A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Wednesday, June 17, 2015

அன்னைத் தமிழை யார் மறப்பார்?


ஆதிசிவன் அகத்தியருக்களித்த
ஆதித் தமிழ் அது நம்
அன்னைத் தமிழ்

மூத்தகுடியாம் நம்மூத்தோர் பறைஞ்ச
முன்னைத் தமிழ்

அகிலாண்ட மாமன்னர் பேசிய எங்கள்
சென்னைத் தமிழ்

கம்பநடை மாற்றி கவித்தாயைப் போற்றி கண்ணதாசன் தந்த
பின்னைத் தமிழ்

பிரபா எனும் பெருந்தலை சுதுமலையில் மொழிந்த
‘அண்ணை’த் தமிழ்

குந்திலே உரசி உரசி நம்அம்மாக்கள் ஊர்க்கதை பேசிய
திண்ணைத் தமிழ்

கள்ளுண்ட போதையிலே அப்பாக்கள் வம்பளந்து மகிழ்ந்த
தென்னைத் தமிழ்

கைலாசபிள்ளை சிவத்தம்பி எஸ்.பொ எனும் பிரமாக்கள் வரைந்த
வண்ணைத் தமிழ்

ஏழையின் இழவு வீட்டிலே வட்டிக்கார கனகர் கதையளந்த
பண்ணைத் தமிழ்

காமக் குசியேறி பட்டணத்து மாமிமகள்  வழுக்கி விழுத்திய
கொன்னைத் தமிழ்

(கவிதை எழுதுபவர்களின் கவனத்திற்கு: எதுகை மோனைக்காக சொற்களை வலிந்து இழுத்து போடுதல் கவிதையை பலவீனப்படுத்தும் என்பதை அறிக. இங்கே நான் அதைச் செய்திருக்கிறேன், ஆதலால் சுட்டிக்காட்டியுள்ளேன்)

ஆக்கம் 
அ.பகீரதன்




No comments:

Post a Comment