A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Tuesday, May 26, 2015

வித்தியா இன்றி ஊரே விரக்தியாய்

வித்தியா வீழ்ந்த இடத்தில்
சத்தியம் செய்து கொள் மனிதா
இனியொரு முறை இப்படி
மனிதம் சாகாதென!

வெள்ளிக் கொலுசோடு
துள்ளித் திரிந்த மங்கையை
கொள்ளிக்கு இரையாக்கும்
கொடூரம் ஏன் நடந்ததுவோ?

படலை வரை வந்து
பள்ளிக்கு அனுப்பிய தாய்
சுடலை வரை உனைக்காவும்
சோகம் நமக்கெதுவோ?

வித்தியா வீழ்ந்த இடத்தில்
சத்தியம் செய்து கொள் மனிதா
இனியொரு முறை இப்படி
மனிதம் சாகாதென

பெண்களைப் போற்றிடும்
புங்கை மண்ணிலா
எங்கள் தங்கை
கருகிடும் கொடூரம் நிகழ்ந்தது?

வறண்ட தேசத்திலும் வற்றாத நீராய்
எங்கள் இதயமிருக்கையில்
இரக்கமில்லா கொடிய காமுகராய்
இன்னும் சிலர் எங்கள் பூமியில் இருந்தனரோ?

மச்சாளோடும் தங்கையாய் பழகிடும்
எங்கள் கிராமத்தின் அழகில்
வன்புணர்வெனும் அழுக்கு படர்ந்ததோ
அது உலகமெலாம் நமை தலைகுனிய வைத்ததுவோ?

வித்தியா வீழ்ந்த இடத்தில்
சத்தியம் செய்து கொள் மனிதா
இனியொரு முறை இப்படி
மனிதம் சாகாதென

கண்ணகைத் தாயே-உந்தன்
கண்களைக் கட்டியா
எங்கள் கண்ணகி
சிதைந்திடும் காட்சியைப் பொறுத்தாய்?

ஊர் ஊராய் அலைந்த போதும்
போரினால் நிலைகுலைந்தபோதும்
எம்தங்கையரை நீயே காப்பாற்றினாய்
ஏன் உந்தன் வாசலில் இப்படியொரு கொடூரம்?

கடல் தாண்டி கண்டம் தாண்டி வந்து
முத்தேரில் உனை வைத்து இழுத்து
அழகு பார்தத உந்தன் அடியவரின்
அடிவயிறு பற்றி எரியுதம்மா! தீர்ப்புச் சொல்!

கொலைவெறியரின் கழுத்துக்கு
உந்தன் மாலை தூக்காகட்டும்
கொலைவெறியரை காப்பாற்ற வந்த
கயவரின் புகழ் காற்றோடு போகட்டும்!

வித்தியா வீழ்ந்த இடத்தில்
சத்தியம் செய்து கொள் மனிதா
இனியொரு முறை இப்படி
மனிதம் சாகாதென

வித்யாவின் ஆன்மா சாந்தியடையட்டும்.


அ.பகீரதன்

No comments:

Post a Comment