விருந்துண்ணும் வயதினிலே-சயனற்
மருந்துண்டு வீழ்ந்தவரே
மானமுள்ள தமிழர் நீர்
போற்றுகிறோம் நாமுமை
தொல்லை வேணாம் என்று
தொலைதேசம் நாம் ஓட
எல்லையில் நின்று வீழ்ந்தீரே
போற்றுகிறோம் நாமுமை
வெட்டுப்புள்ளி கண்டும்
நாம்
வெட்கமற்று வந்தோமிங்கே
வெட்டும் புலியாய் பாய்ந்தவரே
போற்றுகிறோம் நாமுமை
குடியேற்றக் கொடுமை கண்டும்-நாம்
குடியேறி இங்கே குதூகலிக்க
கொடுமையென்று மறுதலித்து
எழுந்தவரே
போற்றுகிறோம் நாமுமை
தேசப் பற்றாளராய்-நாமிங்கே
கோஷமிட்டு வேசமிட
பாசப் பற்றறுத்து வீழ்ந்தீரே
போற்றுகிறோம் நாமுமை
கட்டிலுண்டு தொட்டிலுண்டு
–நமக்கு
கல்வியுடன் கறன்சி நோட்டுமுண்டு
கல்லறை கூட உமக்கில்லை
போற்றுகிறோம் நாமுமை
கல்லறைதான் உமக்கில்லை-நல்லோர்
நெஞ்சறையில் நீக்கமற நிறைந்திருப்பீர்
சில்லறைநாம் செய்பிழையை
பொறுத்தருளும்
போற்றுகிறோம் நாமுமை
உங்கள் நேரத்திற்கு நன்றி
அன்புடன், அ.பகீரதன்
No comments:
Post a Comment