A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, January 27, 2012

துறவறம்


முருகனைப் படைத்துநீ-இரு
முந்தானை கொடுத்தவனே
துறவறம் எதற்கு சொல்லடா?

கட்டிலில் கனியிருக்க
கட்டியவள்(ன்) கனிவிருக்க
துறவறம் எதற்கு நில்லடா?

கற்க நிறையவுண்டு
கண்டறிய இன்னுமுண்டு
துறவறம் என்ன சொல்லடா?

ஐந்தறிவு ஜீவனுக்கே
அழகாய் வாழ்விருக்கு
சொந்தறிவு இருந்துமா
சொந்தபந்தம் துறக்கிறாய்?

மொட்டுஒண்ணு மலர்ந்தல்லோ
மாலையா விழுந்ததடா
அணிந்து மகிழ்ந்தவனே
அதற்குள் அறுப்பதென்ன?

ஆயிரம் பூவிருக்க
வண்டிற்கென்ன துறவறம்?
ஆழ்கடல் நீரிருக்க
மீனிற்கென்ன துறவறம்?

பசுந்தரை நோக்கியல்லோ
பசுமாடு துறவுபூணும்
வாழும்கலை புரிபட்டா
துறவறம் எதற்குவேணும்

அகண்ட உலகமடா
ஆயிரம் கலகமடா
ஆழ்கடல் வாழ்விருக்கு
அள்ளிநீ பருகடா

துறவறம் துறவடா
அறநெறி வாழ்வடா
துணிந்துவானில் பறவடா
துறந்துஎன்ன பலனடா

பூமிக்குநீ பாரமில்லை
பூவிற்குநீ பகையுமில்லை
புதிய உலகுகண்டு
பூவாளம் பாடடா

வாழ்க்கையறியா இளமையடா
வாழ்வில்அதுவே இனிமையடா

வாழ்க்கையறிந்த பருவமடா
எல்லாம் ஒரு மாயமடா
எளிதில் ஆறா காயமடா

துறவறம்
என்பது மருந்தாடா
துறந்தவர்
மனசும் நிறைந்ததாடா

படைத்தவன் படியளப்பான்
பாமரனின் பேச்சப்பா
உன்விதியை தினமும்
படைப்பவன் நீயப்பா

இனியதை நினைத்து
இல்லறம் வென்று
இயற்கையோடு இசைந்துவிடு.


உங்கள் நேரத்திற்கு நன்றி.

நட்புடன்,
அ.பகீரதன்

Monday, January 23, 2012

தைப்பொங்கலை முன்னிட்டு, ஒட்டாவா முத்தமிழ் கலாமன்றம் நடாத்திய முத்தமிழ் விழாவில், எனது பேச்சின் எழுத்துருவாக்கம்.


1. ஆதிசிவனால் அருளப்பட்டு அகத்தியரால் வளர்க்கப்பட்டது என்று பாரதி போற்றிய தமிழ்மொழியின் பெருமையை; தமிழ்மொழியின் அணைவால்தான் வடமொழி நலிவுறாமல் இருந்தது என்று நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் பெருமைப்படுத்திய தமிழின் பெருமையை; கம்பனின் கவிதையால், இளங்கோவின் காப்பியத்தால், பாரதியின் புரட்சித்தமிழால், அண்ணாவின் அடுக்குமொழியால், கண்ணதாசனின் கனிமொழியால் ஏற்றம் பெற்ற தமிழின் பெருமையைப் பறைசாற்ற அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல்லாயிரக்காண தமிழ் புரவலர்களால் கோலோச்சி கொழுந்து விட்டு எரியும் அன்னைத்தமிழின் பெருமையை பேச வந்திருக்கின்றேன்.

2. பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே, பேரன்பிற்குரிய தாய்மார்களே, சகோதர சகோதரிகளே..வணக்கம்
.
3. இன்று தைப்பொங்கள்நாள், உலகப் பண்டிகைகளிற்கெல்லாம் முன்னோடியாகவும் மூத்தபண்டிகையாகவும் இருப்பது எங்கள் தைப்பொங்கல் திருநாள். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் இன்றி இந்த உலகமோ இந்த உடலோ இயங்கமுடியாது. அதனை தத்ரூபமாக எங்கள் முன்னோர்கள் தைப்பொங்கள் விழாவில் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். நிலத்தினை குறிப்பதற்கு மண்பானையையும், அதற்குள்ளே நீரையும், நீருக்குமேலே வாயுவையும், பானைக்கு கீழே நெருப்பையும் வளர்த்து, ஆகாயத்தை நோக்கி, ஐம்பூதங்களையும் ஒன்றிணைத்து வழிபாடு செய்தார்கள்.  உழுது உழுது நெல்லை எங்களிற்கு தந்துவிட்டு வைக்கோலை உண்ணுகின்ற மாட்டை போற்றுவதற்காக மாட்டுப் பொங்கல் செய்து எல்லா உயிர்களையும் சமமாகா நடத்துகின்ற சமத்துவத்தை உலகத்திற்கு போதித்து, அந்த எருது வாகனத்தை சிவபெருமானின் வாகனமாக போற்றி அழகு பார்த்த ஒரேயொரு அற்புதமான கலாச்சாரம் எங்களுடையது.

4. ஏறக்குறைய 6700 உலகமொழிகளில் எட்டே எட்டு மொழிகளைத்தான் செம்மொழியாக தெரிவு செய்திருக்கிறார்கள். தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடு நிலைமை, தாய்மைத் தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகைமைகளின் அடிப்படையில்தான் ஒருமொழி செம்மொழியாக தெரிவுசெய்யப்படுகிறது. அந்த வகையில் தமிழ்மொழியும் செம்மொழியாக இருப்பது மிகப்பெருமைக்குரியது.

5. தமிழ் மிகப்பழமையான மொழி. அகநானூறு, புறநானூறு போன்ற கடைச்சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழை நாம் சுவைத்தோம் .தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எமக்கு வாய்த்த்து. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழைக் கண்டறிந்து பெருமைப்பட்டோம். லெமிரியா என்று சொல்லப்பட்ட குமரிக் கண்டம் மட்டும் கடல் பெருக்கில் சிக்குண்டு அழியாமல் இருந்தால் 50 ஆயிரம் ஆண்டுகளிற்கு முந்தைய தமிழையும் நாம் சுவைத்திருக்க முடியும்.

6. இலக்கணத்தைச் சரியாக பேசுகின்ற தொல்காப்பியம் போன்றதோர் பழமை இலக்கணம் நூல் எந்த மொழியிலும் இல்லை. வீரத்தையும் தூய காதலையும் மனிதனை மையப்படுத்தும் பாடல்களும் கொண்ட சங்க இலக்கியம் போன்றதோர் பழமையான இலக்கியம் எந்த மொழியிலும் இல்லை. மனித சமூகமொன்றிற்கு தேவையான அனைத்து அறங்களையும் கொண்ட திருக்குறள் போன்றதோர் அற இலக்கியம் எந்த மொழியிலும் இல்லை. சிலப்பதிகாரம் போல ஒரு இனத்தின் வாழ்வுமுறையை சொல்லுகிற ஒரு தொன்மையான காப்பியம் எந்த மொழியிலும் இல்லை. இப்படியெல்லாம் பெருமை கொண்ட எங்கள் தமிமொழி சைவ, வைணவ, சமண, பவுத்த, கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும், தாங்கி வளர்ந்து கொண்ட பெருமையை நீங்கள் எல்லோரும் எண்ணி எண்ணி புளங்காகிதம் அடையவேண்டும்.

7. நண்பர்களே கொஞ்சம் வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள். இந்த மேடையில் வரலாற்றை பகிர்ந்து கொள்ளாமல் எந்த மேடையில் நாம் பகிர்ந்து கொள்ள முடியும். வரலாற்றை தொலைக்கிறபோது நாம் எமது வாழ்வையும் சேர்த்துத் தொலைக்கிறோம். 1816ல் எல்லிசு என்ற வெளிநாட்டு மொழியாய்வாளரும், 1856ல் கால்டுவெல் என்ற ஐரோப்பிய அறிஞரும், திராவிட மொழிக்குடும்பம் மிகத்தொன்மையானது என்றும் அக்குடும்பத்தின் முதன்மை மொழிதமிழ்மொழி என்றும் நிரூபித்தனர். 

8. 1927ல் ஜான் மார்ஷலின் சிந்து வெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதனை நீருபித்தார். சோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப், தமிழர்கள், தென்பகுதியிலிருந்து வடதிசை நோக்கிப் குடியேறினர் எனவாதிட்டு தமிழர்களின் தொன்மையை நிலைநிறுத்தினார். சோவியத்நாட்டுப் பேராசிரியர் கோந்திர தோவ், உலகின் பழமை மிகு நாகரிகங்களின் மூன்றில் இரண்டு பங்கு திராவிடர்களுக்குச் சொந்தமானது என்று வலியுறுத்தினார். ஆரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு, திராவிட வழிபாடேயாகும். ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள், சிந்து வெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன. “”மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கும் பரவியது தமிழர் நாகரிகமேஎன்று கூறியுள்ளார். எழுத்து முறையை எகிப்தியருக்குக் கொடையாகக்கொடுத்ததும் திராவிடர்களே. மெசபடோமியா நாகரிகமும், எலாமியர் ஏற்றமும் குமரிக் கண்டத் தமிழரிடமிருந்து சென்றவை. பாபிலோனிய நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் நாங்கள்தான். 
  
9. வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் எத்தனை தடவை நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். மொழிக்காகவும் வழிபாட்டுமுறைக்காகவும் வரலாற்றுக்காகவும் தொடர்ந்து நாம் தோற்கடிக்கப்பட்டோம். கி.முன் தொடங்கிய எங்கள் வீழ்ச்சி இன்று 21 நூற்றாண்டுவரை வந்திருக்கிறது. தமிழனுக்கு ஒரு ஆழமான மொழியும், வரலாறும், பண்பாடும் இருக்கும் வரை நாம் தொடர்ந்து எழுந்துகொண்டே இருப்போம். தோல்விகள் உண்மையான உணர்வுள்ளவர்களை சாகடிப்பதில்லை. 

10.இவ்வாறெல்லாம் மொழியால், வழிபாட்டுமுறையால், கலையால் கலாசாரத்தால் ஏற்றம் பெற்ற எங்கள் வாழ்க்கை இன்று தேடுவாரற்றுக்கிடக்கிறது. உலகத்தில் எந்த இனத்திடமும் இல்லாத கேவலமான சமூதாய போக்கு நமக்கிருக்கிறது. நமது மொழிப்பற்றை நாமே நையாண்டி பண்ணுகிறோம். ஏற்றத்தாழ்வுகள் அற்ற, ஒரு நோக்கத்திற்காக ஒன்றுபட்டு உழைக்கின்ற நல்ல பக்குவம் எமக்கில்லை. இன்னும் வரட்டுக் கௌரவத்தில் இருக்கிறோம். எல்லாமே பணம் பணம் என்று ஒதுங்கிக் கொள்ளுகின்ற சுயநல மனோநிலையில் நாம் வாழ்கிகிறோம். உயர்ந்த சிந்தனை எள்ளளவும் நமக்கில்லை; மொழிக்காகவும் நம் பாரம்பரியத்திற்காகவும் கொஞ்சமாவது வாழவேண்டும் என்ற சிறிது எண்ணம் கூட இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நண்பர்களே,வயதுமுதிர்ந்து, வாலிபம் தொய்ந்து, வாழ்க்கை சலிப்படைகிறபோது நீங்கள் விட்ட இந்த சமூதாயப் பிழைகளிற்காக கண்ணீர் வடிப்பீர்கள் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.  

11. எங்கள் வரலாற்றை, கலாசாரத்தை, மொழியை கட்டிக்காக்க நாம் எப்போதும் முன்னின்றதில்லை. சுவாமி விவேகனாந்தரை தெரிந்த எங்களுக்கு தமிழ் வளர்த்த எங்கள் மட்டகளப்பு விபுலானந்த அடிகளை தெரியாது; தமிழின் அழகியலை வெளிப்படுத்திய இலங்கை ஆனந்தகுமராசாமியை மறந்துவிட்டோம். சோமசுந்தரப்புலவரையும், ஈழத்துசித்தர்களையும் என்றோ தொலைத்துவிட்டோம். கொஞ்சக்காலத்தில் ஆறுமுக நாவலைரையும் கைலாசாபதியையும் மறந்துவிடுவோம். இனியும் சுபாஸ்சந்திரபோஸ் அவர்களைத்தான் வீரனாகச் சொல்லிக் கொண்டிருப்போம்; பிரபாகரனை மழுங்கடித்துவிடுவோம். இந்த மனோநிலை நம்மிடம் இருக்கும் வரை நாம் தோற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும். நமக்கான பாதைகளிற்கு நாம்தான் தடையாக இருப்போம்.

12. இந்த பிரபஞ்சத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு முழுமை இருக்கிறது; மரத்தின் முழுமை பூத்துக்குலுங்குவதைப்போல, மண்ணின் முழுமை தாங்கிக் கொள்வதைப்போல. எங்கள் ஆன்மாவிற்கும் முழுமை இருக்கிறது. முடிவில்லாத எங்கள ஆன்மாவும் பிரபஞ்சத்தோடு ஒன்றி முழுமையடைய விரும்புகின்றது. அதற்கு உள்ளுணர்வு, தர்க்கம், கற்பனை என மூன்று வழிமுறைகள் உண்டு. மொழியை இரசிப்பதுனூடாக கலையை இரசியுங்கள்; கலையை இரசிப்பதினூடாக உங்கள் வாழ்வை நேசியுங்கள். இந்தப் பாதையூடாக உங்கள் ஆன்மாவை பிரபஞ்சத்தோடு இணையுங்கள். இந்த வழிமுறையை உங்கள் குழந்தைகளிற்கு கற்றுக்கொடுங்கள். 
13. மொழிக்கு நாடு என்ற எல்லை கிடையாது; இலக்கியத்திற்கும் நாடு, மொழி என்ற வரையறை கிடையாது. எனவே உங்கள் குழந்தைகளை கல்வியறிவும் உடற்பலமுள்ளவர்களாக வளர்ப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இலக்கிய இரசனையுள்ளவர்களாக வளருங்கள். அவர்கள் தமிழிலக்கியத்தை அறிய உதவுங்கள். வெறும் பொருளாதாரத்தை மட்டும் மையமாக வைத்து மருத்துவராகவும் பொறியியலாளராகவும், சட்டத்தரணிகளாகவும் வரும் இத்துப்போன வாழ்க்கைமுறை  எம்மோடு தொலைந்து போகட்டும். அவர்கள் இலக்கியத்திற்கூடாக முழுமையடையட்டும். இலக்கியத்திற்கூடாக தம்மை நிலை நிறுத்திக்கொள்ளட்டும். தம்மை தாமே கண்டு அடையட்டும். வாழ்க்கைகான பலமுகங்கள் இருக்கின்றது, அதை அவர்கள் தேடியடையட்டும். 

14. தங்கள் குழந்தகளை கனேடிய கலாசாரத்தின்படி ஆளுமையுள்ளவர்களாக வளர்த்துவிட்டு வாழக்கை என்று வருகிறபோது கண்ணீர் விடுகின்ற தமிழ்பெற்றோர்களை நான் சந்தித்திருக்கிறேன். எனவே நீங்கள் அப்படியொரு தப்பை விட்டுவிடாதீர்கள். உங்கள் குழந்தைகளிற்கு தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் கற்றுக்கொடுங்கள். புலம்பெயர்ந்த எங்களின் குழந்தைகளிடமிருந்து குறைந்தது பத்து தமிழ் அறிஞர்களாவது  உருவாகட்டும், பத்து சினிமா இயக்குனர்கள் உருவாகட்டும்; பத்து இசையமைப்பாளர்கள் உருவாக்கட்டும்; பத்து நாவலாசிரியர்கள் உருவாகாட்டும். 

15. தங்களை தாங்களே தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் புலம்பெயர்ந்த தலைவர்களும், தலைவர்களாக வரத்துடிக்கும் இளம் தலைவர்களும் ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள். தங்கள் மொழியை பண்பாட்டை சமூகத்தை அடுத்த தளத்திற்கு கொண்டுபோகவேண்டும் என்ற உண்மையான விருப்பும், தியாக உணர்வும் உள்ளவன் மட்டுமே தலைவனாக முடியும். எல்லோரையும் உள்வாங்கி, எல்லோருடைய உழைப்பையும் முன்னிறுத்தி, எல்லோருயும் இணைத்துப் போகின்ற பக்குவம் உள்ளவனே உண்மயான தலைவனாக உயரமுடியும். மற்றவர்கள் எல்லாம் காலத்தால் அவமானப்படுத்தப்படுவார்கள்.

16. மற்றவனுக்காக வாழ்கின்ற வாழ்க்கை முறையை,  புறநானுறில் நோன்பு என்று சொல்வார்கள், நீங்கள் உங்கள் மொழிக்காகவும் பண்பாட்டிற்காகவும் நோன்பு இருங்கள். மிகப்பெரிய புரட்சி செய்த பாரதியை எல்லோரும் இகழ்ந்தார்கள்; பிழைக்கத்தெரியாதவன் என்று நக்கலடித்தார்கள். ஆனாலும் பிராமணன் என்ற மதிப்பை இழந்து சமூகத்தில் வாழ பாரதி துணிந்தான், பிரிட்டிஸாரின் சேர் பட்ட்த்தை அவன் எதிர்பார்க்கவில்லை. பஞ்சத்திலும் பசியிலும் அவன் உண்மைக்காக வாழ்ந்தான். இந்த துணிவில் ஒருதுளியையாவது நாம் பெறவேண்டும். கொலைவெறி பாடலுக்காக நடிகர் தனுஸிற்காக பிரதமர் மன்மோகன்சிங் விருந்துபசாரம் கொடுத்த்தை செய்தியாக படித்துவிட்டு போய் தூங்காமல் ஒரு பாரதியாய் எழுந்து அந்த விருந்துபசாரத்தின் சூழ்ச்சியை அறிந்து கொள்ளுங்கள்

17. தன்னை, தன்குடும்பத்தை, தன்சமூகத்தை, தன்மொழியை தன் கலாசாரத்தை சுமப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் உங்களை உங்கள் தாய் பத்துமாதம் சுமந்தாள். அந்த நம்பிக்கையை கடைசிவரை விட்டுவிடாதீர்கள். மொழியை நீங்கள் இழந்தால் வரலாற்றை இழப்பீர்கள், வரலாற்றை இழந்தால் எல்லாவற்றையும் இழப்பீர்கள். மறந்துவிடாதீர்கள், உங்களை நம்பி ஒரு தேசமும் இருக்கிறது.

18. முத்தமிழ் கலாமன்றம் என அழகு பெயர்வைத்து, இயல் இசை, கூத்து என்றகின்ற முத்தமிழை வளர்க்க விழா எடுத்து பொன்னான முயற்சி செய்யும் சான்றோர்களிற்கு, தமிழார்வமிக்க இந்த சபையின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி, வணக்கம்.

Friday, January 20, 2012

மௌனம்


செத்தவீட்டில் கூட
அழ மறுக்கிறார்கள்
எங்கள் ஒப்பாரிகளை
எங்கே ஒப்புவிப்பது?

முதலிரவில் கூட
பேச மறுக்கிறார்கள்
எங்கள் உணர்வுகளை
எங்கே கொட்டுவது?

பள்ளியில் கீதம்
கோயிலில் தேவாராம்
மரணத்தில் சுண்ணக்கல்
மௌனத்தில் என்னாகும்

கடவுளின் மௌனம்
பக்தனுக்கு பெருலாபம்
காதலனின் மௌனம்
காதலிக்கு பெருநட்டம்

படுக்கையறை மௌனம்
பலகோடி லாபம்
சிநேகிதியின் மௌனம்
சிந்தித்தால் சலனம்

ஆசையின் மௌனம்
அறியாமையின் மௌனம்
ஆற்றாமையின் மௌனம்
வாழ்வின் துர்சாபம்

அடக்கத்தின் மௌனம்
ஆளுமையின் மௌனம்
அறிவுமுதிர்ச்சியின் மௌனம்
வாழ்வின் பெருவரம்

பேரழகின் மௌனத்தை
பேரறிவின் மௌனத்தை
பேரன்பின் மௌனத்தை
பேசாமலே ரசித்துவிடு

மௌனத்தின் மொழியாலே
மனத்தை நீயாளு
மௌனத்தை கலைத்து
சமூகத்தில் நீவாழு

பாரதியின் குரலால்
பாவேந்தன் குரலால்
சமூக வேசதாரிகளை
சாவதமாய் கிழித்துவிடு

உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, January 13, 2012

தப்பு


தப்பென்றும் சரியென்றும்
இருவேறு வாழ்வுண்டா
தப்பை சரிசெய்தால்-வாழ்வின்
பெறுபேறு வேறுண்டா

சரியான ஆளுக்கும்
சரிபாதி தப்பாகும்
வெறியோடு போராடு
வெற்றியில் நீராடு

தப்பில்லா வாழ்வென்று
தரணியில் எங்குண்டு
தப்பின்றி வாழவே
தரணியில் போராடு

ஏவாள்உண்ட கனியே அழகு                             
அவளின் தப்பேஇந்த உலகு
அம்மாவின் கனிவே முதல்இரவு
அந்தஇரவின் தப்பே உன்உசிரு

பசிக்கிற பூனைக்கு
பால்கிண்ணம் தப்பேயில்லை
ஜெயிக்கிற குதிரைக்கு
கடிவாளம் தடையேயில்லை

பூசிக்கும் சாமிக்காய்
பூபறிச்சா தப்பேயில்லை
தப்பென்ன தற்கொலையா
எழடாநீ எரிமலையா

முன்னேறும் காலுக்கு
முள்எல்லாம் தடையேயில்லை
முன்னேறும் விழியோடு    
முன்னாலே சுழியோடு

ஆண்டவன் சந்நிதியில்
அல்லாமே சரிதாண்டா
ஆள்பவன் நீயாகு
அதுவரை தீயாகு

வாழ்வென்ன புத்தகமா
வழுவின்றி அச்சடிக்க
தப்பிக்கும் வழியோடு                              
தப்பைநீ சரிசெய்யு
                   
வாய்ப்பைநீ வரமாக்கு
வாழ்வைநீ தரமாக்கு
உழைப்பைநீ உரமாக்கு
உன்னைநீ உருவாக்கு

நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, January 6, 2012

முதுமை


தலை நரைத்தும்
ஆசை நரைக்கா
அறுபது முதுமையா

ஆசை அறுந்தும்
பாசம் அறுக்கா
எண்பது முதுமையா

அறிவின் வழிசென்று
அன்பை பொழிகின்ற
இளமை முதுமையா

அறிவின் தேர்ச்சி முதுமையா
அனுபவ திரட்சி முதுமையா
அன்பின் அரவணைப்பு முதுமையா

தலைநரைத்து தோல்சுருங்கி
நகம்மங்கி மார்புதொய்ந்து
கூன்விழுந்து குறிசுருங்கி …..இதுமுதுமையா

பகலுக்கு
இரவு முதுமை
இலைக்கு
சருகு முதுமை

கவிதைக்கு
உரைநடை முதுமை
பெண்ணுக்கு
தாய்மை முதுமை

வாழ்வில்
முதுமை இல்லா
புதுமை ஒன்றில்லை

மனிதனுக்கு…….
மனதின்
முழுமைதான் முதுமை

மனிதனுக்கு………
இளமையில்
கனிகின்ற அன்பே முதுமை

மனிதனுக்கு……..
இளமையில்
துணிகின்ற துணிவே முதுமை

முதுமை….
மனிதனுக்கு
காலம் வழங்கிய பொன்னாடை

முதுமை…..
மனிதனுக்கு
வருசங்கள் வழங்கிய மொய்

முதுமை
மனிதனின்
உழைப்புக்கு கிடைத்த ஊதியம்

முதுமை
மனிதனின்
இளமைக்கு கிடைத்த தண்டனை

முதுமை…..
மறுத்தாலும் ஒட்டிக் கொள்ளும்
வெறுத்தாலும் கட்டிக்கொள்ளும்

அறிவில் முதுமையும்
ஆளுமையில் இளமையும்
ஆயுள்வரை வரவேண்டும்

முதுமை பற்றி சிந்தித்து
ஒருவர் புத்தர் ஆனார்
மற்றவர்கள் என்ன ஆனார்?

கரியின் முதுமை
வைரம் போல்
உனது முதுமையும்
அர்த்தமாகட்டும்.

உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
.பகீரதன்