A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Tuesday, June 23, 2015

தமிழ் வானம் இன்று இருளால் சூழ்ந்ததோ? (புலவரின் மறைவு புலத்தில் ஓர் பேரிழப்பு)



புலரும் சூரியனிற்காய்
காத்திருக்கும் செடிகள் போல்
புலவர் வரவிற்காய்
காத்திருக்கும் அறிஞர்குழாம்

காளான்கள் நிமிர்ந்து
குடையாய் விரியும்போது
தாமரையொன்று தடாகத்தில் தலைமறைப்பதுபோல்
தன்னடகத்திற்கு பெயர் போனவர் எங்கள் புலவர்

அறிவுஜீவிகள் அடிக்கடி
நெற்றிக்கண் திறப்பார்கள்
எங்கள் புலவர் ஐயா
கைபற்றி அன்புக்கண் மட்டுமே திறப்பார்


சிலமேடைகள் கண்டதும்
பேச்சாளனெனப் பீத்தும் என்போன்றவர்க்கு
பாடையிலே போகும்வரை
பலமேடைகள் கண்டும் பண்பகலாப் பகலவன்

தள்ளாடும் வயதில்
எல்லோருக்கும் பல்லாடும்
எங்கள் புலவருக்கு மட்டும்தான்
இலக்கியச் சொல்லாடும்

எல்லோர் இதயத்திலும்
ஒட்டிக்கொண்டு ஒரு காதல் இருக்கும்
எங்கள் புலவரின் இதயத்தில்
முட்டிக்கொண்டு தமிழ் இருக்கும்

மனைவிமேல் தீராக்காதல்
எங்கள் புலவருக்கு
புலவர்மேல் தீராக்காதல்
எங்கள் பைந்தமிழுக்கு

அவருக்கு இரு பெண்பிள்ளைகள்
என எல்லோருக்கும் தெரியும்
இன்னும் இரண்டு பிள்ளைகள்
உண்டென யாருக்குத் தெரியும்

சைவமும் தமிழும்
அவருக்கு இரண்டும் பிள்ளைகள்
அவர் வளர்த்த பிள்ளைகள்
அவரை வளர்த்த பிள்ளைகள்

தேசிய விருது வாங்கவில்லை
தேசமெல்லாம் விருது வாங்கியவர்
ஆசிய மகான் குன்றக்குடிகளோடு
பலமேடைகளில் பேரொளி வீசியவர்

ஈழத்துப் புலவர் என உலகறியும்
ஈழத்துச் சிவாஜியென யாமறிவோம்

நோயில் கிடந்தபோதும் வாயில் வந்ததெல்லாம்
தமிழ்த் தாயின் கொஞ்சுதல்தான்
தானிறந்தால் தன்தமிழும்
இறந்திடுமோ எனும் நெஞ்சுரசல்தான்

சூழ்ச்சி வஞ்சகம் புறஞ்சொல் கடுஞ்சொல்
கள்ளு காமம் களியாட்டம் மாமிசம்
ஏதுமறியா எங்கள் தமிழ் புலவன்
புங்கைக்கு புகழொளி தந்த நிலவன்

கண்ணீர் துளிகளுடன்,
அ.பகீரதன்


(மைத்துனர் சித்ராமணாளன், எஸ்.கே மகேந்திரன் அண்ணா போன்றவர்களுடன் பழகிக் களிப்புற முடியாமல் போன நாட்களையெல்லாம் உங்களோடு பழகிக் களிப்புற்றேன். உங்களை நேசித்த நாட்களும் விமர்சித்த நாட்களும் நெஞ்சில் நிழலாடுகின்றது. இதயம் எவ்வளவு பலவீனமானது என்பதும் மரணம் கொடுமையானது என்பதும் மீண்டும் உணர்த்தப்படுகிறது.மீண்டும் பிறந்து வா எங்கள் தமிழ்ப் பெருங்கடலே, புங்கை மண்ணிலே மீண்டும் தமிழாய் எழுந்துவா)

No comments:

Post a Comment