A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, April 27, 2012

கருணாநிதி


கனிமொழியில் என்றுமே நல்ல கருணை
தன்மொழியில் எப்போதும் இல்லை சுரணை
தனிநாடு மீட்பாராம் சினிமா வர்ணனை
களத்திலே கைவிட்டாரே நம் கர்ணனை

கவிமொழி என்றுமே கைவைந்த கலை
காலத்தை வென்றுமே நிற்கின்ற சிலை
நாசூக்காய் பேசுவதில் அவர்தான் தலை
காசுக்காய் நக்கினாரோ எச்சில் இலை

தமிழ் அண்ணாவின் புகழ்காத்த தம்பி
ஈழத்து அண்ணாவை விழவிட்ட தும்பி
அகிலத்து தமிழர்கள் இருந்தாரே நம்பி
ஆனாலும் அப்பப்போ நீட்டுவாரே கம்பி

திருக்குவளை பெற்றெடுத்த தமிழ்ப் புலமை
திருநீற்றுக்குப் பணியாத திராவிடத் தலைமை
திருப்பணியாலா உனக்குள் என்றுமே இளமை
தீராதபகையானாய் உனக்கேன் இந்த நிலமை

நெஞ்சினில் கொஞ்சமும் இல்லை நீதி
பிறகேன் எழுதினீர் நெஞ்சுக்கு நீதி
நேர்மை தவறிய வஞ்சகச் சாதிநீ
பிறகேன் எழுதினீர் வள்ளுவப் பிரதி

மும்முறை முதலிரவு ஏறிய வீரா
ஐம்முறை முதல்வர் ஆன சூரா
தமிழ்மறை தாங்கிய தஞ்சை தேரா
தமிழ்மனம் பொங்குதே உனக்கு எதிரா

வறுமையில் அறிந்தீரே பணத்தின் அருமை
அதற்காக அள்ளிக் குவித்தென்ன பெருமை
அறத்திற்கு சொன்னீரே ஆயிரம் உவமை
அனைத்துமே உன் அவைக்கு எருமை

வசைபாட மனசின்றி தவிக்குதுஎன் தமிழ்ப்பேனா
வழிபோட மறந்தாயே உன்முகத்தில் உமிழ்ப்பேனா
உன்பெயரை என்பிள்ளைக்கு பெயராய் வைப்பேனா
உனக்காக இனியும் நான் தீக்குளிப்பேனா

உங்கள் நேரத்திற்கு நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, April 20, 2012

ஏனடி என்னை வெறுக்கிறாய்?


மூலமும் நீயே முதலும் நீயே-என்
உடலும் நீயே உள்ளமும் நீயே
உயிரும் நீயே ஓடும்ரத்தமும் நீயே
ஏனடி என்னை வெறுக்கிறாய்?

வாழ்வும் நீயே வசந்தமும் நீயே-என்
சுவாசமும் நீயே சுகமும் நீயே
சுகவாசமும் நீயே விசுவாசமும் நீயே
ஏனடி என்னை வெறுக்கிறாய்?

தேன்மொழி நீயே தென்றலும் நீயே-என்
தேவையும் நீயே என்தேவதை நீயே
தேவனும் நீயே தீண்டலும் நீயே
ஏனடி என்னை வெறுக்கிறாய்

காதலும் நீயே காலமும் நீயே-என்
சாதலும் நீயே  ஞாலமும் நீயே
ஆயுளும் நீயே தாயவள் நீயே
ஏனடி என்னை வெறுக்கிறாய்

முக்கனி கலந்து சக்கரை பிசைந்து
முகக்கனி மலர்ந்து அகக்கனி குளிர்ந்து
அக்கினி மூட்டி ஆசையைத் திரட்டி
ஆரமுது ஊட்டி அகத்தினில் நுழைந்தாயடி

தேய்நிலவிலே காதல் பார்வையால் வதைத்து
தேனிலே சொற்களை கோர்வையாய் புதைத்து
தேமதுர காதல்மொழியால் மனவிசை அசைத்து
புரிதலை காதலை வாழ்தலை விதைத்தாயடி

கற்றதை மறந்து கற்பனை விதைத்து
பெற்றதை துறந்து பெற்றவளை சிதைத்து
மடியினில் தூங்கி மணிமணியாய் கதைத்து
என்உயிரை உறிஞ்சி உன்உயிரை தந்தாயடி

காதல் என்பது வாலிபத் தவம்
காலம் ஆகியும் வாழும் தடம்
வலித்தாலும் அலுக்காத சுகம்
வாழ்வுத் தேரோடு வருகின்ற வடம்

நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, April 13, 2012

புதுவருடப் பிறப்பு


ஆரியக் கலண்டரில்

அழியுது ஆண்டொன்று

ஆனந்தக் களிப்பில்

அலையுது திராவிடமனசு



சூரியக்கடவுள் நமக்கு

சூனியமானது எதற்கு

சுதந்திரதாகம் நமக்கு

அனர்த்தமானது எதற்கு



கலப்பதும் வளர்வதும்

காலத்தின் விளைச்சல்

இழப்பதும் முடிதுறப்பதும்

தமிழரின் கல்ச்ஷர்



பாலும் தேனும்

கலப்பது சிறப்பு

பாலும் நீரும்

கலந்தது சிறுமை



ஆரியம் கலந்து

திராவிடம் தேய்ந்தது

யாரிடம் சொல்வது

யார்இனி வெல்வது



போனது போகட்டும்

போர்வாள் ஆகடா

அழிப்பது தீங்கு

அடிமை நீங்கு



உனதழகு தமிழு

உரிமையோடு பழகு

மூலமுண்டு ஆழமுண்டு

காலமுண்டு கற்றுக்கொடு



வாழ்வது நீ

வளர்த்திடு நீதி

வளர்ந்திடு நீடூழி

வளர்த்திடு நீகூடி



கடவுளென்பது உன்னுள்ளம்

கனவுகள்தானே நல்லெண்ணம்

கனவுகள்கலைக்கா போராடு

கடைசிவரைக்கும் நீயாடு



போருக்குப்போகிற குதிரை

பொதிகள்சுமக்கிற கழுதை

குதிரையென்ன கழுதையென்ன

கனவுகள்கலையா வாழ்ந்துவிடு



அமாவாசை இரவென்ன

பௌர்ணமி நிலவென்ன

பாதைகள் வகுத்திடு

பாதத்தை வைத்திடு



நாளையும் உனதாக

இன்று  விதையாகு

இயன்றவரை  உரமாகு

இலக்கை உனதாக்கு



நன்றி.

நட்புடன்,

.பகீரதன்


Thursday, April 5, 2012

கழுதை-கடவுள்-காமம்(என் விசித்திரக் கற்பனை)


விதியின் விசித்திரம்

வில்லங்க சித்திரம்

கடவுளுக்கும் காமம்

கழுதைமீதும் மோகம்



தேவை என்றானதால்

தேவனும் கீழிறங்கி வந்தார்

காமம் வென்றதால்

கடவுளும் கழுதை யானார்



நீயார் என்றது கழுதை

நான் கடவுள்

“ஆணவம் உனக்கென்றது கழுதை

அறியாமை நீயென்றார் கடவுள்



வாய்ப்புக் கிடைத்தால்

நானும் கடவுள்தான்கழுதை

வாய்க் கொழுப்புனக்கு

அதிகாரம் செய்தார் கடவுள்



காமப்பார்வை தெளித்து

கையை வைத்தார் கடவுள்

காலால் இடறி

வாலால் அடித்தது கழுதை



விரலை நீட்டி

வித்தைகள் செய்தார் கடவுள்

காதலால் குழைந்து

நெளிந்து கனிந்தது கழுதை



இருவரின் உச்சத்தில்

இறைவன் சுருண்டார்

மீண்டும் நான்ரெடி என்றது கழுதை

சோர்ந்து கிடந்தார் கடவுள்



நானே பெரியவள்

கழுதை போட்டது போடாய்

கடவுள் தலைகுனிந்தார்

பெண்ணவள் பலம் என்றார்



மீண்டும் இயங்கினார்

மீண்டும் தோற்றார்

ஆணவம் கன்மம் மாயை

உணர்த்தி மாயமாய் மறைந்தார்



பத்தே மாதத்தில்

கழுதைக்கு வலித்தது வயிறு

கறுத்த உருவமாய்

வீழ்ந்து அழுதது ஓருயிர்



மனிதன்எனப்பெயர் சூட்டி

மாயமாய் மறைந்தார் கடவுள்

குரங்கு குரங்கு எனக்கழுதை

திட்டித் தீர்த்தது தன்பிள்ளையை



அப்பா எங்கே?

கேட்டது குரங்கு

மேலே என்று

சொன்னது கழுதை



தந்தையைத் தேடி

மரம் மரமாய் தாவி

சோர்ந்து கீழேயிறங்கி மெல்ல

நிமிர்ந்து கூனி நடந்தது குரங்கு



மீண்டும் கடவுள் வந்தார்

நீ பொறுப்பில்லாதவன் என்றது கழுதை

வெறுப்பு விருப்பில்லாதவன்

கடவுள் மழுப்பினார்



அப்பாவை பார்

ஆனந்தமாய் கழுதை சொன்னது

குரங்கு பார்த்தது

உலகம் தெரிந்தது



என்னைபோல் எளிமையாய் வாழ்

கழுதை சொன்னது

என்னைப்போல் பற்றுஅறுத்து வாழ்

பேரோளி கேட்டது



என்னைப்போல் நிகழ்காலத்தில் வாழ்

கழுதை சொன்னது

என்னைப்போல் எதிர்பார்ப்பின்றி வாழ்

பேரொளி கேட்டது



என்னைப்போல் பொறாமை தவிர்

கழுதை சொன்னது

என்னைப்போல் பொறுமை பயில்

பேரொளி கேட்டது



என்னைப்போல் கூட்டாய் வாழ்

கழுதை சொன்னது

என்னைப்போல் தவம் செய்

பேரொளி கேட்டது



என்னைப்போல் இயற்கையை உண்

கழுதை சொன்னது

என்னைப்போல் இயற்கையை காப்பாற்று

பேரொளி கேட்டது



என்னைப்போல் ஏமாந்து போகாதே

கழுதை சொன்னது

என்னைப்போல்  அன்பாய் வாழ்

பேரொளி கேட்டது



குரங்கு சிரித்துச் சொன்னது

உபதேசம் உதவாது

ஆசை ஆணவம் காமம் சுயநலம்

கற்றேன் அதையே உங்களிடமிருந்து பெற்றேன்



பட்டுத்தெளி மகனே

கடவுள் சபித்து மறைந்தார்

கழுதை அழுதது

குரங்கு நேராய் நிமிர்ந்து நடந்தான்



நன்றி, நட்புடன்,

அ.பகீரதன்