A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, December 15, 2013

வருவாரா? வரமாட்டாரா?


 

 

வரன் வருவார் வரன் வருவாரென

வாடிக்கிடக்கும் ஏழைப் பெண்டிரைப்போல்

கரன் வருவார் கரன் வருவாரென

தேடிக்களைத்த கோழைத் தம்பியரே நீரெழுவீர்

 

விலை விழும் விலை விழுமென

வீடு வாங்காமல்விட்ட பாவியரைப்போல்

தலை வரும் தலை வருமென

தவம்கிடக்கும் தம்பியரே நீரெழுவீர்

 

நிலை வரும் நல்நிலை வருமென

ஓயாமல் உழைக்கும் நம்கைபோல்

தலை வரும் தலை வருமென

காயாமல் தம்பியரே நீரெழுவீர்

 

எலி வரும் எலி வருமென

இருட்டறையில் பதுங்கும் பூனைபோல்

புலி வரும் புலி வருமென

பட்டறையில் தூங்கும் தம்பியரே நீரெழுவீர்

 

இருக்கிறார் அவர் இருக்கிறாரென

காசையிறைக்கும் இறைபக்தனைப்போல்

வருவார் அவர் வருவாரென

நாளைக்கழிக்கும் தம்பியரே நீரெழுவீர்

 

வருவாய்க்காய் சிலர் வருவாரென்பார்

பெருமைக்காய் சிலர் வருவாரென்பார்

தலைமைக்காய் சிலர் வருவாரென்பார்

விசுவாசத்தால் சிலர் வருவாரென்பார்

நற்பாசத்தால் சிலர் வருவாரென்பார்

 

ஆயுதம் கொண்டு பறைசாற்றினான் அண்ணன்

அறிவாயுதம் கொண்டு முரசாற்றடா தம்பி

வேலாயுதம் கொண்டு வீழ்த்தினான் எதிரியை

நாலாபுறமும் சென்று எழுப்படா தம்பி எழுச்சியை

 

நன்றி,

அ.பகீரதன்

Thursday, December 5, 2013

நெல்சனே மீண்டும் பிறந்துவா தமிழனுக்காய்!


கருப்புச் சிங்கமொன்று-இன்று

காரிருளில் ஒளியுதடா

காலமெனும் படகேறி

கைகாட்டி மறையுதடா

 

நெல்சனெனும் பெயர்கேட்டால்

கல்மனசும் கரையுமப்பா

வெள்ளையனின் பள்ளியிலே-அது

அவன்பெற்ற பெயரப்பா

 

சட்டம் படித்ததானால்-வெள்ளையனின்

சட்டையை பிடித்தானப்பா

சட்டையைப் பிடித்ததனால்-சிறைச்

சட்டம்தான் கிடைத்ததப்பா

 

கருங்காலித் தடியொன்று

பெருங்காலம் சிறைகிடந்து

பெருங்குடல் சுருங்காமல்

வெளியாகி ஒளிதந்த கதையப்பா

 

பெருங்காலம் சிறைகிடந்தும்

அவனுடலுக்கிப் போகாமல்

அதுதாங்க முடியாமல்

அறைக்கம்பி தானுக்கிப்போன கதையப்பா

 

குருவி குளிக்கும் குளமென்று

காகத்திற்கு தடைவிதித்த கதையப்பா-அங்கு

சிறுஅறிவாளிச் சமூகமொன்று

பெருவாரிச்சனத்தை இரையாக்கிக்கொண்ட கதையப்பா

 

தடைவிதித்த அரசெல்லாம் பின்னாளில்

அவருக்கு குடைபிடித்த கதையப்பா

”ராஷ்கல்” என்ற நாவெல்லாம் பின்னாளில்

நோபல் பரிசுகொடுத்த கதையப்பா

 

சொல்லச் சொல்ல இனிக்குமடா

அவன் கதை-ஆனாலும்

நீளமாய்ப் போனால்

கவி உனக்கு கசக்குமடாதம்பி 

 

நெல்சனே மீண்டும் பிறந்துவா தமிழனுக்காய்!
 

நன்றி

Monday, November 25, 2013

புலி




சிங்கத்திற்கு வாழ்க்கைப்பட

புலிக்கு என்ன தலையெழுத்து?

 

புலிக்கு

பலதடவை குறிவைத்தார்கள்

தப்பிக்கொண்டது

இந்தத் தடவை பொறிவைத்ததால்

சிக்கிக் கொண்டதோ?

 

புலி வாலாட்டுவதில்லை

இப்போது புலி இல்லை அதனால்

தெருநாய்களும்  வாலாட்டுகின்றன

சொறிநாய்கள் கால்மேல் கால்போட்டு காலாட்டுகின்றன

 

எலி மருந்துக்கெல்லாம்

புலி சிக்குவதில்லை

புலிக்குத் தெரியும் அதன் இலக்கு

 

அன்று

சிலருக்கு புலியை பிடிக்கவில்லை-ஏனென்றால்

புலியின் மீது ஏறி சவாரி செய்ய முடியாது என்பதால்

 

இன்றும்

சிலருக்கு புலியை  பிடிக்கவில்லை

புலி இனி சரிவராது என்பதாலோ

 

மேனகையை அனுப்பியும்

புலியை வீழ்த்தமுடியவில்லை

மேதகுகள் சேர்ந்து வஞ்சகம் தீர்த்துவிட்டார்கள்

 

வேடன் மாறுவேடத்தில் வருவான் என்று

புலிக்குத் தெரியும்

வேடன் நவீன துப்பாக்கியோடு வருவானென்று

அதுக்கு எப்படித் தெரியும்

 

புத்தி மான்கள் குதூகலமாய்

அரியாசனம் ஏறுகின்றன

சிங்கத்திற்கு இரையாகப் போவது தெரியாமல்

 

வடகாட்டில் குரங்குகள் பட்டாசு கொளுத்துகின்றன

சிம்மாசனம் கிடைத்துவிட்டதாம்

 

புலியை  பிடித்தவர்களுக்கு- இப்போதும்

புலியைப்  பிடிக்கிறது

புலிக்கு  வால்பிடித்தவர்களிற்கு மட்டும்

இப்போ கிலி பிடித்திருக்கிறது

 

நன்றி,

அ.பகீரதன்

 

Sunday, November 24, 2013

யார் இந்த பொன்ராசா?


பொன்கொடுத்த பொன்ராசா

இப்போதும் அழுகிறான்

மண்போனது கவலையில்லலையாம்

தன்பவுண்  கேட்கிறான்

 

புலி வீழ்ந்த இடத்தில்

புல் முளைத்துவிட்டதாம்

பூங்கா கட்ட காசு கேட்கிறான்

மாவீரர்களுக்கு பூமாலை கட்டித் தருவானாம்

 

ஐக்கிய இலங்கைக்குள்

ஆயிரம் தீர்வாம்-கை

நக்கிய படியேமேலே வரலாமாம்

ஈழம் என்பது கோலமாம்-இது

கனகாலமாய் அலங்கோலமாம்

 

பொன்ராசாவுக்கு

ஃபெடரல் சிஸ்ரம் பிடிபடவில்லை

கேட்டால் பின்நாளில் பார்க்கலாம் என்கிறான்

ஏ9 வீதியைப் பார்த்து  ஏமாந்து போய்விட்டான் போலும்

 

ஈழம் எனப்படுவது எம்தேசமல்ல

எங்கள் ஜீவன் என்றேன்

ஜீவன் உயிரைவிட மேலென்றேன்

 

பொன்ராசா,

ஒற்றை ஆட்சி ஒன்றுதான்

எங்களுக்கு மீட்சியாம்-அதற்கு

எஞ்சிய சனம்தான் சாட்சியாம்

கஞ்சியாவது குடித்தால் போதுமாம்

 

அப்படியென்றால்

ஈழம் என்ன எட்டாப்பழமா? என்றேன்

ஈழம் அதெல்லாம் எட்டப்பன் இருக்கும்வரை

கிட்டாது என்றான் அவன்

 

மீண்டும்,

ஈழம் எனப்படுவது எம்தேசமல்ல

எங்கள் ஜீவன் என்றேன்

ஜீவன் உயிரைவிட மேலென்றேன்

 

பொன்ராசா சிரித்தபடி சொன்னான்,

ஈழம் எனப்படுவது நமது சாபம்

இந்தியா இருக்கும்வரை நமக்கது பாவம்

எதற்கடா தம்பி நமக்கு முற் கோபம்

 

பொன்ராசா,

ஈழம் என்பது நம்தேவை

முடிந்தால் செய்சேவை

இல்லையேல் அடக்கிவை உன்நாவை

 

மேலும் சொன்னேன்,

செல்வாவின் கொள்கை ஈழம்

அவர்சிந்தனை மிகப்பெரிய ஆழம்

பிரபா போட்டார் பெரிய பாலம்

அதைவிடாமல் பிடித்தால் லாபம்

 

பொன்ராசா நக்கலாய் சொன்னான்,

மக்களிற்கு தேவை

சினிமாவும் சீனி-மாவும்

தலைவர்களிற்கு தேவை

நாற்காலியும் நாட்கூலியும்

 

பொன்ராசா,

தவளையாய் இருந்து தத்துவம் பேசாதே

கவலையாய் கிடந்து காலத்தை நோகாதே

கீழ்நோக்கி நடந்து மேல்நோக்கி பார்
 

வானத்தை வசப்படுத்த உனக்கு கானமயில் தேவையில்லை

ஈழத்தை பலப்படுத்த உனக்கு இனியாரும் தேவையில்லை

 

மெல்ல எழுந்து நடந்தேன்……

காலோடு சேர்ந்து மனசும் வலித்தது…..

 

நன்றி,

Saturday, November 16, 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்


இடித்தவன் தலையில்

இடி வீழாதோ-சிறை

பிடித்தவன் அரசின்

முடி தாழாதோ?

 

படைத்தவன் இல்லையோ-இல்லை

பார்ப்பனர் தொல்லையோ

உடைத்தவன் உதிரத்தை

குடித்தால் தகுமோ?

 

அம்மா..

முற்றத்தை இடித்தாயோ–உன்

முகத்திரையை கிழித்தாயோ?

சுற்றத்தை வெறுத்தாயோ-உன்

சுகத்தை நினைத்தாயோ?

 

முந்தானை விரித்து-அரசியலில்

முன்னுக்கு வந்தவரே

முள்ளிவாய்க்கால் முற்றமென்ன

மு.க.வின் மாளிகையா?

 

பல் இளித்து பாவாடை குறுக்கி

சினிமாவில் வென்றவரே

முள்ளிவாய்க்கால் முற்றமென்ன

சினிமா செற்றா

 

அம்மா

வாஸ்த்து பார்த்தீரோ

வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ

நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு

சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ

 

பார்ப்பனரே…

பல்லக்கில் பவனிவந்த

தமிழன் இன்று

உங்கள் சொல் கேட்டு

பள்ளத்தில் வீழ்ந்தானே

 

முல்லைக்குத் தேர் கொடுத்த

தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு

முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க

ஒருதுண்டு துணியில்லை

 

வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு

வீடுநிலமும் விதைநிலமும்

கொடுத்த தமிழனுக்கு

நினைவுக்கல் நாட்ட நிலமில்லை

 

நன்றி.

Friday, August 2, 2013

சந்திப்பு


ஒரு வாரமாக அவள் சந்தித்த மனிதர்களும், அவர்கள் வாழுகின்ற வாழ்க்கையும் அவளுக்கு புதிய உலகம் ஒன்றை கற்பித்துக் கொண்டிருந்தது. எல்லா மனிதர்களும் ஏதோ ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணத் தோன்றியது. அதிக எதிர்ப்பார்ப்புக்கள் இல்லாத அந்த வாழ்க்கை முறை பற்றி ஆயிரம் எண்ண அலைகள் மனதை நனைக்க கடற்கரை ஓரமாக நடந்து வந்தாள்.

ஆயிரம் ஆயிரம் அலைக் குழையல்கள் தமக்குள் கைகோர்த்து கூட்டாக தன்னை நோக்கி ஓடி வருவதைப்போல இருந்தது அவளுக்கு. அந்த அலைகள் திட்டமிட்டே அவளின் பாதங்களை நனைத்து விட்டு ஓடி ஒளிவதைப் போல அவள் மனம் எண்ணி நகைத்தது. மாலையில் வீசிய கடற்கரை காற்றும் அவளைத் தீண்ட, காதல் வயப்பட்ட மனசைப் போல அவள் மனம் ரம்மியமடைந்தது. கடல் அலைகளின் அழகில் மயங்கித்தான், சூரியன் குளிர்ச்சி அடைவதாக சில கணம் எண்ணிக் கொண்டாள். அந்த அழகிய பீச்சில் நிற்கின்ற எல்லோரும் நீண்ட நாள் சோர்விற்கு பின்னால் புத்துணர்ச்சி பெறுவதைப்போல விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

          சிறகுகளை அசைக்காமல் பறவைக் கூட்டங்கள் உயரப் பறக்கின்றன; சூரியன் மஞ்சள் காமாலை நோய் போல இள மஞ்சளாகிறது;. கொஞ்ச நேர சுகத்திற்காய் தரையை வருடி வருடி சுகப்பட்டு விட்டு, அலைகள் பின்னோக்கி மீண்டும் கடலுடன் கலந்து ஓய்ந்து போகின்றன; கை கோர்த்து நடந்து வந்த காதல் ஜோடி ஒன்று திடீரென நின்று முத்தமழை பொழிகிறது; இளைஞர்களும் யுவதிகளுமாக சேர்ந்து சாவகாசமாக கைப்பந்து ஆடுகிறார்கள்; இளைஞர்கள் குறுக்கு மறுக்காக ஓடி விளையாடுகிறார்கள். இரு வயோதிபர்கள் அவளைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டு போகிறார்கள். சாயம் பூசிய தன் தலைமுடியைப் பற்றித்தான் பேசுவார்கள் என எண்ணி, அதைப் பற்றிய கவலையேதும் கொள்ளாமல், மனதிற்குள் சிரிக்கிறாள். அவர்கள் பதித்த பாதத் தடங்கள் அப்படியே கடற்கரை மண்ணில் பதிய, அந்த அழகை ரசித்தபடி, தன் கால்கள் தண்ணீரில் நனைய அவர்களுக்கு சமாந்தரமாக மெல்ல நடக்கிறாள்.

      அப்பா எறியும் பந்தை பிடித்தும், எறிந்தும் விளையாடுகின்ற சிறுவனை இடையறுத்து, கறுத்து மெலிந்த சிறுவன் ஒருவன் கையிலே ஒரு சொப்பிங் பாக் சகிதமாக ஓடுகிறான். அவன் ஓடுகிற விதமும், அவனுடைய முகத்தில் இருக்கும் கடுமையும் அவளுக்கு அவனை எல்லோரிடமும் இருந்து வேறுபடுத்துகிறது. அவளுடைய கண் அவனை பின் தொடர்கிறது. அந்தச் சிறுவன் ஒரு பெண்ணிடம் போய் ஏதோ ஒன்றை நீட்டுகிறான். அதை வாங்கி வைத்தபடி, அந்தப் பெண் ஒரு நோட்டை நீட்டுகிறாள். அவன் பணத்தை வாங்கி கழுசான் பொக்கற்றுக்குள் வைத்தபடி நடக்கிறான். அந்தப் பெண் ஏதோ சொல்லுகிறாள்; அவன் ஆமென தலையாட்டியபடி நடக்கிறான். அவள் தொலைவில் இருந்து பார்த்தபடி சிந்திக்கிறாள்.

மற்றவர்களுடைய வாழ்க்கை பற்றி அறிந்து கொள்வதும் அதை லயித்துக் கொள்வதிலும் சுகமடைகிற ரகம் அவள். அவர்களிற்காக ஏங்குவதும் துடிப்பதும் இரக்கம் காட்டுவதும் அவள் சுபாவம். ஏதோ ஒருவித மன உந்துதலோடு அந்தப் பெண்ணை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள்.  தொலைவில் நின்று பார்க்க அந்தப் பெண் நாற்பது வயதை எட்டி நிற்கும் பெண் போலவும், அந்தச் சிறுவன் அவளுடைய மகன் போலவும் அவளுக்கு தோன்றுகிறது. அந்த இருவருடைய வாழ்வியல் முறையை தெரிந்து கொள்ள அவள் மனம் விழைகிறது. அவள் மெல்ல அந்தப் பெண்மணி நோக்கி நடக்கிறாள். கால்விரல்களின் இடுக்குகளில் இருந்த கடல்மண் பாதணிக்குள் சிக்கி பாதங்களை சீண்டுகிறது. இனம் புரியாத சினம் ஏற்படுகின்றது.

      ஒரு சிறிய மரத்தை அண்டிய நிலத் தோரமாக, துணியைக் கீழே விரித்து, அதை ஒட்டி அந்தப்பெண்மணி உட்கார்ந்து இருக்கிறாள். வெயிலில் இருந்து விடுதலையாக கறுத்தக் குடையொன்றையும் பிடித்திருக்கிறாள். சிறு பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட சில வகையான சிறு தீன்பண்ட பொட்டலங்களையும், தண்ணீர் போத்தல்களையும், அந்தத்  துணிமேலே அடுக்கி வைத்து வியாபாரம் செய்கிறாள் அந்தப்பெண். அவள் கிட்ட நெருங்கி, கடலைப் பொட்டலங்களை காட்டி, ”ஒரு பைக்கற்”  என்று சொல்கிறாள். அந்தப் பெண் அதை அவளிடம் கொடுத்து, காசைப் பெற்றுக் கொள்கிறாள்; மிகுதிப் பணத்தை அவள் வாங்கி, சரிசெய்யாமலே தனது கழுத்தில் தொங்கிய கறுத்த லெதர் பையின் சிப்பை பாதி திறந்தபடி திணிக்கிறாள்.  ”அக்கா சிகரெட் இருக்குதா?” பதின்நான்கு அல்லது பதினைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் கேட்கிறான், ”நான் சிகரட் விற்கிறதில்லை தம்பி” என்று அந்தப்பெண்மணி சொல்ல, ”கடையை எக்ஸ்பாண்ட் பண்ணுங்க அக்கா” என்றபடி அவன் நடக்கிறான்.

          அந்தக் கடையின் ஓரமாக அமர்ந்தபடி, அவள் கடலையை வாயில் போட்டு மென்றபடி அந்தப் பெண்ணை பார்த்தபடி இருக்கிறாள். மெல்லச் சுருண்டு, நெற்றியோரமாக விழுந்து கிடக்கிறது கேசம். முகத்தில் பொட்டில்லை. கூந்தலை இழுத்து முடிந்திருக்கிறாள். வறுமை தெரியாது, முகத்தில் இலட்சுமி கடாட்சம் தெரிகிறது. கழுத்தில் ஒரு மெல்லிய கறுத்த நூலும், அந்த நூலில் முருகனின் பென்ரனும் தொங்குகிறது. அதை அவள் சாறிக்கு வெளியே விட்டு, சாறியை கொஞ்சம் தூக்கி இடுப்பிலே சொருகி இருக்கிறாள். கல்லு வைத்த தோடும், கொஞ்சம் விதிவிலக்காக, கறுத்த பார் மணிக்கூடும் கட்டியிருக்கிறாள். மேல்வாய் பல்லொன்று, வரிசையில் பின் தள்ளி இருந்து, தெத்தியாக அமைந்து முகத்திற்கு ஒரு வசீகரத்தைக் கொடுக்கிறது. நல்ல உயரமும் கட்டுமஸ்தான உடம்புமாக இருந்த அந்தப்பெண்மணி, ”என்னம்மா பார்க்கிற” என்று புன்முறுவலுடன் கேட்கிறாள். அவள் சுதாகரித்துக் கொண்டு ”ஹாய்” என்கிறாள். பதிலுக்கு சிரிக்கிறாள் அந்தபெண்மணி.

      ”என்ர பெயர் மதுரா” என்று அவள் சொல்ல, ”எந்த நாட்டில இருந்தம்மா வந்தனீங்க”? –பெண்மணி.

கனடா என்கிறாள் அவள்.

இப்ப நிறைய பேர் அங்கிருந்து வருகினம். எத்தனை வயசு அம்மா உனக்கு?

எனக்கு 19 வயசு. இந்த இடத்திற்கு பெயர் என்னக்கா ?

”காரைநகர், கார்நகர் பீச் எண்டு சொல்லுவினம்”

”ஓ அப்படியா, நைஸ் அக்கா”- மதுரா

ஓம், எங்கட ஊர்க்காரர் எம்பியா இருக்கேக்க, இந்த றோட்டயும் போட்டு, இந்த பீச்சயும் சரிப்படுத்தினவர். அவரைக்கூட யாரோ சுட்டுப் போட்டாங்கள் தங்கச்சி என்கிறாள் கவலையுடன்.
அதை அதிகம் காதில் போட்டுக் கொள்ளாதவளாய், நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீங்க அக்கா என்கிறாள் மதுரா.
அக்கா எண்டு சொல்லேக்க என்ர கடைசித் தங்கச்சி மாதிரியே இருக்குது.
”ஓ உங்களுக்கு தங்கச்சி இருக்கா”? என்று கண்ணைச் சிமிட்டுகிறாள் மதுரா.
நல்ல கெட்டிகாரி அம்மா அவள். எப்பவும் கலகலப்பா இருப்பாள்; புத்தகம் புத்தகமா வாசிப்பாள்; கவிதை கவிதையா எழுதுவாள். நமக்கெல்லாம் எதுக்கு காதல், கல்யாணம் எண்டு சொல்லுவாள். எல்லாருக்கும் அவளை நல்லாப் பிடிக்கும். எல்லா சந்தோசமும் அற்ப காலத்திற்கு தானே தங்கச்சி. என்று சொல்லி பெருமூச்சு விட்டாள்.

அவள் தொடர கொஞ்சம் வசதியாக பொறுமை காத்தாள் மதுரா.

பிறகம்மா, கொஞ்ச நாளா அமைதியா திரிஞ்சாள்; ஒருநாள் வீதியில சுட்டுக் கிடந்தாள். போராளிகளோட தொடர்பாம், புலனாய்வுப் பிரிவில பெரிய ஆளாம், அதுதான், ஆமி சுட்டது எண்டு ஊரில பேசினாங்கள். இது நடந்து நாலாம் நாள், அம்மாவும் திடீரென்று ஒருநாள் கண்ண மூடிற்றா. அந்தப் பெண் சொல்லி முடிக்க, மதுராவின் கண்ணீர்த் துளியொன்று மணலில் விழுகிறது.

மதுரா சம்பாஷனையைத் தொடர வழியின்றி ஸ்தம்பிக்கிறாள்.

”அதை விடு தங்கச்சி, இப்படி ஒவ்வொரு வீட்டிலயும் நிறைய நடந்திருக்கு” சொல்லியபடி அந்தக் குடையை மதுராவிடம் நீட்டுகிறாள்.

வெயில் ஓகேயா இருக்கு அக்கா என்று மதுரா சொல்ல, அவள் குடையை சுருக்கி பையினுள் வைக்கிறாள்.  அந்தச் சிறுவன் மீண்டும் ஒரு பையோடு ஓடி வருகிறான். அதை அந்தப் பெண்மணியிடம் கொடுக்கிறான். ”300 ரூபாய் குறைச்சு வாங்கின்னான் அம்மா” என்றபடி குதூகலமாக நடக்கிறான். மரத்தின் ஓரமாக கிடந்த பந்தை உதைத்து விட்டு, அதன் பின்னால் ஓடுகிறான் பிரியமாக.

      ”என்ர மகன், ரவுனில போய் மலிவா வாங்கி வருவான். அதை நான் இஞ்ச வைச்சு வித்து நாலு காசு சேர்த்துப் போடுவன், அந்த லாபத்தை வைச்சு நானும் என்ர மகனும், என்ர சின்ன மகளும் இரவு வயிற்ற நிரப்புவம், இரவில மட்டும்தான் ஒழுங்கான சாப்பாடு” சொல்லி முடிக்க, ஒருவர்  வந்து நாலு கச்சான் பைக்கற்றை கை வைத்து எடுத்து விட்டு ஒரு நோட்டை கொடுத்து விட்டு போகிறார். அவள் அதை வாங்கி கண்ணிலே ஒற்றி விட்டு, சுருட்டி சிறிய டின் ஒன்றில் தள்ளுகிறாள்.

யோசிக்காமல் ”லன்ஞ் சாப்பிடவில்லையா அக்கா” என்கிறாள் மதுரா.

என்ன அம்மா?

மதியம் சாப்பிடவில்லையா? என்கிறாள் மதுரா

இல்லையம்மா, நாங்க இரவு மட்டும் தான் சாப்பிடுவம். பகலில் உழைச்சு இரவில மட்டும்தான் ஒழுங்கான உணவு. மற்றும்படி அப்படியும் இப்படியும் தானம்மா என்று இழுத்தாள்.

”சாப்பாட்ட மிச்சம் வைக்காத, வீணாக் கொட்டாத, உலகத்தில எவ்வளவு சனம் பட்டினியால சாகுதுகள்” அம்மா அடிக்கடி சொல்வது இன்றுதான் மதுராவிற்கு உறைத்தது. கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. ஆனாலும் அந்தப் பெண் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக சொன்னது அபூர்பமாக இருந்தது அவளுக்கு.

அவளுடைய கணவனைப் பற்றி அறிய மதுரா விரும்புகிறாள், ஆனாலும் கேட்க சங்கடமாக இருக்கிறது அவளுக்கு. ஒருவேளை, கணவன் குடிகாரனாக இருக்கலாம் என மனசுக்குள்ளே நினைத்தபடி, உங்கட மகள் எங்க? என்று கேட்கிறாள். ”அவ வீட்டில இருப்பா, அவளுக்கு 10 வயதம்மா, இஞ்சவர தனக்கு விருப்பம் இல்லையாம், பள்ளிகூடத்தில எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பீனமாம் என்று சொல்லுறாள்” என்கிறாள் அந்தப் பெண்மணி.

”உங்கட மகன் ஸ்கூல் போகிறது இல்லையா அக்கா”? என்கிறாள் மதுரா. இல்லையம்மா. அவன் தான் எனக்கு ஒத்தாசை என்கிறாள் சர்வசாதாரணமாக. மகனின் கல்வி பற்றி அவள் அலட்டிக் கொள்ளாதது மதுராவுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. சூரியன் மெல்ல மெல்ல அஸ்தமிக்க லேசான குளிர் உடலை வருடுகிறது. அந்தப் பெண்ணின் கணவனைப் பற்றி அறிந்து விடவேண்டும் என மீண்டும் ஆர்வமுறுகிறாள். ஆனாலும் கேட்டு, மீண்டும் ஏன் அவளைக் கவலைப் படுத்துவான் என எண்ணுகிறாள்.

அந்தப் பெண்மணியும் எதையோ யோசித்தவளாய், இவர் இருந்தா எங்களுக்கு ஏன் இந்த கேவலம் என்கிறாள்.

என்ன அக்கா என்கிறாள்?

இவர் இருந்தா எங்களுக்கு ஏன் இந்த கேவலம் என்கிறாள் மீண்டும்.

”ஓ உங்கட ஹஸ்பன்ரயா சொன்னீங்க”? என்கிறாள் மதுரா

ஆம் என தலையசைக்கிறாள் கவலை படர்ந்த முகத்துடன்.

என்ன நடந்தது அக்கா? என்கிறாள் பொறுக்க முடியாமல்.

       ஆறு வருஷத்துக்கு முன்னாடி, இராணுவம் முன்னேறி வந்தது எங்கட பகுதிக்குள்ள. நாங்க குடும்பமா எங்கட கடையை பூட்டிற்று வீட்டிற்குள்ள இருந்தம். அவர் நல்ல இளமையா, வாட்டசாட்டமா இருந்தார். அவங்களின்ர கண்ணுக்குள்ள குத்தியிருக்க வேணும். அடிச்சு இழுத்துக் கொண்டு போனாங்க. அவ்வளவுதான், பிறகு என்னாச்சு எண்டு எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. இப்போதுதான் அந்தப் பெண் மனசளவில் நொந்து, கலங்கியதை அவள் கவனிக்கிறாள். மதுராவிற்கு ஓ என்று அழவேணும் போல இருக்கிறது. அந்தப் பெண்ணைக் கட்டியணைத்து ஆறுதல்பட வேணும் போலவும் இருக்கிறது. ஆனாலும் செய்யவோ, சொல்லவோ ஏதும் அறியாமல் திணறியபடி மறுபக்கம் திரும்ப, தூரமாக பெரியப்பா வருவது அவளுக்கு லேசாகப் புலப்படுகிறது. மதுராவைக் கண்டதும் பதட்டமாக நடந்து வந்த பெரியப்பாவின் முகம் ஆறுதல் படுவதை அவள் கவனிக்கிறாள். ”எங்க சொல்லாம வந்தனீ” என்று பெரியப்பா கடிந்தபடி அண்மிக்கிறார்.

      பெரியப்பா கூப்பிடு தூரமாக நெருங்கியதும், மதுரா எழுந்து கொள்ள, கடைக்காரப் பெண்மணியும் எழுந்து பெரியப்பாவை கைகூப்பி வணங்குகிறாள். ஏன் கைகூப்பி வணங்குகிறாள் என அறியாமல், ”எவெரிதிங் ஃப்ன் பெரியப்பா” என்கிறாள் மதுரா பதட்டத்துடன்.

”ஐயா, எப்படி இருக்கிறீங்க”? என்கிறாள் அந்தப் பெண் பௌவியமாக.

”நல்லா இருக்கிறன் அம்மா” என்கிறார் பெரியப்பா. ஒன்றும் புரியாமல் மதுரா அப்படியே நிற்கிறாள்.

”இது உங்கட பெண்ணா ஐயா, நான் நினைச்சனான், இந்த தங்கமான பொண்ணு உங்கள மாதிரி தங்கமான மனிசர் வீட்டுப் பொண்ணாத்தான் இருக்கும்” என்கிறாள் நம்பிக்கையான தொனியில்.

இது என்னுடைய தம்பியினுடைய மகள், கனடாவில இருக்கினம்,

சொன்னவா ஐயா என்கிறாள் பெருமையாக.

போயிற்று வாறம் என்றபடி பெரியப்பா கிளம்ப, மதுராவும் தலையசைத்து, ”போயிற்று வாறன் அக்கா” என்று சொல்லி கண் கலங்குகிறாள். மகளை நல்லா படிப்பியுங்க அக்கா என்று சொல்ல வாயெடுத்தாள், ஆனாலும் துக்கம் தாளாமல் வார்த்தைகளை அடக்கிக் கொண்டு விடைபெறுகிறாள். மதுராவிற்கு லேசாக மனம் வலிக்கிறது. பாட்டி இறந்தபோது கூட அழாதவள், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறாள்.

ஐயா நீங்க செய்த உதவியை மறக்க மாட்டம் என்கிறாள் அந்தப் பெண்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை என்பது போல பெரியப்பா கண்ணால் ஜாடை செய்து, தலையசைத்து திரும்பி நடக்கிறார். சிறிது நேரம், பார்த்தபடி நின்று அந்தப் பெண்மணி,  பின்னால் வேகமாக வந்து, தன் கையில் இருந்த கைக் கடிகாரத்தை கழற்றி, மதுராவின் கையை இழுத்து, கட்டி விடுகிறாள். 

”என்னக்கா இதெல்லாம்” என்கிறாள் மதுரா ஆச்சரியமாக.

”இந்த மணிக்கூடு, சுவிஸிலிருந்து இந்த பீச்சுக்கு வந்த குடும்பம், எனக்கு பிரசென்ற் பண்ணினவ. கொஞ்சகாலம் இந்த அக்காவின்ர ஞாபகமா இதை நீ கட்டியிரம்மா” சொல்லிச் சந்தோசப்பட்டுக் கொண்டாள் அந்தப் பெண்.

என்னக்கா என்பதுபோல மதுரா பார்த்தாள்.

என்ன மணிக்கூட்டின்ர டிசையின் சரியில்லையா? மெல்லச் சிரிக்கிறாள்

”சீ சீ, நல்லாயிருக்கு அக்கா” என்கிறாள். அவளின் கன்னத்தில் குழி விழுகிறது.

நீ ரொம்ப அழகா இருக்கிற அம்மா என்கிறாள்.

மதுரா கண்கலங்கியபடி, திடீரென அவளைக் கட்டியணைக்கிறாள்.

பெரியப்பாவும் மதுராவும் நடக்கத் தொடங்குகிறார்கள்.

பெரியப்பாவும் மதுராவும் நடந்து போவதை அப்படியே பார்த்தபடி நிற்கிறாள்.

ஒருநாள் மகன் விளையாடும் போது, கால் காயப்படுகிறது. மகனுக்கு மருந்து கட்ட தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். அப்போ பணம் இல்லாத காரணத்தால் மருந்து கட்ட அவர்கள் மறுத்து விடுகிறார்கள். அப்போது அந்த மருத்துவ மனையில், பெரிய டாக்டராக இந்தப் பெரியப்பாதான் இருந்தார். தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த டாக்டர் தனது வீட்டிற்கு இவர்களை வரும்படி அழைத்து, இலவசமாக மருந்து கட்டி, மாத்திரையும் கொடுத்து அனுப்பிவிட்டார்.

இப்போது அவரோடு அந்தப் பிள்ளையும் நடந்து போவதை பார்த்து, ஆனந்தமாக கண் கலங்குகிறாள்; கடைநோக்கி நடக்கிறாள். ”என்ர மகள் எப்படி வளர்ந்து வரவேணும் எண்டு நான் நினைச்சதே இல்லை, ஆனா இப்ப நினைக்கிறன், என்ர மகள் அந்தப் பிள்ளை மாதிரி எல்லாரையும் நேசிக்கக் கூடிய பண்பான பிள்ளையா வரவேணும்” என்று சொல்லி சொல்லி நடக்கிறாள். இன்றைய மாலைப் பொழுது, ஏதோ அவளுக்கு வாழ்வின் மீது மிகப்பெரிய காதலை ஊட்டுகிறது.

நம்மைச் சுற்றியிருப்பவர்கள், நம்மை விட்டு விலக விலக, வாழ்க்கை புதிய மனிதர்களை அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கிறது. மனிதன் ஒவ்வொரு காலத்திலும், காலத்தோடு ஒட்டியும், காலத்திலிரிந்து பிரிந்தும் நடக்கிறான். நேசிக்கிற வாழ்க்கை கை நழுவிப் போகும் போதெல்லாம், புதிய வாழ்க்கை வந்து கைகூப்பி வரவேற்கிறது. விருப்பு வெறுப்புகளோடு, வாழ்வை இழுத்துக் கொண்டு போவதுதான் வாழ்வாகிப் போகிறது. அப்பப்போ தன் கனவுகளை புதைத்து வைத்து விட்டு, நிஜத்தோடு மனிதன் மாரடிக்கிறான். தேவைக்கும் அதை நிறைவேற்றுதலுக்கும் இடையில் மனிதன் போராடியபடியே வாழ்வை முடித்துக் கொள்கிறான். நிறைவேறியவை சொற்பமாகவும், நிறைவேறாதவை மிச்சமாகவும் வாழ்வை முடிக்கும் போது, அனுபவம் என்கின்ற போர்வையோடு மரணத்திற்குள் போகிறான்.

எதையோ சிந்தித்தபடி பெரியப்பாவோடு நடக்கிறாள் மதுரா. பெரியப்பா வாழுகிற வாழ்க்கை, அந்தப் பெண்மணி வாழுகிற வாழ்க்கை, கனடாவில் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தான் வாழுகிற வாழ்க்கை பற்றி எண்ணியபடியே நடக்கிறாள். பெரியப்பா காரில் ஏறி, இவள் ஏறும்வரை காத்திருக்கிறாள். அவள் அப்படியே கார் கதவைப் பிடித்தபடி நிற்கிறாள்.

”ஏறம்மா” என்கிறார் பெரியப்பா.

”ஓகே பெரியப்பா” என்றபடி காரில் ஏறுகிறாள். கார் யாழ்ப்பாணம் நோக்கி விரைகிறது.

”நேரமாகுது, இப்ப என்ன நேரம் அம்மா” பெரியப்பா.

கையை திருப்பி, கைக்கடிகாரத்தை தூக்கி, ”8 மணி, சிறிலங்கா நேரம்” என்கிறாள் மதுரா.

பெரியப்பா சிரிக்கிறார்.

 

Tuesday, July 23, 2013

1983-2009


1983 இல், தெற்கில் நடந்த இனக்கலவரத்தையும், 2009 இல், வடக்கில், முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையையும் நினைக்கும் போதெல்லாம் தமிழர்களால் கொதிக்காமல் இருக்க முடிவதில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், பட்ட அவமானங்களும், பறிகொடுத்த உயிர்களும் ஒவ்வொரு தமிழனுடைய நெஞ்சிலும் ஆழப் பதிந்து வடுவாகிக் கிடக்கின்றன. வெறும் 12 வீதமே தமிழர்கள் என்ற நிலைப்பாட்டில் சிங்கள அரசு தொடர்ந்தும் தமிழர்களின் நலனை உதாசீனம் செய்வது ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்லதல்ல. நீறு பூத்த நெருப்பாக ஒவ்வொரு தமிழனுடைய நெஞ்சிலும் அமுங்கிக் கிடக்கும் காயங்களும், வலிகளும் என்றோ ஒருநாள் மீண்டும் தலைதூக்கும். அரசியல், பொருளாதார வெளியில் தமிழர் கை ஓங்கி, மீண்டும் தமிழர் கொடி பறக்கின்ற காலம் மலரும். இப்படியெல்லாம் நான் உங்களை உசுப்பேற்றி, இக்கட்டுரைக்கு வாசகராக்கிக் கொள்ள முனையவில்லை.

இருப்பினும், தமிழர்களாகிய நாம், நமது அரசியல், பொருளாதார, சமூக நலன்களில் அக்கறையில்லாமல் நம்மை நாமே உதாசீனம் செய்வது அறிவுடமை ஆகாது. கடந்த காலத்தின் கசப்பான வரலாற்றை புரிந்து, எதிர்காலத்தில் நமக்குரிய பாதையை உருவாக்க வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு உண்டல்லவா. ஐக்கிய இலங்கைக்குள், மூன்று இனத்தவர்களும் ஐக்கியமாக வாழுதல் என்பது இனி சாத்தியமில்லை. 1983-இனக்கலவரமும், 2009-இனப்படுகொலையும் இதற்கு நல்ல சான்று பகரும். அதே நேரத்தில், கடந்த 60 ஆண்டுகளிற்கு மேலாக தமிழீழம் அடைவதற்காக போடப்பட்ட அகிம்சாவழி அத்திவாரங்களும், பிரபாகரனிய கட்டுமானங்களும் சிங்கள அரசால் நிர்மூலமாக்கப்பட்ட இத்தருணத்தில் ஈழத்தமிழர்களால் என்ன செய்ய முடியும்? சுயநல, அதிகார, போட்டி மனோநிலையால் பிளவுபட்டுக் கிடக்கும் புலம்பெயர் தமிழர்கள் என் செய்வார்கள்!   

1983 இல், விடுதலைப் புலிகள், வெறும் போராளிக் குழுக்காளாக இருக்கும்போது திருநெல்வேலியில் 13 இராணுவ வீரர்களை கொலை செய்தமைக்காக, ஒட்டுமொத்த தமிழினத்தையே விரோதிகளாக பார்த்தது சிங்கள அரசு. டில்லியில் இருந்து, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் வலுவான அழுத்தம் வரும்வரை ஜே. ஆரின் அரசாங்கம் இனக் கலவரத்தை நிறுத்த எந்தவிதமான முஸ்தீபும் எடுக்கவில்லை; பதிலாக தமிழருக்கு எதிரான இனக்கலவரத்தை அரசு சார்ந்த காவல்துறையே ஊக்கிவித்தது என்பதுதான் வரலாற்றுச் சோகம். சிங்கள பிரதேசங்களில், எட்ட முடியாத உயரத்தில் இருந்த தமிழர் வாழ்வியலை சிதைத்து, அவர்களை பரதேசிகளாக்கி, ஏழ்மைப்படுத்த சிங்கள அரசு செய்த கொடூரமான இனக்கலவரம் அது. தமிழர்கள் ஓடி ஒதுங்க இடமில்லாமல் பட்ட கஸ்ரங்கள், பறிகொடுத்த சொத்துக்கள், இழந்த உயிர்கள் கொஞ்சமல்ல. திறன் மிகுந்த வரலாற்று ஆசிரியர்கள் எம்மிடம் இல்லாத காரணத்தால் இவை அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றில் பதிவு செய்யப்படவும் இல்லை.

இதைப்போலவே, 2009ல், முள்ளிவாய்க்கால் எனும் மிகக் குறுகிய பிரதேசத்தில் அடைபட்டுக் கிடந்த விடுதலைப் புலிகளை மெல்ல மெல்ல அழிப்பதற்கும் அவர்கள் சரணடைவதற்கும் வாய்ப்புக்கள் இருந்த போதும், அவசர அவசரமாக, விசனத்தனமாக பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களை அனாவசியமாக கொன்று குவித்தார்கள். மக்களை புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றார்கள் என அனாவசிய குற்றச்சாட்டை பிரசார யுக்தியாக பயன்படுத்தி, நாற்பது ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட, அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தார்கள். ஈவிரக்கமில்லாமல் கற்பழித்தார்கள். அனைத்து விதமான போரியல் குற்றங்களையும் புரிந்தார்கள். தமிழர்கள் வேறு, சிங்களவர்கள் வேறு என்பதை அப்படியே நிரூபித்தார்கள். புலிகள் வீழ்ந்து, யுத்தம் முடிவடைந்த இன்றைய நிலையிலும் தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கின்ற அதிகார மனோநிலையில்தான் அரசு இயங்கி வருகின்றது.

1983 ற்கு முன்னால் பார்த்தாலும், சிங்களவர்கள் நியாயபூர்வமாக நடந்ததில்லை. தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூல்நிலையமாக திகழ்ந்த யாழ் நூலகத்தைக் கூட, லண்டன், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காமினி திசநாயக்காவின் தலைமையில் எரித்து நாசம் செய்தார்கள், அதற்கு வலுவான காரணம் எதுவும் இல்லை. இப்படித்தான் தனது சொந்த நலனுக்காக, 1956, எஸ். ட்பில்யு. ஆர். பண்டாரநாயக்கா அவர்கள் சிங்கள மொழிச்சட்டத்தை பாராளுமன்றத்தில் அமுல் செய்தார். பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்களையும் வலுவான காரணங்கள் எதுவுமின்றி தீடிரென்று கிழித்தெறிந்தார்கள். மலையகத் தமிழ்மக்களின் வாக்குரிமை பறிப்பு, தமிழர்களின் சத்தியாக்கிரகத்தை வன்முறையால் அடக்கியமை, பல சிறிய இனக் கலவரங்கள், இப்படியாக 1982 நூலகம் எரிப்பு வரை காரணமில்லாமல் சிங்கள ஆட்சியாளார்கள் தமிழர்களிற்கு எதிராக செய்த வன்முறைகள் அதிகம்.  

வாள் தூக்கி போர் செய்த வீரத் தமிழன் வாய் கட்டி பொறுமை காத்த காலங்கள் ஏராளம். காந்திய வழியில் சென்ற தமிழன் தீயால் சுடப்பட்ட சம்பவங்கள் ஏராளம். இதன் விளைவாகவே, புத்தகங்கள் சுமந்த தமிழ் இளைஞர்கள் குண்டுகளை எடுக்கத் தள்ளப்பட்டார்கள். காந்தியையும், மாட்டீன் லூதர் கிங்கையும் படித்தவர்கள், சேகுவராவையும் மாவோயையும் படித்தார்கள். ஏராளமான புத்திஜீவிகளையும் பட்டதாரிகளையும் பிரசவித்த தமிழ் பாடசாலைகளில் போராளிகள் உருவாகத் தொடங்கினார்கள். இனியும் ஈனத்தமிழனாக இருக்கமாட்டோம், மானத்தமிழனாக மடிவோம் என எழுந்தார்கள். எழுந்தார்கள்! வெடித்தார்கள்! பல களங்களை வென்று மறத்தமிழன் நாம் என நெஞ்சை நிமிர்த்தினார்கள். காலச் சூறாவளியால் அவர்களும் துடைக்கப்பட்டார்கள். கோலோச்ச வேண்டிய அவர்கள் கொடுங்கோலால் கொன்றழிக்கப்பட்டார்கள்.

நிற்க! பலவீனப்பட்டு, பிளவுபட்டுக் கிடக்கும் இன்றைய ஈழத்து தமிழ் அரசியல் கட்சிகளும், வளர்வதற்கு முன்பாகவே தமக்குள், உள்ளீடாக மோதிக்கொள்ளும் புலம்பெயர் கட்சிகளும்தான் இன்றைய தமிழர் நலனின் தீர்மானிகள். மிகக் குழப்பமான இந்த காலப் பகுதியில் புலம்பெயர் தமிழருடைய பங்களிப்பு  எதுவாக இருக்க முடியும்?

மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் பேரால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், வெறும் உணர்ச்சிவசப் படுகின்ற மனோநிலையை தவிர்த்து, அறிவு ரீதியாக நாம் ஒன்றிணைய வேண்டும். சுயநல வாழ்வில் தாமுண்டு தம்குடும்பமுண்டு என்கின்ற மனோநிலையில் வாழுகின்றவர்களும், எரிகின்ற வீட்டில் எடுப்பதை எடுத்து விடலாம் என துடிக்கின்ற சுயநலன் விரும்பிகளும், தங்களுடைய திறமைகளை மேடையேற்றி தங்கள் ஆணவத்திற்கு தீனிபோட்டு அற்பசுகம் காணுகின்றவர்களும், ஜனரஞ்சக ஆதரவிற்காக கொள்கை வேசமிடுபவர்களும் ஒவ்வொரு சமூகத்தளத்திலும் இருப்பார்கள். இவர்களுடைய கரங்கள் வலுக்கின்றபோதுதான் சமூக நாசம் ஆரம்பிக்கின்றது. இவர்கள் தங்கள் செயல்களை தாங்களே அசைபோட்டுப் பார்க்கின்ற ரகமானவர்கள் அல்லர்.

ஆனாலும் நாம் கொஞ்சம் விழிப்பாக இருந்தால், நம் மொழிமீதும், நம் தாய்மண்ணின்மீதும் தீராக்காதல் கொண்டால் ஒருநாள் நாம் வெல்வோம். உலக சரித்திரத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட இனம் மீண்டும் எழுந்து உரிமையை பெற்றுக்கொண்ட வரலாறுகள் அதிகமுண்டு. அதுவும் தமிழர்கள் புத்திசாலிகள், வரலாற்றுப் பின்னணி கொண்டவர்கள். காலம் காலமாக அந்நிய ஆட்சியிலிருந்து மீண்டு வந்தவர்கள். தமிழர் நாம் எழுவோம்! என்றோ நாம் வெல்வோம் என்பதை உங்கள் தாரக மந்திரமாக்கிக் கொள்ளுங்கள். தோற்பது மீண்டும் பலமாக வெல்வதற்கு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உயர் சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், ஒன்றுபடுதல், ஒற்றுமையாக ஒழுகுதல் இவைதான் இன்றைய தேவைகள். 1983 லும், 2009 லும் உங்கள் இனம் அனுபவித்த கொடுமைகளை மறந்து விடாதீர்கள். அதேநேரத்தில் பழிவாங்கும் மனோநிலையையும் வளர்த்து விடாதீர்கள். காலம் வரும், அப்போது தூற்றிக்கொள்ளுங்கள். நாம் விதைத்த நல்ல விதைகளை நாம் அறுவடை செய்யும் காலம் நிச்சயம் மலரும். நம்பிக்கையுடன் வேலை செய்யுங்கள். சுதந்திரக் காற்றை நம்மினம் சுவாசிக்கும் நல்லகாலம் வரும்.