நானொரு விடுகதை
நீயொரு புதுக்கதை
இருவரும் தொடர்கதையானோம்
நானொரு வல்லிசை
நீயொரு மெல்லிசை
இருவரும் நல்லிசையானோம்
நானொரு வழி
நீயொரு வழி
நாமிருவரும் தனிவழியானோம்
உன்விழியில் நான் விழ
என்விழியில் நீ விழ
இருவருமாய் விழிமூடினோம்
நாவிழி மூடி
ஈருயிர் கூடி
ஓர் உறவாகினோம்
ஒருநொடிப் பொழுதில்
இளமையைத் திருடி
நிலை தடுமாறினோம்
தாயைப் போலொரு
தரணியில் மேலொரு
புதிய உறவாகினோம்
காமத்தில் ஒருதுளி
காதலில் பலதுளி
கற்பனை உலகினை அடைந்தோம்
ஆலயம் தருகின்ற
ஆயிரம் அமைதியை-வெறும்
வீதியில் அடைந்தோம்
ஆரமுதம் தருகின்ற
அறுசுவை மிகுதியை
வெறுமையில் அடைந்தோம்
அழகிய இசை தரும்
உயரிய உணர்வினை-வெற்று
வார்த்தையில் அடைந்தோம்
ஈருடல் இணையும்
இயற்கையின் இன்பத்தை-வெறும்
பார்வையால் அடைந்தோம்
ஒரு வரி பேசி
இருபொருள் அடைந்து
முத் தமிழானோம்
வாழ்வொரு தவமென
நாமொரு சுகமென-சில
நிமிடத்தில் அறிந்தோம்
நதிதனில் ஓடும் நிலவினைப் போல
வாழ்க்கை அழகென உணர்ந்தோம்
அது நிலையென அலைந்தோம்
கால்தனை வருடும்
கடலலை போலே-இன்ப
மோகத்தை அடைந்தோம்
நாளென்ன பொழுதென்ன
நிலவென்ன இருளென்ன
இருவரும் பிரிவினை வெறுத்தோம்
ஊரது பகைத்தால்
உறவது எதிர்த்தால்-கொடிய பிரிவெனில்
சாவினை நினைத்தோம்
ஊழ்வினை
வருத்தம்
ஒராயிரம் வறுமை
உறவினில் ஊடல்
ஏழ்வினை சூழினும்
நாம் பிரிவினை நினையோம்.
நட்புடன்,
அ.பகீரதன்
No comments:
Post a Comment