கும் பெரும்பங்குண்டு. புண்ணுக்கு மருந்து கட்டவே வசதியற்ற பிரதேசத்திலிருந்து வந்த தமிழர்கள் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் அணிக்கு தலைமை தாங்குகின்ற மேலான கல்வியறிவுமுண்டு. ரொறன்ரோவில் வீதிக்கு வீதி கோயில் இருப்பது மட்டும் தமிழனின் கால்தடங்கள் அல்ல, அரசியல், பொருளாதார வெளியில் அவனுடைய பங்களிப்பு பெறுமதிமிக்கவை. ”ஒற்றுமையில்லாத் தமிழன்” என்று கிண்டலடித்தவர்களிற்கு சவாலாக, ஒரு தமிழச்சி கனடா நடுவண் அரசில் எம்.பி யாகி பாராளுமன்றம் சென்ற வரலாறும் இங்குண்டு.

செந்தமிழ் வீசிய தேசத்தில் தமிழ் இன்று கிண்டல் மொழியாக சினிமாவில் சித்தரிக்கப்படுவது காலத்தின் நியதியாகி இருக்கலாம்; நவீனமும் கணணியும் தமிழ்மொழியின் வீச்சை குறைத்துப் போகலாம்; சொந்த நாடில்லா மொழி என்பதால் மாற்றான் காலடியில் கசங்கிப் போகலாம்; போற்றப்பட வேண்டிய சங்க இலக்கியங்கள் கிராமத்துக் கடைகளில் சீனிச்சுருள்களாக மாறலாம். சந்தானத்தின் சினிமாத் தமிழும் இணையங்களில் உலாவரும் சிறுபிள்ளைத் தமிழும் தான் எங்கள் தமிழ் என்று எதிர்கால சந்ததி புரிந்து, தங்களிற்குத் தாங்களே கறை பூசிக் கொள்ளலாம்; லகர, ளகர, ழகர வேறுபாடுகள் புரியாமல் எழுத்தாளர்களே குழம்பிப் போகலாம். எது எப்படி மாறினாலும் நமது வாழ்வில் தமிழ் மணம் எப்போதும் கமழ்ந்து கொண்டே இருக்கவேண்டும். கோட் சூட்டிற்குள்ளிருந்தும் ஒரு வேட்டியின் வாசம் வரவேண்டும். ”நான் தமிழன்” என்று சொல்ல ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படும்போது இவை சாத்தியமே. தீட்டப்படாத எந்தக் கூரிய வாளும் காலஓட்டத்தில் வெறும் இரும்புதான். கரும்பாக இருந்தாலும் உபயோகிக்கப்படாமல் கிடந்தால் துரும்புதான். போற்றப்படாத எந்த மொழியும் காலவோட்டத்தில் அழிவுதான். மந்திரமும் கிரகமும் தமிழனின் மண்டையிலிருந்து போகும்வரை சில சமூகப் புரட்சிகள் சாத்தியமல்ல. இந்தத் தொல்லைகளிருந்து விடுபடப்போகும் அடுத்த தலைமுறை மொழிசார்ந்து, இனம் சார்ந்து பேரெழுச்சி கொள்ளும் என்பதில் ஐயமில்லை. உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சிறார்கள் எடுக்கும் இப்படியான தமிழ் விழாக்களே இதற்கு சான்று பகர்கின்றது. சோரம் போவதும் சோர்ந்து போவதும் தமிழன் அப்பப்போ சந்தித்த நிகழ்வுகள்தாம். மாறாக, ஒவ்வொரு தடவையும் அவன் விழித்தெழுந்து, வீறுநடை போட்ட, வரலாறுகள் நிறையவே உண்டு. பணம் என்னும் அளவுகோல்தான் காலம் காலமாக வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கின்றது. ஆனாலும், பண்பாடு எனும் தளத்தில் முகவரியோடு நிற்கும்போது மட்டுமே அது அழகு பெறுகிறது. கொண்டாடப்படவேண்டியவை நம் தற்காலிக வெற்றிகள் மட்டுமல்ல; நம் மூதாதையரின் பொக்கிசங்களுமே.

ஆக்கம்: அ.பகீரதன்

Tuesday, January 14, 2014

தைத்திருநாள் தைக்குதடா முள்ளாய்



அழிந்த அயல்


கிழிந்த ஆடை


மெலிந்த தேகம்


இதயத்தில் குவிந்த சோகங்கள்


 


பொங்க மனமின்றி விம்மி


அழுகிறது ஒருஉறவு அங்கு


 


மாதாந்த கட்டணங்கள்


வீட்டில் நாளாந்த கண்டனங்கள்


மனசில் இறுக்கம்


எண்ணத்தில் சுருக்கம்


 


பொங்க மனமின்றி சும்மா


பொங்கி படைக்கிறது ஒரு உறவு இங்கு


 


கிழிந்த பணநோட்டாய்


ஒட்டிக் கொள்ளத் துடிக்கிறது இரு உறவுகளும்


 


ஆறுமுகம் வீதி ”பசில் வீதி” ஆனதால்


முள்ளிவாய்க்காலில் மூத்தமகன் இறந்ததனால்


களத்திற்கு போனமகளை காணவில்லை என்பதனால்


சின்னதாய் கூட பொங்க மனசில்லை அங்கு பலருக்கு


 


சூரியன் கிழக்கில் எழவில்லை


பகிர்ந்துண்ண உறவில்லை


சக்கரை வாங்க மறந்ததனால்


சீனிப் பொங்கலானது பலர்வீட்டில் இங்கு


 


ரைஸ்குக்கரிலே பொங்கலாகி


குட்டி அறைக்குள்ளே படையலாகி


குளிர்சாதனப் பெட்டியிலே


குடிகொள்ளும் மாதக்கணக்காய் இங்கு


 


பட்டாசு வெடித்தாலும்


பயப்படும் சிறுபிள்ளை


பட்டகஸ்ரம் நினைவில்வந்து


பாடாய்படும் தாய்மனசு அங்கு


 


பெரியதாய் பொங்கியவன் கண்கள்


சிறியதாய் சுருங்கிக் கிடக்கிறது இங்கு


வலிதாய் இருந்த இனமொன்று


வலிதாங்க முடியாமல் தவிக்கிறது அங்கு


 


எண்திசையும் பெரிதாய் பொங்குகிறான் தமிழன்


எண்ணத்தில் சின்னத்தனமாய் அலைகிறான் தமிழன்


ஆணவத்தில் ஆடுகிறான் தமிழன்-அதைச்சொன்னால்


கோபத்தில் கோவணத்தை கிழிக்கிறான்


 


வந்த வழியை மறக்காதே தமிழா


சொந்த மொழியை
இழந்தாய் எனும் பழியை
ஏற்காதே தமிழா


 


வாழ்க தமிழ்! வளரட்டும் தமிழர் திருநாள்


 


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.


 


நன்றி


நட்புடன்,


அ.பகீரதன்

Saturday, January 11, 2014

புதுக்கவிதை என்றால் என்ன?


(பிரபல கவிஞர் மு.மேத்தாவின் கவிதை இது)

இலக்கணச் செங்கோல்

யாப்புச் சிம்மாசனம்

எதுகைப் பல்லக்கு

மோனைத் தேர்கள்

தனிமொழிச் சேனை

பண்டித பவனி

இவை எதுவும்

இல்லாத-

 

கருத்துக்கள் தம்மைத்

தாமே ஆளக்

கற்றுக் கொண்ட

 

புதிய

மக்களாட்சி முறையே

புதுக்கவிதை!

Thursday, January 2, 2014

பிறக்கட்டும் புதுவருடம்; பறக்கட்டும் உன் சிறகுகள்


நாலுதடி ஏறிவிட்டு

ஏணி முடிந்ததாய் எண்ணாதே!

ஏறு மேலே; இன்னும் மேலே ஏறு!

ஏணியில் இன்னும் இடமுண்டு; ஏறு!

 

ஏழுபடி ஏறிவிட்டு

கோபுரத்தை குறைவாய் எண்ணாதே

ஏறு மேலே; இன்னும் மேலே ஏறு!

கலசம் கையில் கிடைக்கும்வரை; ஏறு!

 

தொட்டதெல்லாம் துலங்கினால்

அது உன் துரதிஸ்டம்

தூக்கியெறியப்படுவாய் ஒருநாள்

அது உனக்கு பெருநஸ்டம்

 

ஏறடா ஏறு!  இதுநல்ல சமயம்

இலகுவாய் எட்டலாம் இமயம்

இஸ்டப்பட்டால் எல்லாமே சுலபம்

நஸ்டப்பட்டாலும் அதுநல் அனுபவம்

 

முன்னேறடா  ஒருதிக்கில்

அமரலாம் பல்லக்கில்

ஒழுகடா நல் ஒழுக்கத்தில்

ஓடுவாய் ஒருநாள் ஒலிம்பிக்கில்

 

ஏறடா எவரெஸ்ட்

அதுவரை நெவெர்றெஸ்ற்

அலுக்காமல் ஆற்று யுவபெஸ்ட்

திறமையை  வளர்த்திடு  இற்மஸ்ட்

 

அனைவருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

நன்றியுடன்,

அ.பகீரதன்

Sunday, December 15, 2013

வருவாரா? வரமாட்டாரா?


 

 

வரன் வருவார் வரன் வருவாரென

வாடிக்கிடக்கும் ஏழைப் பெண்டிரைப்போல்

கரன் வருவார் கரன் வருவாரென

தேடிக்களைத்த கோழைத் தம்பியரே நீரெழுவீர்

 

விலை விழும் விலை விழுமென

வீடு வாங்காமல்விட்ட பாவியரைப்போல்

தலை வரும் தலை வருமென

தவம்கிடக்கும் தம்பியரே நீரெழுவீர்

 

நிலை வரும் நல்நிலை வருமென

ஓயாமல் உழைக்கும் நம்கைபோல்

தலை வரும் தலை வருமென

காயாமல் தம்பியரே நீரெழுவீர்

 

எலி வரும் எலி வருமென

இருட்டறையில் பதுங்கும் பூனைபோல்

புலி வரும் புலி வருமென

பட்டறையில் தூங்கும் தம்பியரே நீரெழுவீர்

 

இருக்கிறார் அவர் இருக்கிறாரென

காசையிறைக்கும் இறைபக்தனைப்போல்

வருவார் அவர் வருவாரென

நாளைக்கழிக்கும் தம்பியரே நீரெழுவீர்

 

வருவாய்க்காய் சிலர் வருவாரென்பார்

பெருமைக்காய் சிலர் வருவாரென்பார்

தலைமைக்காய் சிலர் வருவாரென்பார்

விசுவாசத்தால் சிலர் வருவாரென்பார்

நற்பாசத்தால் சிலர் வருவாரென்பார்

 

ஆயுதம் கொண்டு பறைசாற்றினான் அண்ணன்

அறிவாயுதம் கொண்டு முரசாற்றடா தம்பி

வேலாயுதம் கொண்டு வீழ்த்தினான் எதிரியை

நாலாபுறமும் சென்று எழுப்படா தம்பி எழுச்சியை

 

நன்றி,

அ.பகீரதன்

Thursday, December 5, 2013

நெல்சனே மீண்டும் பிறந்துவா தமிழனுக்காய்!


கருப்புச் சிங்கமொன்று-இன்று

காரிருளில் ஒளியுதடா

காலமெனும் படகேறி

கைகாட்டி மறையுதடா

 

நெல்சனெனும் பெயர்கேட்டால்

கல்மனசும் கரையுமப்பா

வெள்ளையனின் பள்ளியிலே-அது

அவன்பெற்ற பெயரப்பா

 

சட்டம் படித்ததானால்-வெள்ளையனின்

சட்டையை பிடித்தானப்பா

சட்டையைப் பிடித்ததனால்-சிறைச்

சட்டம்தான் கிடைத்ததப்பா

 

கருங்காலித் தடியொன்று

பெருங்காலம் சிறைகிடந்து

பெருங்குடல் சுருங்காமல்

வெளியாகி ஒளிதந்த கதையப்பா

 

பெருங்காலம் சிறைகிடந்தும்

அவனுடலுக்கிப் போகாமல்

அதுதாங்க முடியாமல்

அறைக்கம்பி தானுக்கிப்போன கதையப்பா

 

குருவி குளிக்கும் குளமென்று

காகத்திற்கு தடைவிதித்த கதையப்பா-அங்கு

சிறுஅறிவாளிச் சமூகமொன்று

பெருவாரிச்சனத்தை இரையாக்கிக்கொண்ட கதையப்பா

 

தடைவிதித்த அரசெல்லாம் பின்னாளில்

அவருக்கு குடைபிடித்த கதையப்பா

”ராஷ்கல்” என்ற நாவெல்லாம் பின்னாளில்

நோபல் பரிசுகொடுத்த கதையப்பா

 

சொல்லச் சொல்ல இனிக்குமடா

அவன் கதை-ஆனாலும்

நீளமாய்ப் போனால்

கவி உனக்கு கசக்குமடாதம்பி 

 

நெல்சனே மீண்டும் பிறந்துவா தமிழனுக்காய்!
 

நன்றி