A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா


 
(பாலு மகேந்திரா )
 

எழுத வேண்டும் என

எத்தணிக்கிறது என்பேனா

 

எதை எழுதுவது?

எழுதி என்னாவது?

புழுதி படர்ந்த புத்தகமாய்

என் பேனா

 

ஆற்றாமை

அழுத கண்ணீராக……

தேற்றாமை

பெரும் துக்கமாக….

 

பாலு மகேந்திரன்

எங்கள் ஈழ மகேந்திரன்

கோடாம்பாக்கமே புருவம்

உயர்த்திய வானச் சந்திரன்

 

சிறுவயதில்

தீவிர  வாசிப்பு

தீரா  வெறியோடு

சினி்மா  நேசிப்பு

 

லண்டனில் பட்டப் படிப்பு

புனேயில் சினிமாப் படிப்பு

இறுதியாய் சினிமா மட்டுமே பிடிப்பு

உறுதியாய் அதுவே சுவாசத் துடிப்பு

 

முதல் படம்

”அழியாக் கோலம்”

சினிமாவில் அவருக்கு

அழியாக் கோலம்

 

ஐந்து முறை

தேசிய விருது

அதில் இரண்டு

ஒளியமைப்பிற்காக

 

 

பிடல் காஸ்ரோவை

பின்பற்றித் தொப்பி

கடல் கடந்து சாதித்த

ஈழத்தின் சிற்பி

 

படைத்தவனே பிரமிக்கும்

பன்முக ஆற்றல் அவர்க்கு

படைத்தார் ”பாலா” க்களை

நிலைத்தார் ”சீமான்” களாய்

 

சினிமாப்

பட்டறை வைத்தார்

பலருக்கு அங்கே

முகவுரை கொடுத்தார்

 

உன் பணி தொடர

பலர் வருவார்

உன் படம் போல

இனியார் தருவார்?

 

”வீடு” படம் எடுத்தபோது

வீடுபேறு அடைந்துவிட்டாய்








விடைபெறு தந்தையே-உன்






படை  வரும் நல் படைப்புக்களாய்


 

ஆன்மா சாந்தியடையட்டும்.


 

அ.பகீரதன்

Tuesday, February 4, 2014

பலூனின் சுதந்திரம்


காற்றடைக்கப்பட்ட பலூன்

ஊசிக்காக காத்துக் கிடக்கிறது….

 

ஊசிகள் சில இன்னும்

தூண்டில் ஊசிகளாக

 

ஊசிகள் சில இன்னும்

தாசிகளின் மேற்சட்டையில்

 

ஊசிகள் சில இன்னும்

விருந்தாளியின் பல் இறுக்குகளில்

 

பார்வைக்கு

அழகாகத் தெரியும்

பலூனிற்குள் காற்றின் சுதந்திரம்

கேள்விக்குறி யாக்கப்படுகிறது?

 

பலூன் ஊதப்படுகின்றது

குழந்தைக்கு கும்மாளம்

ஊதியவனிற்கு சிம்மாசனம்

காற்றிற்கு மட்டும் அவமானம்

 

காற்றின் துணையோடு

பலூன் பறக்கிறது

பலூனிற்கு சுதந்திரம்

காற்றிற்கு நிர்ப்பந்தம்

 

காற்றின் துணையோடு

பட்டம் பறக்கிறது

பட்டத்திற்கும் கொண்டாட்டம்

காற்றிற்கும் விடுதலை

 

பட்டம் கயிறிடம்

சுதந்திரத்தை இழந்து கிடக்கிறது

காற்றிற்கு விடுதலை வழங்கிவிட்டு

 

பட்டத்தின் பெருந்தன்மை

பலூனிற்கு இல்லை

அதுதான் பட்டம் உயரப் பறக்கிறது

பலூன் தாழப் பறக்கிறது

  

காற்றிற்கு புரியவில்லை

பலூனின் பலவீனம்

 

பலூன் சூம்பிக் கிடப்பதாய்

ஒப்பாரி வைக்கின்றன ஊசிகள்

 

காற்றடைக்கப்பட்ட பலூன்

ஊசிக்காக காத்துக் கிடக்கிறது

 

ஊசிகளோ

சல்லாரி அடிப்பவர்களால்

நாதஸ்வரத்தில் தொங்கிக் கிடக்கிறது

 

காற்றின் சுதந்திரமே நம்சுவாசமாய்

சுதந்திரம் கேள்விக் குறியாகும்போது

சுவாசமும் தடைசெய்யப்படலாம்

Sunday, February 2, 2014

கனடாவின் தலைநகரில் தைப்பொங்கல் விழாவும் தமிழ் மரபுத் திங்களும்


கனடாவின் தலைநகராகிய ”ஒட்டாவா(Ottawa)” நகரில் முத்தமிழ் கலாமன்றம் பொங்கல் விழாவை வருடா வருடம் மாபெரும் நிகழ்வாக கொண்டாடி வருகின்றது. புலம்பெயர்ந்த வாழ்விலும், தமிழரின் மொழி, கலை, கலாசாரம், பண்பாடுகள் சார்ந்த வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதே இந்த விழாவின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது; அதில் வெற்றியும் அடைந்துள்ளது. “புலம்பெயர்ந்தவர்கள்” என்ற வரையறைக்குள் தங்கள் வாழ்வைச் சுருக்கிக் கொள்ளாமல் தங்களையும் தங்கள் மரபு சார்ந்த பின்புலங்களையும் வளப்படுத்திக் கொள்வதில் தமிழருக்கு நிகர் எவருமில்லை. கனடாவில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழுகின்றார்கள்; இவர்களில் பெரும்பான்மையானவர்கள் என்பதுகளின் மத்திய பகுதிக்குப் பிற்பாடு வந்து குடியேறிவர்கள். குடியேறிய இவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் கடின உழைப்பாலும் ஊக்கத்தாலும் அறிவியல், பொருளாதாரம் மற்றும் பண்பாடு ரீதியாக எட்டிப் பிடித்திருக்கும் உயரம் மிகப்பெரியது; பிரமிப்பானது; மலைக்கத் தக்கது. இந்த வளர்ச்சிப் பாதையின் சிறுகூறாக, முத்தமிழ் கலாமன்றத்தின் பெருமுயற்சியால் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக ஒட்டாவா நகர அரசும் அறிவித்திருப்பது இவ்வாண்டின் இனிப்பான பொங்கல் செய்தியாகும்.  

ஒட்டாவா வாழ் தமிழர்களின் முயற்சியின் விளைவாக இவ்வாண்டிலிருந்து சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக(Tamil Heritage Month) ஒட்டாவா நகர அரசு அறிவித்திருக்கின்றது. தமிழர்கள் தங்களின் மொழித்தோன்றல், வழித்தோன்றல், கலை, இலக்கியம், ஆன்மீகம், கலாசாரம், பண்பாடு, அரசியல் மற்றும் வரலாற்றின் பெருமைகளையும் விழுமியங்களையும் தங்கள் குழந்தைகளிற்கு மட்டுமல்லாது கனடாவில் வாழும் பிற இனத்தவர்களிற்கும் எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாக இந்த அங்கீகாரம் அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் செறிவாக வாழும் நகரமாகிய ”மார்க்கம்(Markham)” நகரசபை முதலாவதாக 2011 மார்கழியில் தமிழ் மரபுத் திங்களை ஏற்றுக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக பல நகர அரசுகள் ஏற்றுக்கொண்டன. இந்த அங்கீகாரத்தை மாகாண, மத்திய அரசுகள் ஏற்றுக் கொள்வதற்கான பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளின் முக்கிய கர்த்தாக்களாக இருந்த அரசியல் பிரமுகர்கள் நீதன் சான்(Nethan Shan), லோகன் கணபதி போன்றவர்களும் மற்றையவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கனடா பல்லினங்கள் வாழுகின்ற நாடு; பாகுபாடுகளின்றி பல்கலாசாரங்களை வரவேற்கின்ற, ஊக்குவிக்கின்ற அரசு. இதை தங்களிற்கு அனுகூலமாக எடுத்துக் கொண்டு தமிழர்கள் மொழி சார்ந்து, பண்பாடு சார்ந்து தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில் மாபெரும் வெற்றி அடைந்து வருகின்றார்கள். மொழியும், மொழி சார்ந்த பண்பாடும் காப்பற்றப்படவேண்டும் என்பதில் புலம்பெயர்ந்த பெரும்பாலான தமிழர்கள் மிகவும் ஜாக்கிரதையாக உள்ளனர். ஈழத்திலோ அல்லது தமிழ் நாட்டிலோ இருக்கும் தமிழ் குழந்தைகளின் தமிழர் சார்ந்த ஆளுமைகளிற்கு நிகராகவோ அல்லது மேலாகவோ புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகளின் தமிழர் சார்ந்த ஆளுமைகள் உள்ளன. பரதநாட்டியம் தொடங்கி தமிழ் சினிமாவரை அவர்களிற்கு அத்துபடி; மீன்குழம்பு தொடங்கி பணியாரம் வரை நன்றாக இறங்கும். செந்தமிழ் அவர்களால் பேச முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள இயலும். இளையராஜாவின் இசை தொடங்கி பவர் ஸ்ரார் வரை அவர்களால் விமர்சனம் செய்ய முடியும். திருவள்ளுவர், ஔவையார், கம்பன், பாரதி போன்றவர்கள் தமிழ் வளர்த்த பெரியவர்கள் என்பது புரியும். விரும்பியோ விரும்பாமலோ வழிபாட்டுத் தலங்களிற்கு போகிற பண்பாடு அவர்களிடம் உண்டு. கால ஓட்டத்தில் இவையாவும் கரைந்து, கலைந்து போய்விடும் என வெட்டியாக வாதிடுவோர் இருக்கவே செய்வார்கள். நாம் இருக்கும்வரை நம் விழுமியங்களோடு வாழ்வதும், அதற்காக இயன்ற முயற்சிகளை எடுப்பதும் நமக்கு எந்த வகையிலும் தீங்கன்று.

ரொறன்ரோவின் இடியப்ப கடை தொடங்கி நியூயோர்க்கின் வோல்(Wall street) வீதி வரை தமிழன் கால்பதிப்பதை, வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றது. பில்கேட்ஸ் அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் கணணித்துறையில் பில்கேட்ஸ் அளவுக்கு வளர்ந்தவர்களில் பல தமிழ்ப் பெயர்களுமுண்டு. வடஅமெரிக்காவின் தொழிநுட்ப வளர்ச்சியில் தமிழ் மூளைகளிற்கும் பெரும்பங்குண்டு. புண்ணுக்கு மருந்து கட்டவே வசதியற்ற பிரதேசத்திலிருந்து வந்த தமிழர்கள் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் அணிக்கு தலைமை தாங்குகின்ற மேலான கல்வியறிவுமுண்டு. ரொறன்ரோவில் வீதிக்கு வீதி கோயில் இருப்பது மட்டும் தமிழனின் கால்தடங்கள் அல்ல, அரசியல், பொருளாதார வெளியில் அவனுடைய பங்களிப்பு பெறுமதிமிக்கவை. ”ஒற்றுமையில்லாத் தமிழன்” என்று கிண்டலடித்தவர்களிற்கு சவாலாக, ஒரு தமிழச்சி கனடா நடுவண் அரசில் எம்.பி யாகி பாராளுமன்றம் சென்ற வரலாறும் இங்குண்டு.

செந்தமிழ் வீசிய தேசத்தில் தமிழ் இன்று கிண்டல் மொழியாக சினிமாவில் சித்தரிக்கப்படுவது காலத்தின் நியதியாகி இருக்கலாம்; நவீனமும் கணணியும் தமிழ்மொழியின் வீச்சை குறைத்துப் போகலாம்; சொந்த நாடில்லா மொழி என்பதால் மாற்றான் காலடியில் கசங்கிப் போகலாம்; போற்றப்பட வேண்டிய சங்க இலக்கியங்கள் கிராமத்துக் கடைகளில் சீனிச்சுருள்களாக மாறலாம். சந்தானத்தின் சினிமாத் தமிழும் இணையங்களில் உலாவரும் சிறுபிள்ளைத் தமிழும் தான் எங்கள் தமிழ் என்று எதிர்கால சந்ததி புரிந்து, தங்களிற்குத் தாங்களே கறை பூசிக் கொள்ளலாம்; லகர, ளகர, ழகர வேறுபாடுகள் புரியாமல் எழுத்தாளர்களே குழம்பிப் போகலாம். எது எப்படி மாறினாலும் நமது வாழ்வில் தமிழ் மணம் எப்போதும் கமழ்ந்து கொண்டே இருக்கவேண்டும். கோட் சூட்டிற்குள்ளிருந்தும் ஒரு வேட்டியின் வாசம் வரவேண்டும். ”நான் தமிழன்” என்று சொல்ல ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படும்போது இவை சாத்தியமே. தீட்டப்படாத எந்தக் கூரிய வாளும் காலஓட்டத்தில் வெறும் இரும்புதான். கரும்பாக இருந்தாலும் உபயோகிக்கப்படாமல் கிடந்தால் துரும்புதான். போற்றப்படாத எந்த மொழியும் காலவோட்டத்தில் அழிவுதான். மந்திரமும் கிரகமும் தமிழனின் மண்டையிலிருந்து போகும்வரை சில சமூகப் புரட்சிகள் சாத்தியமல்ல. இந்தத் தொல்லைகளிருந்து விடுபடப்போகும் அடுத்த தலைமுறை மொழிசார்ந்து, இனம் சார்ந்து பேரெழுச்சி கொள்ளும் என்பதில் ஐயமில்லை. உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சிறார்கள் எடுக்கும் இப்படியான தமிழ் விழாக்களே இதற்கு சான்று பகர்கின்றது. சோரம் போவதும் சோர்ந்து போவதும் தமிழன் அப்பப்போ சந்தித்த நிகழ்வுகள்தாம். மாறாக, ஒவ்வொரு தடவையும் அவன் விழித்தெழுந்து, வீறுநடை போட்ட, வரலாறுகள் நிறையவே உண்டு. பணம் என்னும் அளவுகோல்தான் காலம் காலமாக வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கின்றது. ஆனாலும், பண்பாடு எனும் தளத்தில் முகவரியோடு நிற்கும்போது மட்டுமே அது அழகு பெறுகிறது. கொண்டாடப்படவேண்டியவை நம் தற்காலிக வெற்றிகள் மட்டுமல்ல; நம் மூதாதையரின் பொக்கிசங்களுமே.

ஆக்கம்: அ.பகீரதன்