A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Monday, July 27, 2015

அப்துல் கலாம்!



அப்துல் கலாம்
வெறும் விஞ்ஞானியின் பெயரல்ல
”முயற்சி திருவினையாக்கும்”
”ஒழுக்கம் உயர்வு தரும்” என்பதின் அடையாளம்

நாங்கள் ஏற்றிய பட்டம்
நூலளவு மட்டுமே பறந்தது
இவர் இராமேஸ்வரத்தில் ஏற்றிய பட்டம்
மட்டும் எப்படி சந்திரன் வரை உயர்ந்தது?

நீ மேலே செலுத்தியது
ஏவுகணைகளை மட்டுமல்ல
ஏழையின் கனவுகளையும் தான்

உந்தன் வியர்வைத்துளிகளில்
கட்டியெழுப்பட்டது துணைக்கண்டத்தின் அரண்கள் அல்ல
ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும்
2020 கனவுகளும்தான்

முத்தான உன் அறிவுரை எல்லாம்
எங்கள் முள்வீதிகளில்
விரிக்கப்பட்ட கம்பளங்கள்

பாரத ரத்னா
உனக்கு வழங்கப்பட்ட கௌரவம் அல்ல
ஏழை மாணவனின் நம்பிக்கைப் பதக்கம்

நாசாவில்…
ஐநாவில்….
தமிழினத்திற்கு பெருமை சேர்த்தவன்
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” உரக்கச் சொன்னவன்

சி.வி.ராமன்
ஸ்ரீநிவாச இராமனுஜன்
இவர்களிற்கு நீ இளவல்
ஏழைகளை நேசித்ததால் எமக்கு இறைவன்

காந்தியின் கிராம சுயராஜ்யம்
நேருவின் இரும்பு சாம்ராஜ்யம்
இரண்டுக்கும் இயன்றளவு உழைத்தவர்
இந்திரா கையால் பெருமை பெற்றவர்

*****
காரியமாற்ற
தன் வல்லமையையோடு
கடவுளின் வல்லமையும்
தேவை என்று உரக்கச் சொன்னவன்
*****
 மும்மலங்களையும் துறக்க முயன்றவர்
மும்மதங்களையும் இணைத்து நடந்தவர்
முக்காலமும் உணர்ந்தவர்
எதிர்காலம் பற்றி மட்டுமே பேசியவர்
*****
காந்தி பாதி ஜின்னா பாதி
இராமர் பாதி நபிகள் பாதி
இப்படியாய் உருவாகாமல்
இரண்டையும் உள்வாங்கிய முழுமதி
*****
தர்மநெறி கொண்ட தந்தை
ஈகைக்குணம் கொண்ட தாய்
அக்காவின் கணவர் ஜலாலுதீன்
இளமையில் இவரை சரியாய் வழிநடத்தியவர்கள்
*****
கிராமத்தில் பிறந்து
சாதாரண வளர்ப்பில் வளர்ந்து
உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர்
நல்ல மனிதநேயமிக்க தலைவர்.

அக்னிச் சிறகுகள் எனும் உந்தன் சுயசரிதத்தை முத்தமிட்டபடி உன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

நன்றி

அன்புடன் அ.பகீரதன்

Sunday, July 26, 2015

விசுவநாதன் எங்கள் இசைநாதன்



எங்கள் விசுவநாதன்
இசைத் தாயின் விசுவாசநாதன்
எங்களை ஆட்டி வைக்கவே அவனைக்
கைப்பிடித்து கூட்டி வந்தாள் இப்பூமிக்கு

பாலக் காட்டில் பிறந்தவன்
பாசம் காட்டத் தெரிந்தவன்
கல்லூரிப் பக்கம் போகாதவன்-சிறுவயதிலேயே
கர்நாடக இசையைக் கற்றுப் புரிந்தவன்

 ஆடவர் ஆயிரம் ஆசையில் அலைகையில்
ஆர்மோனியப் பெட்டிக்குள் தன்னகிலத்தை அடக்கியவன்
ராமமூர்த்தியெனும் நல்நட்போடு கூடி
ஆயிரம் படங்களுக்கு நல்லிசை வழங்கியவன்

”நான்” எனும் ஆணவமில்லா
எங்கள் விசுவநாதன்
எம்.எஸ்.விசுவநாதன் ஆனான்
எங்கள் தமிழிசைக்கு நாதன் ஆனான்

தினமும் தேவாரம் கேட்பதே
தேனமுதம் என நம்பிய
எங்கள் பெற்றோர் காதிற்கு
பூபாள இசை கொடுத்தவன்

மங்கையர் காளையர் பருவக் குழப்பத்தை
நல்லிசையாலே காதலெனும் சுகமாக்கியவன்
மானுட வெறியை மனித மனங்களின் பிறழ்வை
இசையெனும் கோலால் சரியாக்கியவன்

கண்ணதாசனிடம் தமிழ்ச்சாறு
பிளிந்தெடுத்த எங்கள் விசுவநாதன்
கண்ணதாசனைக் காதலித்த
இறை தந்த எங்கள் இசைத் தூதன்

அவர் நெற்றியிலே தினமும்
பொட்டிருக்கும்
அந்தப் பொட்டினிலே
பல மெட்டிருக்கும்

முக்குறியாய் விபூதிப் பூச்சிருக்கும்
முக்கியமாய் அங்கே இசைப் பேச்சிருக்கும்
முகமெல்லாம் இசைக்கோட்டின் தழும்பிருக்கும்
முத்தமிழும் அங்கே பாட்டாய் குடியிருக்கும்

மெல்லிசை மன்னர்
எங்கள் இசைக்கு அவரே அண்ணர்
பலபல வித்தகர் வந்தனர் பின்னர்-இருப்பினும்
இசையுலகில் என்றும் அவரே வின்னர்

இசைக்கு என்றும் இளையராஜா என
ஏற்போரும் உண்டு
இளையராஜாக்களை உருவாக்கிய பழையராஜா என
இசைப்போர்தான் ஏராளம் உண்டு

நல்வாழ்க்கை வாழ்ந்து அமரத்துவம் அடைந்த இசை வேந்தர், மெல்லிசை மன்னரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்

நன்றி.

அ.பகீரதன்

ஆடிக்கலவரம்-முள்ளிவாய்க்கால்



வாய்க்கரிசி கூட வாய்க்காமல்
போனதடா தமிழா
வாய்த்த பெருவரமும் கைநழுவிப்
போனதடா தமிழா

கொள்ளி வைக்க பிள்ளை இல்லையென
சொல்லிச் சொல்லி தள்ளி வைத்தோமடா  
கொள்ளிகூட இல்லாமல் இன்று
கொத்துக் கொத்தாய் வீழ்ந்தோமடா

வாய்க் கொழுப்பும் வசைபாடும் நம்மியல்பும்
மொத்தமாய் நம்தேசத்தை முழுங்கித் திண்டதடா
நெல்லாக முன்பே அஞ்சாமல் கஞ்சிக்கு முண்டியடித்தோமடா
 பழஞ்சோறும் மிஞ்சாமல் பானை உடைந்ததடா

கோடி சொத்தும் கொழும்பான் எனும் மிடுக்கும்
ஆடியிலே வீழ்ந்ததடா நம்மை ஆட்டிவைக்க முனைந்ததடா
ஆடிக்கூழ் மறைந்து ஆடிக்கலவரமே மனதில் படிந்ததடா
அடித்தவன் கைகளை ஒடிந்தான் தமிழனெனும் புகழ் நிலைத்ததடா

விதித்தவன் பிழையோ விதைத்தவன் பிழையோ
விடியலுக்கு முன்பே வீழ்ந்து தொலைந்தோமடா
முள்ளிவாய்க்கால் எனும் நரகத்தை கண்டோமடா
முள்ளந்தண்டில்லா ஓர் உருவமாய் குனிந்தோமடா

பிழைப்பு அரசியலோ பிழையான அரசியலோ
இழவு அரசியலோ இயலாமை அரசியலோ
மக்களை நேசிக்கா மாபெரும் கட்சியாய் இருந்தென்ன பயன்
மானத்தை விற்று அரசியல் மடியை நிரப்பி என்ன பலன்

கொள்ளி விழுந்த வீட்டில் சுள்ளி பிறக்குவதோ
பள்ளிக் குழந்தையின் உண்டியலை உடைப்பதுவோ
பிணத்தின் வாடையிலே அரசியல் சுவாசமோ
பெற்றெடுத்த தாயவளை மறந்து மலிவு அரசியலோ

சாவை அர்த்தமாக்கிஅரசியல் புரட்சி செய்யடா தமிழா
தேவைசார் அரசியல் தவிர்த்து சேவை அரசியல் செய்யடா தமிழா
சாவால் இணைந்தவன் தமிழனென சரித்திரம் பறைசாற்றும் தமிழா-எந்தச்
சவாலையும் ஏற்றுத் தாழ்விலும் உயர்வானென உனைச் சந்ததி போற்றும் தமிழா

நட்புடன்,

அ.பகீரதன்