A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, January 13, 2012

தப்பு


தப்பென்றும் சரியென்றும்
இருவேறு வாழ்வுண்டா
தப்பை சரிசெய்தால்-வாழ்வின்
பெறுபேறு வேறுண்டா

சரியான ஆளுக்கும்
சரிபாதி தப்பாகும்
வெறியோடு போராடு
வெற்றியில் நீராடு

தப்பில்லா வாழ்வென்று
தரணியில் எங்குண்டு
தப்பின்றி வாழவே
தரணியில் போராடு

ஏவாள்உண்ட கனியே அழகு                             
அவளின் தப்பேஇந்த உலகு
அம்மாவின் கனிவே முதல்இரவு
அந்தஇரவின் தப்பே உன்உசிரு

பசிக்கிற பூனைக்கு
பால்கிண்ணம் தப்பேயில்லை
ஜெயிக்கிற குதிரைக்கு
கடிவாளம் தடையேயில்லை

பூசிக்கும் சாமிக்காய்
பூபறிச்சா தப்பேயில்லை
தப்பென்ன தற்கொலையா
எழடாநீ எரிமலையா

முன்னேறும் காலுக்கு
முள்எல்லாம் தடையேயில்லை
முன்னேறும் விழியோடு    
முன்னாலே சுழியோடு

ஆண்டவன் சந்நிதியில்
அல்லாமே சரிதாண்டா
ஆள்பவன் நீயாகு
அதுவரை தீயாகு

வாழ்வென்ன புத்தகமா
வழுவின்றி அச்சடிக்க
தப்பிக்கும் வழியோடு                              
தப்பைநீ சரிசெய்யு
                   
வாய்ப்பைநீ வரமாக்கு
வாழ்வைநீ தரமாக்கு
உழைப்பைநீ உரமாக்கு
உன்னைநீ உருவாக்கு

நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment