A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Tuesday, April 21, 2015

வயது நாற்பது



வயது நாற்பது?

அகவை நாற்பதா
ஆகா என ஆனந்தப்படு
ஆயுளின் பாதியைக் கடந்தாய் நன்று

அகவை நாற்பதில்….

வரவறிந்து செலவுசெய்
வயிரறிந்து உணவுகொள்

ருசிக்கு உண்ணாதே பசிக்கு உண்
கீரை மீன்வகை தாது சேர்
கொழுப்பு மா கிழங்கு தவிர்
தொப்பை  தொப்பி தவிர்

நீரழிவு அது பேரழிவு
உயர்கொழுப்பு அது உன் உயிர்குடிப்பு

நீரழிவு நின்று கொல்லும்
அதிகொழுப்பு அன்றே கொல்லும்
இரண்டையும் தள்ளி வை
இன்றே கொள்ளி வை

ஏழு மணிநேரம் தூங்கு
அரைமணிநேரம் நட
கால்மணி நேரம் வாசி
காலரை மணி நேரம் ஒரு நாசியால் சுவாசி

காமப்பசிக்கு
வீட்டில் விருந்தாக்கு
வெளியில் மருந்தாக்கு

மனைவியை(கணவனை) மீண்டும் காதலிக்கத் தொடங்கு
முடியாவிட்டால் காதலிப்பதாய் நடி
தாயை மனதிலாவது வழிபடத் தொடங்கு

புகைத்தலை விடு
உடலுக்கு நல்லது
புகைச்சலை விடு
மனசுக்கு நல்லது

சேமிப்பாளனாய் இருந்தால்
கொஞ்சம் செலவழி
செலவாழியாய் இருந்தால்
கொஞ்சம் சேமி

தேவையறிந்து சேவை செய்
உன் தேவைக்காக சேவை செய்யாதே

புகழ் பணம் தேடி
பொது வாழ்விற்கு வராதே
இரண்டையும் பொதுவாழ்வில் இழக்காதே

விமர்சனத்தை காதிற்குள் மடு
விசனத்தை காற்றோடு விடு

முதியவரை வழிபடு
இளையவருக்கு வழிவிடு

மாற்றோர் கருத்தையும் ஏற்கப் பழகு
மாற்றான் மனையுடன் தங்கையாய் ஒழகு

மன உழைச்சல் அது
தின உழைச்சல்
தாழ்வுச்சிக்கல் அது
வாழ்வுச்சிக்கல்
உடைத்துக்கொண்டு வெளியே வா

கோளுக்குப் பயந்து கோயிலுக்குப் போகாதே
கோயிலுக்குப் போனால் கோளை மறவாதே

வளர்த்துவிட்ட சமூகத்திற்கு
சேர்த்துக் கொடு முடிந்தால் வார்த்துக் கொடு

தகுதியில்லாதவற்றில் தள்ளிநில்
தகுதியுள்ளவற்றில் உறுதியாய்நில்
புலமையை ஆற்றுப்படுத்து
புலியே எதிர்த்தாலும் அதை வெளிப்படுத்து

தீயிலே வீழ்ந்தால் ஜோதியாய் எழு
நீரிலே வீழ்ந்தால் மீனாயிரு

சும்மா கனவு காணாதே
காலத்தை கரைத்திடும்
எதையாவது தொடங்கு
அழுங்குப்பிடியாய் இயங்கு

பிறப்பை சூழலை துணையை
குறை சொல்லாதே தடையாய் நினையாதே

 உழைப்பை விதை
வியர்வையை பாய்ச்சு
அறுவடையை ஆறுபடையிடம் விடு

வலிக்கும்வரை ஓடு
வலித்தால் நட
விழுந்தால்  மீண்டும்
தவழ் எழு நட ஓடு

வெற்றி பெறும்வரை
வெறியாய் இரு அதில் குறியாய் இரு
பெற்றபின்  அதற்கு நெறியாய் இரு

நீ ஈழத்தமிழனா ?
நாயகனாய் இரு
கமலஹாசனாய் இராதே

நன்றி
அன்புடன்,

அ.பகீரதன்