A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, September 26, 2014

அணையாத தீபம்.


 

 

சிங்கத்திடம் சிக்காத எங்கள் தங்கம்

வங்கத்தின் நச்சுவாயில் வீழ்ந்ததுவே

கட்டுவனில் குண்டுபட்டும் குலையா அவனுடல்

சொட்டுத்தண்ணி அருந்தாமல் துடித்து வீழ்ந்ததுவே

 

ஊர்கூடித் தேரிழுத்த வீதியிலே

ஊர்கூடி ஓலமிட வந்ததுவே

கந்தனை சுற்றிவந்த கூட்டமெல்லாம்

சிந்தனை மறந்து மைந்தனைச் சுற்றி நின்றதல்லோ

 

உடலுருகிச் சுருங்கினாலும் உள்ளம் உறுதிபெற

கடல்பெருகிக் கந்தனடி சேர்ந்ததுபோல்

அலை அலையாய் அறந்தமிழர் அங்குகூடி

இளந்தமிழன் இன்னுயிரை இறைகாக்க வேண்டினரே

 

அடுத்தகட்டம் என்னவென்று அனைவரும் விழித்தபோது

அண்ணல்வழியே துணைவழியென்று விழித்தவனே

வஞ்சகக் கிருஸ்ணனின் வாரிசுகள் வஞ்சிப்பார் என்றறிந்தும்

துஞ்சாமல் களம்புகுந்து அண்டைய நாட்டின் முகத்திரையை கிழித்தவனே

 

உண்ணாமல் நீகிடந்த வீதியினை

எண்ணாமல் இருக்க முடியலயே

அண்ணா அண்ணாவென அழுத முகங்கள் எல்லாம்

கண்முன்னால் வந்துநிற்க நெஞ்சுகலங்கிறதே

 

பார்த்தீபா! பார்த்தீபா

பார்த்தாயா? எங்களினம் படும்பாட்டை

என்ன சொல்ல? என்ன சொல்ல?

என்னினத்தின் நிலைதனை என்னசொல்ல?

 

புத்தி கெட்ட பிக்குவெல்லாம்

புத்தர் பெயர்சொல்லி பிழைக்கிறான்

கத்தியும் கள்ளப் புத்தியுமாய்

வட கிழக்கை கிழிக்கிறான்

 

கொப்பிழந்த குரங்குபோல

தமிழன் தாவித்தாவி தவிக்கிறான்

தனதுவளம் தமிழர்நிலம் மறந்துபோய்

தார்வீதி கண்டு மலைக்கிறான்

 

என்ன சொல்ல? என்ன சொல்ல?

என்னினத்தின் ஈனத்தினை என்னசொல்ல

நடந்ததெல்லாம் சொல்ல நாலைந்து பக்கம்வேணும்

சொல்லச்சொல்ல நம்மானம்தான் கெட்டுப்போகும்

 

தியாகங்களை மறக்காதே தமிழா!!

 

நன்றி.

அ.பகீரதன்

 

Tuesday, September 23, 2014

தமிழரின் இன்றைய நிலை


 

கண்கசியக் கனிகிறது

ஓர் கவிதை

மெய்கலங்கித் தலைப்பிட்டேன்

தமிழரின் இன்றைய நிலை

 

பண்டைய தமிழன்

பகலவனாய் ஒளிவீசிய தமிழன்

இன்றைய தமிழனோ

இருளில் மெழுகுவர்த்தியாய் சுடர்விடும் தமிழன்

 

விரும்பி விரும்பி விருந்தோம்பி

மகிழ்ந்த தமிழன்

மருந்துக்கும் உணவின்றி

மடிந்துவீழ்ந்த நிலையுண்டு

 

போராடிப் போராடி ஊட்டிவளர்த்த

பண்பாடு எனும் பெருவிருட்சம்

வேராடி வேராடி வீழ்ந்துபோகும்

பெருஞ்சோக நிலையுமுண்டு

 

கிளிபோல செல்லக்கிளிபோல

சீராட்டிப் பாராட்டிய செந்தமிழ்

சீரிழந்து சிறப்பிழந்து செம்மொழியின் வலுவிழந்து

கிளிப்பிள்ளைப்போலக் கொச்சையாய் பேசப்படும் நிலையுமுண்டு

 

சர்வதேச தலையீட்டால்

சர்வநாசம் ஆனதடா தமிழர் சேனை

சர்வநாசம் என்றெண்ணி விசுவாசம் நீயிழந்தால்

என்னாகும் நாளைய தமிழர்நிலை

 

பூம்புகார்த் தமிழனை

நம்பினோர் பலருண்டு

பூச்சாண்டித் தமிழனை

நம்ப இனியாருண்டு

 

என்நாவில் தமிழிருந்து என்ன பயன்

ஐநாவில் போய் உரையாற்ற ஒருதமிழன் நமக்கில்லை

மைனா படம்பார்த்து விட்டு

மணிக்கணக்காய் அழுகிறான் பெரியதம்பி

வைனா வொட்காவா அடுக்கிவைத்து

அழுதழுது குடிக்கிறான் சின்னத்தம்பி

 

ஒருதம்பி இல்லாத காரணத்தால்

சின்னத்தம்பி பெரியதம்பி சீரழிந்து போகிறார்

எவரைநம்பி என்ன பயன் என்றோ

தம்கடமை செய்ய தயங்குகிறார்.

 

கண்ணகியின் கற்புவேண்டாம் கம்பனின் கவிவேண்டாம்

வள்ளுவனின் வாக்கு வேண்டாம் சோழரின் வீரம் வேண்டாம்

பொல்லாத தமிழர் என்ற கொடும்நாமம் நமக்கு வேண்டாம்

வல்லவராய் நல்லவராய் வெல்லும்வரை நாமிருப்போம்

 

தமிழரின் இன்றையநிலை

அதைவிட மோசம் யூதரின் அன்றையநிலை

யூதரின் இன்றைய நிலை

அதுவே ஆகட்டும் தமிழரின் நாளையநிலை

 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்மொழி!!
நன்றி
அ.பகீரதன்

ஆடிக் கலவரம்


ஆடிக் கலவரம்-கொஞ்சம்

ஆடிப் போனான் தமிழன்

தாயகம் நோக்கி

ஓடிப் போனான் தமிழன்

 

தமிழர் நிலமே தம்தாயகம்-என

தமிழன் தன்னிலை உணர்ந்தான்

தாயக விடுதலைப் போரில்

தன்பணி உணர்ந்தான்

 

அரசியல்வாதியும் ஆயுதப்போரின்

அவசியம் உணர்ந்தான் –பின்பு அதை

அரசியலாக்க முனைந்தான்

அநியாயமாய் தானும் அழிந்தான்

 

காணிக்கு சண்டை பிடித்தவன்

தன்வாரிசை விடுதலைத் தீக்கு

காணிக்கை செய்தான்

ஆயுதக் கைகளிற்கு அள்ளிக் கொடுத்தான்

 

விடுதலை என்பதாய்-நம்பிள்ளைகள்

ஆசைகளிலிருந்து தம்மை

விடுதலை செய்தார்

ஆருயிர் நீர்த்து அரும்பணி செய்தார்

 

சுவடு தெரியாமல் நடக்கும்-நம்தங்கைகள்

கவடு கிழித்து அங்கே

களப்பணி செய்தார்-நமக்காய்

களப்பலி ஆனார்

 

ஆடிக் கலவரம்-இன்றும்

அதே நிலவரம்

தேடிக் கொன்றனர் அன்று

வதைத்து கொல்கின்றார் இன்று

 

விடுதலை வேண்டுவார் பலர்

விடுகதையை என்பார் சிலர்

வீண்தர்க்கம் புரிவார் தன்னிலை யறியார்-

விடுதலை ஒன்றே நமக்கு நன்னிலை என யறியார்

 

இந்திய நடிகைகளை இறக்கியது போதும்-கொஞ்சம்

சிந்தித்து நடவடா தம்பி

சந்தி சிரிக்குது உன் சங்கதி அறிந்து-உன்

சந்ததிக்காக சிந்தித்து நடவடா தம்பி

 

வாழும் காலம் கொஞ்சம்-அதில்

நாளும் பொழுதும் துன்பம்

நல்லது செய்ய வாய்ப்பு வந்தால்

நல்லது என்று இன்றே செய்து முடி

 

ஒருதலைக்காதல் போல் உன்விடுதலை

ஏற்றுக்கொள்ளும்வரை பின் தொடர் தம்பி

நல்லது செய்வார் யாரென அறிந்து-அவரை ஏற்றுக்கொள் தம்பி

காற்றுவீசும் அதுவரை பொறுமை கொள் தம்பி!

 

நட்புடன்,

அ.பகீரதன்