A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, November 27, 2011

கார்த்திகைப் பூக்கள்


வலியை மையாக்கி
வலிமையை கையாக்கி
வடிக்கிறேன் கவியொன்று
வடிகிறது கண்ணீர்த்துளியொன்று
 
ஒருகையில் பூவொன்று
மறுகையில் பாவொன்று
விழிமூடி அழுகின்றேன்
வழிதேடி அலைகின்றேன்

தீபமேற்ற யாருமில்லை
தீயாய் எரிகிறது மனம்
பூ தூவ நாதியில்லை
புழுவாய் துடிக்கிறது மனம்

கடவுளுக்கு சமானமான
கார்த்திகைப் பூக்கள் எல்லாம்
காடையரின் காலடியில்
கசங்கிக் கிடப்பதென்ன

கைவிலங்கை உடைத்தெறிந்த
கார்த்திகைப் பூக்கள் எல்லாம்
காலடியில் வீழ்ந்த
காலத்தின் கோலமென்ன

யார்விட்ட சாபமோ
பார்செஞ்ச மோசமோ
கல்லறையெல்லாம் காகத்தின்
கழிப்பறையான கொடுமையென்ன

போருக்குத் துணிந்த புலிகளென்று
பாருக்குத் தெரிந்த பின்னும்
யாருக்குத் தேவையென்று
நோர்வேக்கு தலைசாய்த்தீர்

நேர்வேய் தெரியாத நோர்வே
நேர்மை அவனிடம் நோவேய்
பார்வை பிழையான நோர்வே
பாழாய் போனதே எம்வேய்

இந்தியத் தலையீடு இழுக்கு
எண்பதுகளில் தெரியுமே உமக்கு
ஈழம்தான் இறுதி இலக்கு
எப்படிப் பிசகியதோ உங்கள் கணக்கு
 
உலக மாற்றமென்று
உண்மை தோற்றிடுமோ
உலகப் பொருளாதாரமென்று
உழைப்பு தோற்றிடுமோ
 
எண்ணாடும்சேர்ந்து எண்திசையும்வந்து
ஏறிநின்று அடித்தபோதும்-எழுந்து நின்று
மறத்தமிழன் நாமென்று மார்புதனை கொடுத்தீரே-உமை
மறப்பதென்றால் மறுஜென்மம் வேண்டுமய்யா

விண்ணிலிருந்து கண்ணீரை தாருங்கள்
விடுதலையாய் மீண்டும் வாருங்கள்
மண்ணிலிருந்து மரமாய் நிமிருங்கள்
தமிழருக்கு வரமாய் வாருங்கள்

தமிழினம்....
தவித்துக் கிடக்கிறது
தனித்துக் கிடக்கிறது
செய்வதறியாது
செத்துக்கிடக்கிறது

சேர்ந்தியங்க யாருமில்லை
சேர்ந்தழவே நாதியில்லை
செய்வதற்கு நிறைய உண்டு
செய்வதற்கு யாருண்டு

நெஞ்சை நிமிர்த்திடு மனிதா
நீதி கிடைத்திடும் ஒருநாள்
சத்தியமாய் வாழடா தமிழா
சமத்துவம் வந்திடும் திருநாள்

வாழ்த்துவோம்
வணங்குவோம்
வழிபடுவோம்
வழிசமைப்போம்

நட்புடன்,
அ.பகீரதன்






No comments:

Post a Comment