A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, July 26, 2015

ஆடிக்கலவரம்-முள்ளிவாய்க்கால்



வாய்க்கரிசி கூட வாய்க்காமல்
போனதடா தமிழா
வாய்த்த பெருவரமும் கைநழுவிப்
போனதடா தமிழா

கொள்ளி வைக்க பிள்ளை இல்லையென
சொல்லிச் சொல்லி தள்ளி வைத்தோமடா  
கொள்ளிகூட இல்லாமல் இன்று
கொத்துக் கொத்தாய் வீழ்ந்தோமடா

வாய்க் கொழுப்பும் வசைபாடும் நம்மியல்பும்
மொத்தமாய் நம்தேசத்தை முழுங்கித் திண்டதடா
நெல்லாக முன்பே அஞ்சாமல் கஞ்சிக்கு முண்டியடித்தோமடா
 பழஞ்சோறும் மிஞ்சாமல் பானை உடைந்ததடா

கோடி சொத்தும் கொழும்பான் எனும் மிடுக்கும்
ஆடியிலே வீழ்ந்ததடா நம்மை ஆட்டிவைக்க முனைந்ததடா
ஆடிக்கூழ் மறைந்து ஆடிக்கலவரமே மனதில் படிந்ததடா
அடித்தவன் கைகளை ஒடிந்தான் தமிழனெனும் புகழ் நிலைத்ததடா

விதித்தவன் பிழையோ விதைத்தவன் பிழையோ
விடியலுக்கு முன்பே வீழ்ந்து தொலைந்தோமடா
முள்ளிவாய்க்கால் எனும் நரகத்தை கண்டோமடா
முள்ளந்தண்டில்லா ஓர் உருவமாய் குனிந்தோமடா

பிழைப்பு அரசியலோ பிழையான அரசியலோ
இழவு அரசியலோ இயலாமை அரசியலோ
மக்களை நேசிக்கா மாபெரும் கட்சியாய் இருந்தென்ன பயன்
மானத்தை விற்று அரசியல் மடியை நிரப்பி என்ன பலன்

கொள்ளி விழுந்த வீட்டில் சுள்ளி பிறக்குவதோ
பள்ளிக் குழந்தையின் உண்டியலை உடைப்பதுவோ
பிணத்தின் வாடையிலே அரசியல் சுவாசமோ
பெற்றெடுத்த தாயவளை மறந்து மலிவு அரசியலோ

சாவை அர்த்தமாக்கிஅரசியல் புரட்சி செய்யடா தமிழா
தேவைசார் அரசியல் தவிர்த்து சேவை அரசியல் செய்யடா தமிழா
சாவால் இணைந்தவன் தமிழனென சரித்திரம் பறைசாற்றும் தமிழா-எந்தச்
சவாலையும் ஏற்றுத் தாழ்விலும் உயர்வானென உனைச் சந்ததி போற்றும் தமிழா

நட்புடன்,

அ.பகீரதன்

No comments:

Post a Comment