(முத்தமிழால் எனக்கொரு விருது
தமிழ்மொழியால் வந்த விருந்து)
என் மொழிக்காகவும் பண்பாட்டிற்காகவும் நான் செய்தவை மிகச்சொற்பம்.
நாடக நடிகனாக, இயக்குனராக, தரமான பேச்சாளனாக, சமூக நலன் விரும்பியாக நான் கலையோடு என்னை
இணைத்துக் கொண்டாலும், தமிழ் சமூகத்திற்கு நான் செய்தவை மிகச்சொற்பம். செய்ய வேண்டியவை
மிக அதிகம். காலச் சூறாவளியில் வேரோடு புடுங்கி வீசப்பட்ட மரமாக நாம் புலம்பெயர்ந்து
கிடக்கிறோம்; ஆனாலும் அலையால் மீண்டும் மீண்டும் தூக்கி கரைக்கு வீசப்படும் சருகுபோல
நம் கலை ஆர்வங்களும் தூக்கி வீசப்படுகின்றன. ஒரு தேசாந்திரியைப்போல என் கலைகளும் மனதளவில்
அலைந்து திரிகின்றன. இறக்கி வைக்க இடம் தேடி அவை அவதிப்படுகின்றன. ஆனாலும் தன்னை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்தும் குரைத்துக்
கொண்டேயிருக்கும் நாயைப்போல கலைஞர்கள் நாம் தொடர்ந்தும் குரைத்துக்கொண்டே இருக்கலாம்;
குரைத்துக்கொண்டே இறக்கலாம். அறுவடையை எதிர்பார்க்காமல் விதைத்துக்கொண்டே இருக்கலாம்.
கொஞ்சம் பின்னோக்கி பார்க்கிறேன். பல மேடைகள் ஞாபகம் வருகிறது.
15 வயதில் என் பக்கத்து கிராமத்து சிவராத்திரி விழாவில் கதாநாயகியாக பயிற்றுவிக்கப்பட்ட
ஆண் இடையில் விட்டோட, அந்த வாய்ப்பு கிராமத்து எல்லைதாண்டி எனக்கு வந்தது. அது 3 மணித்தியாலய
பெருநாடகம். அந்த பாராட்டுக்கள் என்னில் இப்போதும் அப்படியே புதைந்து கிடக்கின்றன.
கண்ணகியாக, அரிச்சந்திரனாக……..எல்லா நினைவுகளும் பசுமையாக….கவியரங்கள் தொடங்கி………
இந்த நேரத்தில் என் கிராமத்தையும், என்மீது காழ்ப்புணர்ச்சி
கொள்ளாமல், சக கலைஞன் மீது அவதூறு கொள்ளாமல் என்னை மேடைகளிற்கு தள்ளி விடுகின்ற நண்பர்களையும்
நான் நன்றியுணர்வுகளோடு நினைத்துப் பார்க்கிறேன். என் ஆளுமை மீது நம்பிக்கை கொண்டு
எனக்கு கோடு போடுகின்ற, என்னை விமர்சிக்கின்ற எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
நீங்கள் தந்த இந்த பட்டத்தை காப்பாற்றக்கூடிய அளவில் எனது பேச்சுலகமும் எழுத்துலகமும்
ஆமையைப்போல மெல்ல நகர்ந்து இலக்கினை அடையும் என நம்புகிறேன்.