A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, November 27, 2011

கார்த்திகைப் பூக்கள்


வலியை மையாக்கி
வலிமையை கையாக்கி
வடிக்கிறேன் கவியொன்று
வடிகிறது கண்ணீர்த்துளியொன்று
 
ஒருகையில் பூவொன்று
மறுகையில் பாவொன்று
விழிமூடி அழுகின்றேன்
வழிதேடி அலைகின்றேன்

தீபமேற்ற யாருமில்லை
தீயாய் எரிகிறது மனம்
பூ தூவ நாதியில்லை
புழுவாய் துடிக்கிறது மனம்

கடவுளுக்கு சமானமான
கார்த்திகைப் பூக்கள் எல்லாம்
காடையரின் காலடியில்
கசங்கிக் கிடப்பதென்ன

கைவிலங்கை உடைத்தெறிந்த
கார்த்திகைப் பூக்கள் எல்லாம்
காலடியில் வீழ்ந்த
காலத்தின் கோலமென்ன

யார்விட்ட சாபமோ
பார்செஞ்ச மோசமோ
கல்லறையெல்லாம் காகத்தின்
கழிப்பறையான கொடுமையென்ன

போருக்குத் துணிந்த புலிகளென்று
பாருக்குத் தெரிந்த பின்னும்
யாருக்குத் தேவையென்று
நோர்வேக்கு தலைசாய்த்தீர்

நேர்வேய் தெரியாத நோர்வே
நேர்மை அவனிடம் நோவேய்
பார்வை பிழையான நோர்வே
பாழாய் போனதே எம்வேய்

இந்தியத் தலையீடு இழுக்கு
எண்பதுகளில் தெரியுமே உமக்கு
ஈழம்தான் இறுதி இலக்கு
எப்படிப் பிசகியதோ உங்கள் கணக்கு
 
உலக மாற்றமென்று
உண்மை தோற்றிடுமோ
உலகப் பொருளாதாரமென்று
உழைப்பு தோற்றிடுமோ
 
எண்ணாடும்சேர்ந்து எண்திசையும்வந்து
ஏறிநின்று அடித்தபோதும்-எழுந்து நின்று
மறத்தமிழன் நாமென்று மார்புதனை கொடுத்தீரே-உமை
மறப்பதென்றால் மறுஜென்மம் வேண்டுமய்யா

விண்ணிலிருந்து கண்ணீரை தாருங்கள்
விடுதலையாய் மீண்டும் வாருங்கள்
மண்ணிலிருந்து மரமாய் நிமிருங்கள்
தமிழருக்கு வரமாய் வாருங்கள்

தமிழினம்....
தவித்துக் கிடக்கிறது
தனித்துக் கிடக்கிறது
செய்வதறியாது
செத்துக்கிடக்கிறது

சேர்ந்தியங்க யாருமில்லை
சேர்ந்தழவே நாதியில்லை
செய்வதற்கு நிறைய உண்டு
செய்வதற்கு யாருண்டு

நெஞ்சை நிமிர்த்திடு மனிதா
நீதி கிடைத்திடும் ஒருநாள்
சத்தியமாய் வாழடா தமிழா
சமத்துவம் வந்திடும் திருநாள்

வாழ்த்துவோம்
வணங்குவோம்
வழிபடுவோம்
வழிசமைப்போம்

நட்புடன்,
அ.பகீரதன்






Friday, November 25, 2011

காதலியின் கல்லறை (பகுதி 2)


கல்லூரிப் பெண்ணுக்கு
கல்லறையில் என்னவேலை?
கல்யாணப் பெண்ணுக்கு
கல்லறைமீது என்ன காதல்?

கர்ப்பமல்லோ தரிக்க வேணும்-ஏன்
கல்லறையை தரிசித்தாய்?
தேனிலவல்லோ போக வேணும்-ஏன்
தேய்நிலவாய் ஆனாய்?

என்னில் வீழ்வதென்று
விண்ணில் வீழ்ந்தாயோ?
என்னை வெல்வதென்று
இயமனிடம் தோற்றாயோ?

நான் இரவல் வாங்கியதால்
இயங்க மறுத்ததோ உன்னிதயம்-என்
கவிதைகளை இரசிப்பதற்கா
கல்லறையில் தூங்குகிறாய்

காதல் வலித்ததென்றா
கல்லறையை நீ தேர்வு செய்தாய்
இந்தச் சில்லறையின் சேட்டையாலா
அந்தக் கல்லறையில் ஓய்வுபெற்றாய்

அப்படியே நிலைத்திருக்கு
அழகான நினைவெனக்கு
கண்ணீர் துளியோடு
கடைசியாக நீ சென்றகாட்சி

மந்திரமாய் புன்னகைத்து-என்னுள்
தந்திரமாய் வந்தவளே
விருந்துண்ணும் வயதினிலே
மருந்துண்ட மர்மமென்ன?

இரட்டைப் பின்னலிட்டு
இயல்பான முகம் அமைந்து
பாடசாலை போறபெண்ணே
பாடையிலே போறெதென்ன?

பள்ளிச் சிறுமியடி-என்
பருவத்துச் சிறுக்கியடி
அள்ளி அணைக்குமுன்னே
கொள்ளி அணைச்சதென்ன?

தொடும்தூரம் நின்றுகொண்டே
தொலைபேசியில் வருபவளே
தொலைதூரம் சென்றுவிட்டு
தொலைபேசியை எங்குவிட்டாய்?

முத்தங்கள் தந்ததில்லை-நீ
முந்தானை விரித்ததில்லை-என்னுள்
எப்படிநீ கலந்தாயோ-ஏன்
கல்லறையில் வீழ்ந்தாயோ?

அடைந்துவிட நானிருக்க-நீ
அடங்கிவிட்ட கொடுமையென்ன?
சேர்ந்திடவே நாளிருக்க
சேர்ந்துவிட்ட சேதியென்ன?

சுண்ணக்கல் வேண்டாம்-என்கண்மணிக்கு
சுடுகாடும் வேண்டாம்
இதயத்தில் இருப்பவளை-என்
இல்லத்தில் வைத்திடுங்கள்

மலர்வளையம் வேண்டாம்-என்கண்மனிக்கு
மந்திரமும் வேண்டாம்
என்எண்ணத்தில் இருப்பவளை
என்னிடத்தில் தந்திடுங்கள்

கல்லறையில் உறங்குகிறோம்
உயிரோடு நானும் உயிரில்லாமல் நீயும்
உன்னோடு வாழத்தான் முடியவில்லை
ஒன்றாய் சாகமுடிகிறதா பார்ப்போம்

வாடிக்கிடக்கிறேன் உன்பூந்தோட்டத்தில்
நானும் ஒரு பூவாய்-அவை
வாடி விழுகின்றன சோகத்தில்-நான்
விழுந்து வாடுகிறேன் மரணத்தில்

உங்கள் நேரத்திற்கு நன்றி.

நட்புடன்,
அ.பகீரதன்

Friday, November 18, 2011

காதலியின் கல்லறை (பகுதி 1)


எழுதக்கூடாத ஒன்றை
எழுத வைத்துவிட்டாள்
என் காதலி

ஈகோவில் பிரிந்துபோனாய்-ஒரு
ஈகூட இங்கு இல்லை(கல்லறையில்)

யாரோடு கதைத்துவிட்டு-எனை
வேரோடு வீழ்த்திவிட்டாய்

மிஸ்கோல் விடுகிறவள்
மிஸ்ஸாகி கிடக்கிறாள்

என்மிஸ்சாக வேண்டியவள்
ஏன்மிஸ்சாக வேண்டுமய்யோ

என் இதயத்தில் வீழ்வதென்று
நீ இடம் மாறி சுடுகாட்டில் வீழ்ந்தாயோ?

என் உயிருக்குள் வரும்வேளை-உஷ்ணமாகி
உன் உயிரை சிதைத்தாயோ?

உன் விளக்கை ஏற்றி வைத்து-பாதகி
என் விளக்கை அணைத்துவிட்டாய்

என்ன அவசரத்தில்
ஏற்றி வைத்தாய் அவ்விளக்கை
இக் கலியுகத்தில்
எரிந்தபடி கழிகிறது  என்வாழ்க்கை

பள்ளிச் சிறுமியடி-என்
பாவாடை தேவதைநீ
பாடையிலே போகையிலே-மனசு
பத்தி எரியுதடி

கண்ணகியின் தங்கையடி-என்
கவிதைகளின் அங்கமடி
உன்முகத்தை மூடுகையில்
என்உசிரு போகுதடி
 
நிலாவில் தனித்திருந்து
நித்தமும் கதைபேசி-என்மனதில்
சுத்தமாய் குடிகொண்ட-என்சித்திரமே
நிலவுக்கே நீ சென்ற மர்ம என்ன?

வயசுக்கு வந்து ஓராண்டில்-என்
வாழ்வுக்குள் வந்தவளே-பெரிய
வயதாகிப் போய்ச்சுதாடி-ஏன்
சாவுக்குள் வீழ்ந்துகெட்டாய்

பச்சை மரத்தாணிபோல-என்
இளமைக்குள் வந்தவளே-என்னை
கொச்சைப் படுத்தவென்றா
கொடிநஞ்சை அருந்திவிட்டாய்

செத்துத் தொலைந்தாவது
சேர்ந்திடுவேன் உன்னோடு
சொர்க்கத்தில் நீயிருப்பாய்-அங்கே
யார்விடுவார் இப்பாவியை?

இறந்தும் உயிரோடு
வாழ்கிறாய் என்னில்
உயிரோடு இருந்தும்
இறந்து கிடக்கிறேன் உன்னில்

வந்துவிடு என்னோடு
வாழ்ந்திடுவோம் ஃபண்ணோடு-அல்லது
கலந்திடுவேன் உன்னோடு
வீழ்ந்திடுவேன் மண்ணோடு

உங்கள் நேரத்திற்கு நன்றி.

நட்புடன்,
அ.பகீரதன்

Friday, November 11, 2011

காதல் பரவசம் (பகுதி 3)


ஏனடி இப்படி அழகாய் இருக்கிறாய்
பார்வதியா உனக்கு
தாய்ப்பால் ஊட்டினாள்

ஏனடி இப்படி இனிக்கிறாய்
ஐஸ்கிறீம் கடையிலா
பிறந்தாய்

என்னடி விலை கொடுத்தாய்-உன்
சுடிதாருக்கு இத்தனை
தூக்கலாய் இருக்கிறாய்

லஞ்சமா கொடுத்தாய்
பிரமனுக்கு-இப்படி
சூப்பராய் இருக்கிறாய்

என்ன தவம் செய்தாய்?
நல்ல கவிதையை
சுமக்கிறாய் கூந்தலாய்

ஏனடி எனை மயக்கிறாய்?
சொல்லியா செய்தாய்
உன் பல்வரிசையை

ஏனடி  எனைக் கொல்லுறாய்?
உன்மார்பு கச்சைகள் என்ன
மர்லின் மன்றோவினதா?

ஆகா இது காதா-அல்லது
காமனின் தூதா?
சுண்டியிழுக்கிறது என்னை

அம்மாடியோ இது இதழா?- தேனீக்கள்
வட்டமிடும் இளநிலவா?
கசிகிறது தேனாய்

மயக்க விழியா?
மன்மத குழியா?
கவிழ்ந்து போகிறேன் சுத்தமாய்
 
இஞ்சி இடையா?
இராவணன் படையா?
வீழ்ந்து கிடக்கிறேன் மொத்தமாய்

பிளீஸ், வெட்டாதே இமையை
வெட்டுண்டு போகிறது
என் இதயம்

கோதாதே
உன் கூந்தலை
கோதாகிறது என் ஆண்மை

முகத்தோரமாய் விழுகின்ற
உன்கேசத்தில் ஒன்றையாவது தந்துவிடு
அதுபோதும் ஜீவிக்க

பூஜையறை எனக்கில்லை
தினமும் பூஜிக்கிறேன்
உன் வருகைக்காக

அழுக்காகிப் கிடந்த
என் அறையெல்லாம்
அழகாகி ஜொலிக்கிறது
உன் வருகைக்காக

வந்து வந்து போ
சும்மா-வரங்கள்
ஒன்றும் வேண்டாம்

தந்து விட்டுப் போ
உன் துப்பட்டாவை-அதுதான்
தூக்குக்கயிறாக வேண்டும்-நாம் பிரிந்தால்

நட்புடன்,
அ.பகீரதன்

Saturday, November 5, 2011

ஈழத்து நாவல்கள் ஓர் அலசல் - பகுதி 3 (தியாகப் பயணம்)



இத்தொடரின் நோக்கம்: அதிகம் கண்டுகொள்ளப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கிறது ஈழத்து நாவல்கள். அவற்றை சீர்தூக்கி ஊக்கிவிப்பதே இத்தொடரின் நோக்கம்.

நாவல் பெயர்: தியாகப் பயணம்

இந்நாவலாசிரியர்:
புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.கே.மகேந்திரன், (M.A)
புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து 1996 அமரத்துவம் அடைந்தவர். பேச்சு, எழுத்து, அரசியல், பொதுவாழ்க்கையில் நீண்ட பங்காற்றியவர்(மேலும் அறிய பிற்சேர்க்கையை பார்க்கவும்).

வெளியீடுகள்:  1 அரசியல் கட்டுரைத் தொகுப்பு, 1 சிறுகதைத் தொகுப்பு, 1 நாவல். இது இவரது கன்னி நாவல், 176 பக்கங்களைக் கொண்ட சமூகநாவல். 15 வயது முதல் 45 வயது வரை பல பத்திரிகைகளில் எழுதியுள்ளார், இலங்கை வீரகேசரி உட்பட.

கதையின் களம்:
இது ஒரு சமூக சீர்திருத்த நாவல். ஓர் கிராமத்தில் வாழுகின்ற கல்வி கற்ற முற்போக்குவாதியின் சமூக தனிப்பட்ட வாழ்க்கை முறையை களமாக தெரிவு செய்திருக்கிறார் ஆசிரியர். கல்வி கற்ற மனிதர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின்மீது வெறும் ஆளுமையை செலுத்தாமல் சமூக அக்கறையுள்ளவர்களாகவும், தனிமனித ஒழுக்கசீலர்களாகவும், மக்களின் எதிர்கால நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களாகவும் வாழ வேண்டும் என்கின்ற வாழ்க்கைமுறையை களமாக உருவகித்து எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். இனமுரண்பாடுகளின் விளைவாக கனடாவிற்கு புலம்பெயர்ந்தாலும் அவர்கள் தாயகம் பற்றிய நினைவுகளோடு வாழ்வதையும், தாயக நிர்மாணப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்ற மனோநிலையில் இருப்பதையும் கோடிட்டபடி பயணிக்கிறது இந்நாவல். யாழ்ப்பாணம், கொழும்பு, தமிழ்நாடு, கனடா என கதாபாத்திரங்கள் நகர்ந்து கதையை சுவாரசியமாக நகர்த்திச் செல்லுகின்றன.

கதையின் பின்னணி:
ஓர் கிராமத்தின் முத்தான மூன்று நண்பர்களையும், தொழிற்சங்கத்தலைவர் ஒருவரையும் வைத்து இக்கதை பின்னப்பட்டிருக்கிறது. வியாபாரம், கல்வி, வெளிநாடு என பிரிந்து போகின்ற மூன்று நண்பர்களின் நேர்த்தியான வாழ்க்கையையும், சத்தியமூர்த்தி என்கின்ற கதாபாத்திரத்தின் இலட்சிய வாழ்க்கையையும் அழகாக காண்பிக்கிறது இந்நாவல். நெறி பிறழாமல், நீதியின்பால் வாழ்கின்ற வாழ்வின் சவால்களையும், சலிப்புக்களையும், துன்பங்களையும் அதற்கெதிராக போராடுகின்ற வாழ்வையும் இந்நாவல் பதிவுசெய்திருக்கிறது. யுத்தகாலப் பகுதியை நாவலின் காலமாக கொண்டுள்ளபடியால் யுத்தத்தின் நெடிய வாசனை நாவலின் இறுதிவரை படர்கிறது.

கதாபாத்திரங்கள்:
உயர்கல்வி கற்கின்ற மதி, தனம், பரம் என்ற முத்தான மூன்று நண்பர்களும் அவர்களுடைய அயல் கிராமத்தில் வாழுகின்ற தொழிற்சங்கத்தலைவர் சத்தியமூர்த்தி என்கின்ற மத்தியவங்கி அதிகாரியும், மதியின் வீட்டில் வளருகின்ற தாசன் என்கின்ற நண்பனும், வதனா, சாந்தி என்கின்ற உபரிக் கதாபாத்திரமுமாக வளர்கிறது கதை. சத்தியமூர்த்தியினுடைய இலட்சியத்தால் ஆகர்சிக்கப்பட்ட மதி அவருடைய தாசனாக மாற, அந்த நட்பால் சத்தியமூர்த்தி விரும்பி மதியின் சகோதரியை மணம் புரிகிறார். பின்பு அவர் வாழ்ந்த இலட்சிய வாழ்வால் சத்தியமூர்த்தியின் வேலை பறிபோக, வறுமையால் மதி பல்கலைக்கழகத்தை விட்டு வெளிநாடு போக, காதலியையும் விட்டு தாசன் இயக்கத்திற்குப் போக, பரம் லண்டன் போக, தனம் முதலாளியாக கதை வீரியம் கொள்கிறது. தலைசிறந்த பேச்சாளானாகவும் தொழிற்சங்கவாதியாகவும் வருகின்ற சத்தியமூர்த்தி சத்தான கதாபாத்திரமாக வளர்ந்து வர, அவர்வழி வந்த மதியினுடைய வாழ்வும் இலட்சிய வாழ்வாக மாறுகிறது. தாசன் இயக்க முரண்பாடுகளால் வெளியேறி தனது காதலியோடு இணைய, மதி கோடி சீதனத்தை உதறிவிட்டு வதனாவை திருமணம் செய்ய கதை நிறைவு பெறுகிறது.

·          சேரிப்புறத்தில் சீரழிபவனை சிறப்பிக்கவேண்டுமென்று சிந்திக்காத தொழிற்சங்கவாதியும் பாமரனை பண்டிதனாக்க வேண்டுமென்று யோசிக்காத அரசியல்வாதியும் நாட்டுக்குத்தேவையற்றவர்கள் - சத்தியமூர்த்தி
·          தஞ்சமடைய வழியின்றித் தவிக்கும் மக்களின் நெஞ்சத்தில் கொலுவிருக்கும் கோமானாகவே உங்களைக் காண ஆசைப்படுகிறேன். தவறி நாட்டைவிட்டு நீங்கள் புறப்பட்டால் நீங்கள் பயணப்படும்போது களனி ஆற்றில் என் பிரேதம் மிதக்கும் என்று மதிவாணனும்
·          இலஞ்சப்பேய்கள் நிறைந்த இந்நாட்டில் பஞ்சப்படுவோரின் பணத்தில் மஞ்சங்கட்டுவோர் மலிந்திருக்கும் இந்நாட்களில் இலட்சத்தில் ஒருவராக இலங்கும் இவரையாவது நான் சாகவிடுவதாவது என்று வதனாவும்
·          எடமோனை கொத்தார் அந்தப்பொடிச்சியை வைச்சிருக்கிறாரடா – மனோன்மணி
·          என்னைக் கொல்லுங்கோ நான் பழிகாரி; வெட்டிப் புதையுங்கோ – மலர்
·          நாயகரா நீர் வீழ்ச்சியில் பெரும் கேள்விகள் இருக்கவில்லை. கனடிய குடிவரவு அதிகாரிகள் அனுதாபத்தோடு நடந்து கொண்டனர்- மதிவாணன்
இவ்வாறாக ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர்ப்புடன் வலம் வருகின்றன.


குறை-நிறை
ஆடம்பரமில்லாமல், அவசரமோ திணிப்போ இல்லாமல் தெளிந்த நீரோடை போல கதை நகர்கிறது. கிராமத்தில் தொடங்கி கொழும்பு போய் அங்கிருந்து கனடா தமிழ்நாடு என நடைபயின்று மிகச் சாதாரணமாக யதார்த்தமாக கதை சொல்லப்ப்ட்டிருக்கிறது. எண்பதுகளின் நடுப்பகுதியை கதையின் காலமாக தேர்ந்தெடுத்தபடியால் இயக்கமுரண்பாடுகள், இயக்க மோதல்கள் வேதனையோடு பதிவாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தனங்களும் அட்டூழியங்களும் பல இடங்களில் வந்து போகின்றது. உதவி புரிந்த தமிழ் பொலிஸ்காரனே இயக்கத்தில் இணைவதாக வருவது யதார்த்தம். தரப்படுத்தல், இன அடக்குமுறை, இயக்க பூசல்கள், எல்லாம் அழகாக பதிவாகியிருக்கிறது. ஆழமான நட்பு, சீதனக்கொடுமையின்மை, சாதியமின்மை, வெளிநாட்டு வாழ்க்கைகள், குடும்பச் சந்தேகம், ஊரவர் மனோநிலை எல்லாவற்றையும் கலந்து உதயமாகி இருக்கிறது. நல்ல சொல்லாடலும், அளவான அடுக்கு மொழியுமாக அற்புதமான படைப்பு இது. இருப்பினும் சமசமாஜக்கட்சியின் தலைவர் என்.எம். பெரே ராவின் அரசியல் நிகழ்வுகள், ஔவையார் பாடல், சித்தர்பாடல், அரசியல் சம்பவங்கள் மற்றும் சத்தியமூர்த்தியின் நீளமான பேச்சு என்று சில விசயங்கள் அநாவசியம் போல தென்படுகிறது. முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். “இந்த நாவல் எனது கருத்துக்களைச் சொல்வதற்கான வடிகாலே தவிர.... சிலவேளை நாவல் வரைவிலக்கணங்களை மீறிவிடலாம்”. சமூக அக்கறையுள்ளவர்கள் அனைவரும் படித்துப் பயன்பெறக் கூடிய நாவல் இது.

பிற்சேர்க்கை:
அமரர் சட்டத்தரணி எஸ். கே. மகேந்திரன், M.A, பதினைந்து வயதில் அரசியல், பேச்சு, எழுத்து பொதுவாழ்வில் இணைந்தவர். தனது கிராமத்தில் 15 வயதில் வாசகசாலை அமைத்து அறிவகம் என பெயரிட்டு பொதுவாழ்வில் ஜொலித்தவர். 15 வயதில் தொழிலாளர் தோழன் என்ற நாடகத்தை இயக்கி நடித்தது முதல் கொண்டு நிறையவே எழுதியும் பேசியும் வந்தார். அவருடைய பேச்சு மற்றும் அறிவாற்றலால் தமிழருசுக் கட்சியில் இளைஞர் பேரவையில் முன்னிலை வகித்தவர். ஈழத்தின் தலைசிறந்த ஒரு சில பேச்சாளர்களில் முன்னால் நின்றவர். கடுமையான ஒழுக்கசீலராகவும், தன்னை தான் சார்ந்த கொள்கையில் நிலைநிறுத்திகொள்ள போராடியவராகவும் நான் அறிவேன்.
புலம்பெயர்ந்து, கனடாவிலும் பொதுவாழ்வில் முஸ்தீபோடு போராடி வெற்றிகண்டவர். அவருடைய கனவுகள் பலிக்கும் தருணத்தில், திடீரென மாரடைப்பு எனும் மர்மத்தால் காலனவன் 1996 ல் அவரைக் களவாடிக் கொண்டான். இவர் ஓர் அறிவுக்களஞ்சியம். ஈழத்தமிழ் சமூகத்திற்கு இந்த மாமனிதரின் இழப்பு பேரிழப்பு ஆகும். 

நட்புடன்,
அ.பகீரதன்

Friday, November 4, 2011

தெய்வீகக் காதல் (பகுதி 1)


நானொரு விடுகதை
நீயொரு  புதுக்கதை
இருவரும் தொடர்கதையானோம்

நானொரு வல்லிசை
நீயொரு மெல்லிசை
இருவரும் நல்லிசையானோம்

நானொரு வழி
நீயொரு வழி
நாமிருவரும் தனிவழியானோம்

உன்விழியில் நான் விழ
என்விழியில் நீ விழ
இருவருமாய் விழிமூடினோம்

நாவிழி மூடி
ஈருயிர் கூடி
ஓர் உறவாகினோம்

ஒருநொடிப் பொழுதில்
இளமையைத் திருடி
நிலை தடுமாறினோம்

தாயைப் போலொரு
தரணியில் மேலொரு
புதிய உறவாகினோம்

காமத்தில் ஒருதுளி
காதலில் பலதுளி
கற்பனை உலகினை அடைந்தோம்

ஆலயம் தருகின்ற
ஆயிரம் அமைதியை-வெறும்
வீதியில் அடைந்தோம்

ஆரமுதம் தருகின்ற
அறுசுவை மிகுதியை
வெறுமையில் அடைந்தோம்

அழகிய இசை தரும்
உயரிய உணர்வினை-வெற்று
வார்த்தையில் அடைந்தோம்

ஈருடல் இணையும்
இயற்கையின் இன்பத்தை-வெறும்
பார்வையால் அடைந்தோம்

ஒரு வரி பேசி
இருபொருள் அடைந்து
முத் தமிழானோம்

வாழ்வொரு தவமென
நாமொரு சுகமென-சில
நிமிடத்தில் அறிந்தோம்

நதிதனில் ஓடும் நிலவினைப் போல
வாழ்க்கை அழகென உணர்ந்தோம்
அது நிலையென அலைந்தோம்

கால்தனை வருடும்
கடலலை போலே-இன்ப
மோகத்தை அடைந்தோம்

நாளென்ன பொழுதென்ன
நிலவென்ன இருளென்ன
இருவரும் பிரிவினை வெறுத்தோம்

ஊரது பகைத்தால்
உறவது எதிர்த்தால்-கொடிய பிரிவெனில்
சாவினை நினைத்தோம்

ஊழ்வினை
வருத்தம்
ஒராயிரம் வறுமை
உறவினில் ஊடல்
ஏழ்வினை சூழினும்
நாம் பிரிவினை நினையோம்.

நட்புடன்,
அ.பகீரதன்