A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, July 26, 2015

விசுவநாதன் எங்கள் இசைநாதன்



எங்கள் விசுவநாதன்
இசைத் தாயின் விசுவாசநாதன்
எங்களை ஆட்டி வைக்கவே அவனைக்
கைப்பிடித்து கூட்டி வந்தாள் இப்பூமிக்கு

பாலக் காட்டில் பிறந்தவன்
பாசம் காட்டத் தெரிந்தவன்
கல்லூரிப் பக்கம் போகாதவன்-சிறுவயதிலேயே
கர்நாடக இசையைக் கற்றுப் புரிந்தவன்

 ஆடவர் ஆயிரம் ஆசையில் அலைகையில்
ஆர்மோனியப் பெட்டிக்குள் தன்னகிலத்தை அடக்கியவன்
ராமமூர்த்தியெனும் நல்நட்போடு கூடி
ஆயிரம் படங்களுக்கு நல்லிசை வழங்கியவன்

”நான்” எனும் ஆணவமில்லா
எங்கள் விசுவநாதன்
எம்.எஸ்.விசுவநாதன் ஆனான்
எங்கள் தமிழிசைக்கு நாதன் ஆனான்

தினமும் தேவாரம் கேட்பதே
தேனமுதம் என நம்பிய
எங்கள் பெற்றோர் காதிற்கு
பூபாள இசை கொடுத்தவன்

மங்கையர் காளையர் பருவக் குழப்பத்தை
நல்லிசையாலே காதலெனும் சுகமாக்கியவன்
மானுட வெறியை மனித மனங்களின் பிறழ்வை
இசையெனும் கோலால் சரியாக்கியவன்

கண்ணதாசனிடம் தமிழ்ச்சாறு
பிளிந்தெடுத்த எங்கள் விசுவநாதன்
கண்ணதாசனைக் காதலித்த
இறை தந்த எங்கள் இசைத் தூதன்

அவர் நெற்றியிலே தினமும்
பொட்டிருக்கும்
அந்தப் பொட்டினிலே
பல மெட்டிருக்கும்

முக்குறியாய் விபூதிப் பூச்சிருக்கும்
முக்கியமாய் அங்கே இசைப் பேச்சிருக்கும்
முகமெல்லாம் இசைக்கோட்டின் தழும்பிருக்கும்
முத்தமிழும் அங்கே பாட்டாய் குடியிருக்கும்

மெல்லிசை மன்னர்
எங்கள் இசைக்கு அவரே அண்ணர்
பலபல வித்தகர் வந்தனர் பின்னர்-இருப்பினும்
இசையுலகில் என்றும் அவரே வின்னர்

இசைக்கு என்றும் இளையராஜா என
ஏற்போரும் உண்டு
இளையராஜாக்களை உருவாக்கிய பழையராஜா என
இசைப்போர்தான் ஏராளம் உண்டு

நல்வாழ்க்கை வாழ்ந்து அமரத்துவம் அடைந்த இசை வேந்தர், மெல்லிசை மன்னரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்

நன்றி.

அ.பகீரதன்

No comments:

Post a Comment