A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, April 5, 2012

கழுதை-கடவுள்-காமம்(என் விசித்திரக் கற்பனை)


விதியின் விசித்திரம்

வில்லங்க சித்திரம்

கடவுளுக்கும் காமம்

கழுதைமீதும் மோகம்



தேவை என்றானதால்

தேவனும் கீழிறங்கி வந்தார்

காமம் வென்றதால்

கடவுளும் கழுதை யானார்



நீயார் என்றது கழுதை

நான் கடவுள்

“ஆணவம் உனக்கென்றது கழுதை

அறியாமை நீயென்றார் கடவுள்



வாய்ப்புக் கிடைத்தால்

நானும் கடவுள்தான்கழுதை

வாய்க் கொழுப்புனக்கு

அதிகாரம் செய்தார் கடவுள்



காமப்பார்வை தெளித்து

கையை வைத்தார் கடவுள்

காலால் இடறி

வாலால் அடித்தது கழுதை



விரலை நீட்டி

வித்தைகள் செய்தார் கடவுள்

காதலால் குழைந்து

நெளிந்து கனிந்தது கழுதை



இருவரின் உச்சத்தில்

இறைவன் சுருண்டார்

மீண்டும் நான்ரெடி என்றது கழுதை

சோர்ந்து கிடந்தார் கடவுள்



நானே பெரியவள்

கழுதை போட்டது போடாய்

கடவுள் தலைகுனிந்தார்

பெண்ணவள் பலம் என்றார்



மீண்டும் இயங்கினார்

மீண்டும் தோற்றார்

ஆணவம் கன்மம் மாயை

உணர்த்தி மாயமாய் மறைந்தார்



பத்தே மாதத்தில்

கழுதைக்கு வலித்தது வயிறு

கறுத்த உருவமாய்

வீழ்ந்து அழுதது ஓருயிர்



மனிதன்எனப்பெயர் சூட்டி

மாயமாய் மறைந்தார் கடவுள்

குரங்கு குரங்கு எனக்கழுதை

திட்டித் தீர்த்தது தன்பிள்ளையை



அப்பா எங்கே?

கேட்டது குரங்கு

மேலே என்று

சொன்னது கழுதை



தந்தையைத் தேடி

மரம் மரமாய் தாவி

சோர்ந்து கீழேயிறங்கி மெல்ல

நிமிர்ந்து கூனி நடந்தது குரங்கு



மீண்டும் கடவுள் வந்தார்

நீ பொறுப்பில்லாதவன் என்றது கழுதை

வெறுப்பு விருப்பில்லாதவன்

கடவுள் மழுப்பினார்



அப்பாவை பார்

ஆனந்தமாய் கழுதை சொன்னது

குரங்கு பார்த்தது

உலகம் தெரிந்தது



என்னைபோல் எளிமையாய் வாழ்

கழுதை சொன்னது

என்னைப்போல் பற்றுஅறுத்து வாழ்

பேரோளி கேட்டது



என்னைப்போல் நிகழ்காலத்தில் வாழ்

கழுதை சொன்னது

என்னைப்போல் எதிர்பார்ப்பின்றி வாழ்

பேரொளி கேட்டது



என்னைப்போல் பொறாமை தவிர்

கழுதை சொன்னது

என்னைப்போல் பொறுமை பயில்

பேரொளி கேட்டது



என்னைப்போல் கூட்டாய் வாழ்

கழுதை சொன்னது

என்னைப்போல் தவம் செய்

பேரொளி கேட்டது



என்னைப்போல் இயற்கையை உண்

கழுதை சொன்னது

என்னைப்போல் இயற்கையை காப்பாற்று

பேரொளி கேட்டது



என்னைப்போல் ஏமாந்து போகாதே

கழுதை சொன்னது

என்னைப்போல்  அன்பாய் வாழ்

பேரொளி கேட்டது



குரங்கு சிரித்துச் சொன்னது

உபதேசம் உதவாது

ஆசை ஆணவம் காமம் சுயநலம்

கற்றேன் அதையே உங்களிடமிருந்து பெற்றேன்



பட்டுத்தெளி மகனே

கடவுள் சபித்து மறைந்தார்

கழுதை அழுதது

குரங்கு நேராய் நிமிர்ந்து நடந்தான்



நன்றி, நட்புடன்,

அ.பகீரதன்

No comments:

Post a Comment