A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Tuesday, November 27, 2012

இயங்க மறுக்காதா எங்கள் இதயம்



இன்று,

கார்முகிலைக் காணாமலே

கானமயில் தோகை விரித்து ஆடும்

விடியமுன்பே சாமத்து சேவல்கள்

மாவீரா எனக் கூவும்.

 

இன்று,

பிடிபட்ட மானை கைவிட்ட புலி

வேட்டையாட வந்தவனுக்கு

தன்னை விருந்தாக்கி விழும்

 

இன்று,

கோயில்மணி  ஓங்கி  அடித்தும்

கோபுரத்தில் இருந்த பறவைகள்

எழுந்து பறவாமல் அச்சமின்றி  அங்கிருக்கும்

 

இன்று,

தேவியரோ கூந்தல் முடித்திழுத்து

முற்றத்தில் கோலமிட்டு

வீரருக்காய் தீபமேற்றி வணங்குவர்

 

இன்று,

பூசாரி தமிழில் மந்திரம் சொல்லுவான்

இஸ்லாமியன் பள்ளிக்கு ஆறுதடவை செல்வான்

தேவாலயத்தில் மெழுகுவர்த்திகள் நீண்டெரியும்

 

இன்று

அரசியல்வாதி இன்றாவது

நல்லது செய்ய எண்ணுவான்

காமடியனும் கண்ணீர் வடிப்பான்

கொடுங்கோலனும் பூமரங்களிற்கு தண்ணீர் அடிப்பான்

 

இன்று,

கவிஞன் கண்ணீரை மையாக்கி

கற்பனையின்றி கவி வடிப்பான்

எழுத்தாளன் வரலாற்றை எழுதியும் அழித்தும்

அழித்தும் எழுதியும் தடுமாறுவான்

 

இன்று,

தாயொருத்தி

கோப்பாய் மாவீரர் மயானத்தில்

இடிந்த கல்லறையிடையே இடிந்து போய் கிடப்பாள்

 

இன்று,

ஏதிலியாய் இறந்துபோன

கிருஷாந்தியும் தர்ஷினியும்

வீரத்தாயின் கருவறையில் கருத்தரிப்பர்

 

இன்று,

இரக்கமற்ற யமனுக்கு

ஆயிரம் பத்தினிகள் சாபமிடுவர்

தேவர்கள் எதிராய் வழக்குத் தொடுப்பர்

 

இன்று

ஐநாவில் அமைதிக்காக

போலிக் கூட்டம் வைப்பார்கள்

முள்ளிவாய்க்காலில் மரங்கள்

மீண்டும் தளிர்க்கத் தொடங்கும்

 

வீடுகளில் எல்லாம்  இன்று விளக்கானீர்

விடுதலைக்கு  ஒளியேற்றியதால்

விரும்பி வணங்குகிறோம்  உமை

 

உங்கள் நேரத்திற்கு  நன்றி

அன்புடன்,  .பகீரதன்

Monday, November 26, 2012

அதிசயத் தலைவன் எங்கள் பிரபாகரன்


தங்கத்தால் உடல் அமைஞ்சு

தாமரையால் மனசு செஞ்சு

தமிழ்த்தாயின் குருதி பாய்ச்சி

தமிழருக்காய் ஓர் வரவு

 

அடிமை வலி பொறுத்திருந்த

அருமைத்தாய் பார்வதியோ

இடுப்பு வலி பொறுக்காமல்

ஈன்றெடுத்தாள் ஒரு சேகுவரா

 

முதலிரவு கூடுகையில்-ஆத்தா

முருகனின் சித்திரத்தை நினைத்தாளோ?

முழுகாமல் இருக்கையிலே-ஆத்தா

மூவேந்தர் சரித்திரத்தை படித்தாளோ?

 

தொப்புள் கொடி யறுத்து-தாதி

தமிழ்க் கொடியை இணைத்தாளோ?

தலைகீழாய் பிடிக்கையிலே-தாதி

தமிழ்க் கீதம் இசைத்தாளோ?

 

ஆயுதமின்றி இருந்ததன் விளைவே

ஆயிரம் இழப்பென உணர்ந்தான்

கைமோதிரம் விற்று காசினைப் பெற்று

கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றான்

 

பட்டினியால் பச்சை மரவள்ளி உண்டான்-போர்

வித்தைகள் கற்று விஷக்கிருமிகள் கொன்றான்

எத்துணையுமின்றி அத்தனை பாடும் பட்டான்

தம்பியாய் இறங்கி அண்ணனாய் உயர்ந்தான்

 

சீலனாய் மில்லராய் திலீபனாய் சூசையாய்

சங்கராய் மாலதியாய் புதுவையாய்

அத்தனை துறையிலும் மிளிர்ந்தான்

ஆடுகளத்தில் தானும் புலியாய் நின்றான்

 

துரோகங்கள் துயரங்கள் தோல்விகள்

இடராக தொடராக வந்தும்

தியாகங்கள் மாயங்கள் வியூகங்கள்

வகுத்து தமிழ் மானத்தைக் காத்தான்

 

முடிவில்லாப் போரை முடிக்க முனைந்து

முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்தான்

மூவேழு நாட்டினை ஒன்றாக எதிர்த்து

முப்படையின் துணையோடு தனியாக நின்றான்

 

காவியர் நாடும் காந்தீய நாடும்

காவியத் தலைவனை வஞ்சகமாய் வீழ்த்த  

தன்னுடன் தந்தையும் தனயனுமாய்-மூன்று

தலைமுறையோடு களத்தில் நின்றான்

 

களத்தில் வீழ்ந்து புலத்தில் எழுந்தான்

காலத்திற்கு ஏற்ப புதுக்களத்தை வரைந்தான்

ஈழத்தின் தேவையை உலகத்தில் ஆழமாய் பதித்தான்

உலகத் தமிழரின் தலைவனாய் வரலாறு படைத்தான்

 

 
உங்கள் நேரத்திற்கு நன்றி.

அன்புடன், .பகீரதன்

 

Sunday, November 25, 2012

களமும் காதலும்


அம்மி மிதிக்கும் வயதில்

விம்மி வெடித்தீர்

கும்மி அடிக்கும் பருவத்தில்

குப்பி கடித்தீர்

 

கல்வி கற்கும் வயதில்

சொல்லி அடித்தீர்

செல்வி கலையும் பருவத்தில்

வேள்வி வளர்த்தீர்

 

முத்தங்கள் தொடுக்கும் வயதில்

யுத்தங்கள் தொடுத்தீர்

அர்த்தங்கள் புரியும் பருவத்தில்

அனர்த்தங்கள் தடுத்தீர்

 

பெண்ணைக் காதலிப்பதே

பேருவகை என அவன் நினைக்க

மண்ணைக் காதலிக்கும்

மகத்துவத்தை போதித்தீர்

 

இடுப்புவலி அடுப்புவழி தொடரும்பழி

அதுவே பெண்ணென அவன் நினைக்க

கரும்புலி கருணைமொழி காக்கும்விழி

அதுவே பெண்ணென நிரூபித்தீர்

 

அடிமைப்பூ அழுமூஞ்சி அருளிக்கொட்டை

அதுவே பெண்ணென அவன் நினைக்க

விடுதலைப்புலி உரிமைக்குரல் சயனற்வில்லை

அதுவே பெண்ணென சாதித்தீர்

 

வெள்ளியும் செவ்வாயும்

விரதமிருந்த பெண்டீர்-எமக்காய்

கொள்ளியும் கொலையும் எடுத்தீரே

எண்ணியும் வணங்கியும் உமைவாழ்த்துறோம்

 

ஈழத்து நிலமெல்லாம் நீ

பூவாய் மலரும்

தாயகத்து தாயிடத்தே நீ

சேயாய் வளரும்

 

உங்கள் நேரத்திற்கு  நன்றி

அன்புடன்,  .பகீரதன்

Thursday, November 22, 2012

கல்லறைகூட உமக்கில்லை


விருந்துண்ணும் வயதினிலே-சயனற்

மருந்துண்டு வீழ்ந்தவரே

மானமுள்ள தமிழர் நீர்

போற்றுகிறோம் நாமுமை

 

தொல்லை வேணாம் என்று

தொலைதேசம் நாம் ஓட

எல்லையில் நின்று வீழ்ந்தீரே

போற்றுகிறோம் நாமுமை

 

வெட்டுப்புள்ளி கண்டும் நாம்

வெட்கமற்று வந்தோமிங்கே

வெட்டும் புலியாய் பாய்ந்தவரே

போற்றுகிறோம் நாமுமை

 

குடியேற்றக் கொடுமை கண்டும்-நாம்

குடியேறி இங்கே குதூகலிக்க

கொடுமையென்று மறுதலித்து எழுந்தவரே

போற்றுகிறோம் நாமுமை

 

தேசப் பற்றாளராய்-நாமிங்கே

கோஷமிட்டு வேசமிட

பாசப் பற்றறுத்து வீழ்ந்தீரே

போற்றுகிறோம் நாமுமை

 

கட்டிலுண்டு தொட்டிலுண்டு –நமக்கு

கல்வியுடன் கறன்சி நோட்டுமுண்டு

கல்லறை கூட உமக்கில்லை

போற்றுகிறோம் நாமுமை

 

கல்லறைதான் உமக்கில்லை-நல்லோர்

நெஞ்சறையில் நீக்கமற நிறைந்திருப்பீர்

சில்லறைநாம் செய்பிழையை பொறுத்தருளும்

போற்றுகிறோம் நாமுமை

 

உங்கள் நேரத்திற்கு நன்றி

அன்புடன், .பகீரதன்

Wednesday, November 21, 2012

மாவீரர் கனவு



விடுமுறை ஏதும் எடுக்காமல்

விடுதலை விதையை விதைத்தீரே

விடுதலையின் பொருள் இன்று

விடுகதையாய் ஆனதுவோ?

 

தலைமுறை ஒன்று தடுமாற

விடுமுறைக்கு என்று போனீரோ?

மறுமுறையும் வந்துவிடீர்-இல்லை

கருவறையில் வந்து தங்கிவிடீர்

 

இலைமறை யானதோ தமிழர்மானம்

தமிழ்மறை யாகுமோ நம்மவர்வீரம்

தனிச்சிறை கண்டீர் தமிழர்அவலம்

தலைமுறை வெல்லும் தமிழீழம்

 

அடக்குமுறை ஆனதோ அகிம்சாநெறி

அரைகுறை தீர்வுடன்நம் வம்சாவழி

வளர்பிறை ஆகுமோ உந்தன்வழி-நீ

தேய்பிறை யானது நாம்செய்தபழி

 

வரைமுறை தாண்டுது சிங்களம்

வன்முறை ஆகும்அது நம்நிலம்

வாளுறை தவிர்த்து நடைபோடு

சூளுரை செய்து விடைதேடு

 

தமிழ்கறை ஆனது துரோகம்

தரக்குறை வானது நம்தேசம்

அக்கறை கொள்ளடா நாளும்

எத்துறை யாகினும் வெல்லலாம்

 

உங்கள் நேரத்திற்கு நன்றி

அன்புடன், அ.பகீரதன்