A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Tuesday, July 23, 2013

1983-2009


1983 இல், தெற்கில் நடந்த இனக்கலவரத்தையும், 2009 இல், வடக்கில், முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையையும் நினைக்கும் போதெல்லாம் தமிழர்களால் கொதிக்காமல் இருக்க முடிவதில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், பட்ட அவமானங்களும், பறிகொடுத்த உயிர்களும் ஒவ்வொரு தமிழனுடைய நெஞ்சிலும் ஆழப் பதிந்து வடுவாகிக் கிடக்கின்றன. வெறும் 12 வீதமே தமிழர்கள் என்ற நிலைப்பாட்டில் சிங்கள அரசு தொடர்ந்தும் தமிழர்களின் நலனை உதாசீனம் செய்வது ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்லதல்ல. நீறு பூத்த நெருப்பாக ஒவ்வொரு தமிழனுடைய நெஞ்சிலும் அமுங்கிக் கிடக்கும் காயங்களும், வலிகளும் என்றோ ஒருநாள் மீண்டும் தலைதூக்கும். அரசியல், பொருளாதார வெளியில் தமிழர் கை ஓங்கி, மீண்டும் தமிழர் கொடி பறக்கின்ற காலம் மலரும். இப்படியெல்லாம் நான் உங்களை உசுப்பேற்றி, இக்கட்டுரைக்கு வாசகராக்கிக் கொள்ள முனையவில்லை.

இருப்பினும், தமிழர்களாகிய நாம், நமது அரசியல், பொருளாதார, சமூக நலன்களில் அக்கறையில்லாமல் நம்மை நாமே உதாசீனம் செய்வது அறிவுடமை ஆகாது. கடந்த காலத்தின் கசப்பான வரலாற்றை புரிந்து, எதிர்காலத்தில் நமக்குரிய பாதையை உருவாக்க வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு உண்டல்லவா. ஐக்கிய இலங்கைக்குள், மூன்று இனத்தவர்களும் ஐக்கியமாக வாழுதல் என்பது இனி சாத்தியமில்லை. 1983-இனக்கலவரமும், 2009-இனப்படுகொலையும் இதற்கு நல்ல சான்று பகரும். அதே நேரத்தில், கடந்த 60 ஆண்டுகளிற்கு மேலாக தமிழீழம் அடைவதற்காக போடப்பட்ட அகிம்சாவழி அத்திவாரங்களும், பிரபாகரனிய கட்டுமானங்களும் சிங்கள அரசால் நிர்மூலமாக்கப்பட்ட இத்தருணத்தில் ஈழத்தமிழர்களால் என்ன செய்ய முடியும்? சுயநல, அதிகார, போட்டி மனோநிலையால் பிளவுபட்டுக் கிடக்கும் புலம்பெயர் தமிழர்கள் என் செய்வார்கள்!   

1983 இல், விடுதலைப் புலிகள், வெறும் போராளிக் குழுக்காளாக இருக்கும்போது திருநெல்வேலியில் 13 இராணுவ வீரர்களை கொலை செய்தமைக்காக, ஒட்டுமொத்த தமிழினத்தையே விரோதிகளாக பார்த்தது சிங்கள அரசு. டில்லியில் இருந்து, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் வலுவான அழுத்தம் வரும்வரை ஜே. ஆரின் அரசாங்கம் இனக் கலவரத்தை நிறுத்த எந்தவிதமான முஸ்தீபும் எடுக்கவில்லை; பதிலாக தமிழருக்கு எதிரான இனக்கலவரத்தை அரசு சார்ந்த காவல்துறையே ஊக்கிவித்தது என்பதுதான் வரலாற்றுச் சோகம். சிங்கள பிரதேசங்களில், எட்ட முடியாத உயரத்தில் இருந்த தமிழர் வாழ்வியலை சிதைத்து, அவர்களை பரதேசிகளாக்கி, ஏழ்மைப்படுத்த சிங்கள அரசு செய்த கொடூரமான இனக்கலவரம் அது. தமிழர்கள் ஓடி ஒதுங்க இடமில்லாமல் பட்ட கஸ்ரங்கள், பறிகொடுத்த சொத்துக்கள், இழந்த உயிர்கள் கொஞ்சமல்ல. திறன் மிகுந்த வரலாற்று ஆசிரியர்கள் எம்மிடம் இல்லாத காரணத்தால் இவை அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றில் பதிவு செய்யப்படவும் இல்லை.

இதைப்போலவே, 2009ல், முள்ளிவாய்க்கால் எனும் மிகக் குறுகிய பிரதேசத்தில் அடைபட்டுக் கிடந்த விடுதலைப் புலிகளை மெல்ல மெல்ல அழிப்பதற்கும் அவர்கள் சரணடைவதற்கும் வாய்ப்புக்கள் இருந்த போதும், அவசர அவசரமாக, விசனத்தனமாக பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களை அனாவசியமாக கொன்று குவித்தார்கள். மக்களை புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றார்கள் என அனாவசிய குற்றச்சாட்டை பிரசார யுக்தியாக பயன்படுத்தி, நாற்பது ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட, அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தார்கள். ஈவிரக்கமில்லாமல் கற்பழித்தார்கள். அனைத்து விதமான போரியல் குற்றங்களையும் புரிந்தார்கள். தமிழர்கள் வேறு, சிங்களவர்கள் வேறு என்பதை அப்படியே நிரூபித்தார்கள். புலிகள் வீழ்ந்து, யுத்தம் முடிவடைந்த இன்றைய நிலையிலும் தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கின்ற அதிகார மனோநிலையில்தான் அரசு இயங்கி வருகின்றது.

1983 ற்கு முன்னால் பார்த்தாலும், சிங்களவர்கள் நியாயபூர்வமாக நடந்ததில்லை. தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூல்நிலையமாக திகழ்ந்த யாழ் நூலகத்தைக் கூட, லண்டன், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காமினி திசநாயக்காவின் தலைமையில் எரித்து நாசம் செய்தார்கள், அதற்கு வலுவான காரணம் எதுவும் இல்லை. இப்படித்தான் தனது சொந்த நலனுக்காக, 1956, எஸ். ட்பில்யு. ஆர். பண்டாரநாயக்கா அவர்கள் சிங்கள மொழிச்சட்டத்தை பாராளுமன்றத்தில் அமுல் செய்தார். பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்களையும் வலுவான காரணங்கள் எதுவுமின்றி தீடிரென்று கிழித்தெறிந்தார்கள். மலையகத் தமிழ்மக்களின் வாக்குரிமை பறிப்பு, தமிழர்களின் சத்தியாக்கிரகத்தை வன்முறையால் அடக்கியமை, பல சிறிய இனக் கலவரங்கள், இப்படியாக 1982 நூலகம் எரிப்பு வரை காரணமில்லாமல் சிங்கள ஆட்சியாளார்கள் தமிழர்களிற்கு எதிராக செய்த வன்முறைகள் அதிகம்.  

வாள் தூக்கி போர் செய்த வீரத் தமிழன் வாய் கட்டி பொறுமை காத்த காலங்கள் ஏராளம். காந்திய வழியில் சென்ற தமிழன் தீயால் சுடப்பட்ட சம்பவங்கள் ஏராளம். இதன் விளைவாகவே, புத்தகங்கள் சுமந்த தமிழ் இளைஞர்கள் குண்டுகளை எடுக்கத் தள்ளப்பட்டார்கள். காந்தியையும், மாட்டீன் லூதர் கிங்கையும் படித்தவர்கள், சேகுவராவையும் மாவோயையும் படித்தார்கள். ஏராளமான புத்திஜீவிகளையும் பட்டதாரிகளையும் பிரசவித்த தமிழ் பாடசாலைகளில் போராளிகள் உருவாகத் தொடங்கினார்கள். இனியும் ஈனத்தமிழனாக இருக்கமாட்டோம், மானத்தமிழனாக மடிவோம் என எழுந்தார்கள். எழுந்தார்கள்! வெடித்தார்கள்! பல களங்களை வென்று மறத்தமிழன் நாம் என நெஞ்சை நிமிர்த்தினார்கள். காலச் சூறாவளியால் அவர்களும் துடைக்கப்பட்டார்கள். கோலோச்ச வேண்டிய அவர்கள் கொடுங்கோலால் கொன்றழிக்கப்பட்டார்கள்.

நிற்க! பலவீனப்பட்டு, பிளவுபட்டுக் கிடக்கும் இன்றைய ஈழத்து தமிழ் அரசியல் கட்சிகளும், வளர்வதற்கு முன்பாகவே தமக்குள், உள்ளீடாக மோதிக்கொள்ளும் புலம்பெயர் கட்சிகளும்தான் இன்றைய தமிழர் நலனின் தீர்மானிகள். மிகக் குழப்பமான இந்த காலப் பகுதியில் புலம்பெயர் தமிழருடைய பங்களிப்பு  எதுவாக இருக்க முடியும்?

மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் பேரால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், வெறும் உணர்ச்சிவசப் படுகின்ற மனோநிலையை தவிர்த்து, அறிவு ரீதியாக நாம் ஒன்றிணைய வேண்டும். சுயநல வாழ்வில் தாமுண்டு தம்குடும்பமுண்டு என்கின்ற மனோநிலையில் வாழுகின்றவர்களும், எரிகின்ற வீட்டில் எடுப்பதை எடுத்து விடலாம் என துடிக்கின்ற சுயநலன் விரும்பிகளும், தங்களுடைய திறமைகளை மேடையேற்றி தங்கள் ஆணவத்திற்கு தீனிபோட்டு அற்பசுகம் காணுகின்றவர்களும், ஜனரஞ்சக ஆதரவிற்காக கொள்கை வேசமிடுபவர்களும் ஒவ்வொரு சமூகத்தளத்திலும் இருப்பார்கள். இவர்களுடைய கரங்கள் வலுக்கின்றபோதுதான் சமூக நாசம் ஆரம்பிக்கின்றது. இவர்கள் தங்கள் செயல்களை தாங்களே அசைபோட்டுப் பார்க்கின்ற ரகமானவர்கள் அல்லர்.

ஆனாலும் நாம் கொஞ்சம் விழிப்பாக இருந்தால், நம் மொழிமீதும், நம் தாய்மண்ணின்மீதும் தீராக்காதல் கொண்டால் ஒருநாள் நாம் வெல்வோம். உலக சரித்திரத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட இனம் மீண்டும் எழுந்து உரிமையை பெற்றுக்கொண்ட வரலாறுகள் அதிகமுண்டு. அதுவும் தமிழர்கள் புத்திசாலிகள், வரலாற்றுப் பின்னணி கொண்டவர்கள். காலம் காலமாக அந்நிய ஆட்சியிலிருந்து மீண்டு வந்தவர்கள். தமிழர் நாம் எழுவோம்! என்றோ நாம் வெல்வோம் என்பதை உங்கள் தாரக மந்திரமாக்கிக் கொள்ளுங்கள். தோற்பது மீண்டும் பலமாக வெல்வதற்கு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உயர் சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், ஒன்றுபடுதல், ஒற்றுமையாக ஒழுகுதல் இவைதான் இன்றைய தேவைகள். 1983 லும், 2009 லும் உங்கள் இனம் அனுபவித்த கொடுமைகளை மறந்து விடாதீர்கள். அதேநேரத்தில் பழிவாங்கும் மனோநிலையையும் வளர்த்து விடாதீர்கள். காலம் வரும், அப்போது தூற்றிக்கொள்ளுங்கள். நாம் விதைத்த நல்ல விதைகளை நாம் அறுவடை செய்யும் காலம் நிச்சயம் மலரும். நம்பிக்கையுடன் வேலை செய்யுங்கள். சுதந்திரக் காற்றை நம்மினம் சுவாசிக்கும் நல்லகாலம் வரும்.

Friday, July 19, 2013

வாலி எனும் கவிவள்ளல்


வலிக்கு இன்று மருந்தாக-எங்கள்

வாலிக்கு வடிப்போமா ஒருகவிதை

வயல்எலி சேர்த்த நெற்கதிராக-எந்தன்

வாய்சொல் சேருமோ நற்கவியாக

 

திருச்சியில் உருவான தீக்குச்சி-அது

திருவிளக்கானது தமிழின் உச்சிக்கு

திருவரங்கம் பெற்றெடுத்த பகிரங்கம்-அதன்

திருக்கரங்கள் எப்போதும் கவிசுரக்கும்

 

பாட்டெழுதி வென்றாயே பத்மஸ்ரீ-உன்

பாட்டாலே பெற்றாயே பலவிசிறி

பாண்டவர் பூமி எழுதிய நீஞானி-இங்கு

மாண்டவர் போதும் எழுந்து வாநீ

 

முக்காலம் உணர்ந்த முனிவனும்-நீ

முக்காலா முக்காபில்லாவார்த்தை

சிக்காமல் போட்டா வித்தகனும்நீ-இங்கு

மாண்டவர் போதும் எழுந்து வாநீ

 

ஐம்பது ஆண்டுகளாய் எழுதியும்

குறைவேதும் இல்லை உன்பணியில்

ஐந்து தலைமுறைக்காய் எழுதியும்

குறையேதும் இல்லை உன்பணிவில்

 

கவிபாடும் உன்னழகில் எழில் கொஞ்சும்

உன்கதையே கவியாகும் அதைஎது மிஞ்சும்

உணர்வாலே குளிப்பாட்டி வார்த்தை கொட்டும்

உண்மைக்கவிஞன் என உனைஉலகம் போற்றும்

 

எங்களிற்காய் கவிபடித்த உன்வதனம்

எம்வாழ்வில் எப்போதும்அது உன்னதம்

எதுகையும் மோனையும் உன்வசம்

இனிஎப்போ காண்போமே உன்னிடம்

 

இந்த மகா கவிஞனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.