A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, December 30, 2011

காலம்

கடிகாரக் கணிப்பு
கருவறை முதல்
கல்லறை வரை
ஆயுளாகிறது.

வாழும் வருடங்களை
ஆயுளாக அழைக்கலாம்-ஆனாலும்
விழித்த நாட்களையே
ஆயுளாக அளக்கலாம்

காலம் கடந்தும்
ஞாலம் புகழ
வாழ்ந்த சிலரோ
காலஅருமை அறிந்தார்

யாரும் அறியா
வாழ்க்கை வாழும்
நம்மில் பலரோ
காலவிரயம் அறியார்

வாங்கிய அறுவையும்
தூங்கிய பொழுதும்
ஏங்கிய இரவும்
காலத்தின் சாபம்

உழைத்த நாளும்
உதவிய பொழுதும்
கற்கை காலமும்
காலத்தின் வரம்

காலம் என்பதும் மூச்சு
தொலைந்தால் போச்சு
எதற்கடா வீண்பேச்சு
எழுந்துநீ கோலோச்சு

காலம் என்பதும் மூலதனம்
முதலிட்டால் முழுலாபம்
முடங்கிவிட்டால் இல்லைலாபம்
தூங்கிவிட்டால் என்னலாபம்

காலம் என்பதும் கடவுள்
காண இயலாது கடஉள்-நீ
காலத்தை நேசித்தால்-உனை
கடவுள் நேசிப்பான்
          
மூவைந்து முதலாய்
மூபத்து வரைக்கும்
பொன்னான வயசு
கண்ணாக கருது

அந்த வயதில்……..
கேட்பார்புத்தி கெடுவார்
கெட்டசூழலில் நுழைவார்
வாளுக்குள் விழுவார்
வயசுக்குள் தொலைவார்
வறுமைக்குள்  சுழல்வார்

ராமனுக்கு பதினான்கு
நளனுக்கு ஏழரை
சிவனுக்கு ஒன்னரை
காலம்விழுங்கிய காலம்

போனவை போகட்டும்
பொங்கடா தோழா
முடிந்தவை நல்லவை
எழுந்திடு நண்பா

கழியட்டும் இவ்வாண்டு
களிப்புடனே புத்தாண்டு
காலத்தை கொண்டாடு
கட்டாயம் வென்றாகு

உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, December 23, 2011

வாழ்க்கை


வலியே வாழ்வென்று
வாடி கிடப்பதன்றி
வரமே வாழ்வென்று
ஓடி உருப்படடா

நிலையற்ற வாழ்வென்று
நிந்தனை செய்யாமல்
நித்தமும் உனதென்று
நித்திரையை வதைத்துவிடு

பணமே கேடென்பார்
பாலுணர்வு துன்பமென்பார்
துறவே சுத்தமென்பார்
கிடைத்தால் பல்லிழிப்பார்

உலகே சாபமென்பார்
உழைப்பில் மோகமற்றோர்
வாழ்வே சோகமென்பார்
வாழத் தாகமற்றோர்

தாமறிந்த உலகையே
தத்துவமாய் விட்டுசென்றார்
தாமிசைந்த வழிதனையே
தத்ரூபமாய் சொல்லிசென்றார்

தத்துவம் குப்பையடா
மொத்தத்தில் குழப்பமடா
வாழ்க்கை சொர்க்கமடா
வாழப்பல மார்க்கமடா

பிடித்தபடி நடந்துவிடு
பிறர்நோகா இருந்துவிடு
பிறர்நலமாய் வாழ்ந்துவிடு
பிறவிப்பயனை அடைந்துவிடு

பணத்தின் அருமையினை
பாதிவயதில் நீயறிவாய்
பணத்தை தேடுகையில்
மீதிவயதை நீதொலைப்பாய்

தேடிக்குவித்த செல்வம்
தேடாமல்குவிந்த செல்வம்
நாடாமல் இருந்துவிடு
நாளெல்லாம் வாழ்ந்துவிடு

கோடான வழியுண்டு
கோபுரமாய் நீவாழ
கேடான வழியெதற்கு
வாடாநீ வழியமைத்து

மூலதனம் இல்லையென்று
மூலையில் முடங்காமல்
மூளையை தனமாக்கி
முன்னேறு முடிந்தவரை

ஆயுதம் இல்லையென்று
அழுது ஆற்றாமல்
அறிவாயுதம் கொண்டு
ஆயத்தம் ஆகிவிடு

மனத்தை கட்டிவிடு
தினத்தை திட்டமிடு
சினத்தை விட்டுவிடு
தனத்தை வட்டமிடு

பணமே இலக்கு-அதை
மனமே விலக்கு
குறி இலக்கை-அங்கே
குவி அகத்தை

எதுவும் உனதில்லை-நம்மோடு
எள்ளும் வருவதில்லை
தினமும் இதைநினைத்து-அனு
தினமும் வாழ்ந்துவிடு

நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, December 16, 2011

கவிதைகள்


அள்ளிக்குவித்த எருக்கூட
ஐம்பதுரூபாய் நோட்டானது
எழுதிக்குவித்த கவியெல்லாம்
இன்று என்னானது?

சலிக்காது எழுதியகவியெல்லாம்
சல்லிக்காசு ஈட்டவில்லை
மல்லிகாக்கு எழுதியகவியை
சொல்லிக்க யாருமில்லை

விசார மனசுகொண்டு
வீணான கனவுகண்டு
வீணாவுக்கு வடித்தகவியெல்லாம்
வீணான கதையாரறிவார்?

காசி பிறந்தமண்ணில்
கவிஎழுத நாதியில்லை
புதுவை பூத்தமண்ணில்
எதுகை மோனையில்லை

பாரதியின் கவிதைகளை
பாதியிலே தூங்கவிட்டு
வாலியின் வரிகளிலே
ஜாலியாய் தூங்குவதோ?

மானிடம் வளர்த்த
கவியின்று-சினி
மாவிடம் கிடக்குதே
சிக்குண்டு

காதற் கவிபாடும்
பிழைப்புக் கவிஞனுக்கு
உழைக்கும்வழி தெரிகிறது-ஏனோ
உழைப்பின்வலி புரிவதில்லை

கழிவறை கழுவும் கடைநிலை பெண்ணுக்கும்
கருவறை தந்த அன்னையின் மண்ணுக்கும்
கல்லறை துயிலும் கார்த்திகைப் பூவிற்கும்
கற்றறிவாலே நற்கவிபாட வரமொன்று தாமுருகா
 
குறிதவறா கோலொன்று தாமுருகா
நெறிபிறழா வாழ்வொன்று தாமுருகா
வெறிகுறையா வேகமும் தாமுருகா
பார்புகழ படிப்பவர்நாபுகழ பாவொன்றுதாமுருகா

அன்பின் வழியொழுகி அதுவேமுடிவாகி
அனைத்தையும் நேசிக்கும் ஆளுமைதாமுருகா
உனையேநாடி என்இருப்பைத்தேடி முடிகண்டு
காலமெல்லாம் காதல்செய வரமொன்றுதாமுருகா

 
அ.பகீரதன்

Friday, December 9, 2011

வங்கி

வங்கியாளர்கள்
வாக்கிங்போக-ஏழையோ
வாங்கிய கடனுக்காய்
வங்கிக்கு அலைகிறான்

வங்கியில்...
வஞ்சியரோ சிரிப்புமுல்லை
வஞ்சகம் சூழ்ச்சியில்லை
வாயாராப் புகழ்ச்சியில்லை
வட்டியில் மட்டும் கறால்

வங்கி...
மனிதன்
திருடனுக்கு பயந்து
திருடனிடமே சரணடைந்த இடம்

வங்கியாளர்கள்......
அறம் தெரிந்த
அறா வட்டிக்காரர்கள்
சட்டப்படி சுரண்டும்
சக்ஸஸ் சண்டாளர்கள்

வங்கியாளர்கள்.....
கோட்சூட் போட்ட
கொள்ளையர்கள்
பாட்காட் உள்ள
வெள்ளையர்கள்

ஏழையின் சாபத்தையும்
வரமாக்கும் வல்லுனர்கள்

கஸ்ரமர்ஸ் கஸ்ரமர்ஸ் என்று
கஸ்ரப்படுத்த வல்லவர்கள்
திருப்தி திருப்தி என்று
திருட நல்லவர்கள்

வங்கிகள்
வசூலிக்கின்றன வட்டியோடு
வாடிக்கையாளனின் வயிற்ரெரிச்சலையும்

எழுத்தறிவிக்க பணமில்லை
சுட்ட பணமெல்லாம்
சும்மா சுவிஸ் வங்கியில்

குடிமகனுக்கு குடிநீரில்லை
தலைவர்கள் நிரப்புகிறார்கள்
நடிகையின் வங்கிக்கணக்கை

காந்திக்கும் காமராஜருக்கும்
வங்கிக்கணக்கு இல்லை-ஏழையின்
வயிற்றுக்கணக்கு புரிந்ததனால்

சுப்பனுக்கு வீசாகாட்
சும்மாயிருப்பவனுக்கும் கோல்ட்காட்
சுண்டல்காரிக்கும் சூப்பர்லோன்
சுரண்டுவது தினவட்டியை

வக்கீலுக்கும்
வக்கில்லாதவனுக்கும்
வங்கியிலே வாய்ப்பு
வட்டியிலோ ஏய்ப்பு

வங்கிகளும் வஞ்சிகளும் ஒரேரகம்
தமக்குத் தேவையென்றால் வழிவார்கள்
நமக்குத் தேவையென்றால் நழுவுவார்கள்

வங்கி மின்சாரம் போல
கையாளத்தெரிந்தால் கைலாபம்
கையாலாகாவிடின் கைலாசம்

ஏழையின்ன் கஸ்ரம் போக
வங்கியின் சிஸ்ரம் கிறாஸாக.....

கவனம்,
வங்கிகள்
கடைசிமூச்சுவரை
கருணைமனுவை ஏற்ப்பதில்லை.
 
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, December 2, 2011

தொலைபேசி

எல்லாமே விலைவாசி
எல்லோரிடமும் தொலைபேசி
செல்லில்லா வாசி
செல்லாக் காசாகி

மௌனத்தை மட்டுமே
தொலைபேசி இரசிக்கிறது...

சிவனுக்கு உடுக்கை
யமனுக்கு கயிறு
இவனு(ளு)க்கு தொலைபேசி

தொலைபேசி
இவளுக்கு மூன்றாம் மார்பு
இவனுக்கு ஆறாம் விரல்

தொலைபேசி
உடலோடு கட்டுண்ட
ஐந்தாவது உடை

தொலைபேசி
மனசோடு ஒட்டுண்ட
நவீன மச்சம்

முடிந்தவரை பேசுகிறான்
இருந்தும் வருந்துகிறான்
முடிவெட்டும் போது
முடியவில்லை என்று

மாட்டு வண்டியும் பஞ்சராகிறது
ஓட்டுனரிடம் செல் இருப்பதனால்
பத்துவயதிலே பருவமடைகிறாள்
பள்ளிப்பையினுள் செல் இருப்பதனால்

தொலைபேசி சிரிக்கிறது.....
உனக்கு பில்கட்ட
நானென்ன பில்கேட்ஷா-காதலன்
வக்கில்லை பில்கட்ட
வழியாதே பிளீஸ்-காதலி

தொலைபேசி அழுகிறது....
அடிக்கடி அழைக்காதே-காதலி
இடைக்கிடையாவது அழையடாமகனே-தாய்

தொலைபேசி சிணுங்குகிறது....
வீகெண்டிலும் படுபிஸியாம்
பேய்மென்ற்ரோ வெறி லோவாம்

தொலைபேசி சபிக்கிறது....
விபச்சாரியிடமும்- கழிவு
விலைபேசும் மனிதர்களை

தொலைபேசியில்...
ஊமைக் காதலியும்
ரெக்ஷ்ற் அனுப்புகிறாள்
பூசாரிக்கும் ஆர்டர் வருகிறது

தொலைபேசிக் காதலில்
தொலைந்து போனது காலம்
குலைந்துபோனது குடும்பம்

கையில் கடிகாரம்
காலம் மனிதனின் கையில்
கையில் தொலைபேசி
மனிதன் காலத்தின் கையில்

நட்புடன்,
அ.பகீரதன்

Sunday, November 27, 2011

கார்த்திகைப் பூக்கள்


வலியை மையாக்கி
வலிமையை கையாக்கி
வடிக்கிறேன் கவியொன்று
வடிகிறது கண்ணீர்த்துளியொன்று
 
ஒருகையில் பூவொன்று
மறுகையில் பாவொன்று
விழிமூடி அழுகின்றேன்
வழிதேடி அலைகின்றேன்

தீபமேற்ற யாருமில்லை
தீயாய் எரிகிறது மனம்
பூ தூவ நாதியில்லை
புழுவாய் துடிக்கிறது மனம்

கடவுளுக்கு சமானமான
கார்த்திகைப் பூக்கள் எல்லாம்
காடையரின் காலடியில்
கசங்கிக் கிடப்பதென்ன

கைவிலங்கை உடைத்தெறிந்த
கார்த்திகைப் பூக்கள் எல்லாம்
காலடியில் வீழ்ந்த
காலத்தின் கோலமென்ன

யார்விட்ட சாபமோ
பார்செஞ்ச மோசமோ
கல்லறையெல்லாம் காகத்தின்
கழிப்பறையான கொடுமையென்ன

போருக்குத் துணிந்த புலிகளென்று
பாருக்குத் தெரிந்த பின்னும்
யாருக்குத் தேவையென்று
நோர்வேக்கு தலைசாய்த்தீர்

நேர்வேய் தெரியாத நோர்வே
நேர்மை அவனிடம் நோவேய்
பார்வை பிழையான நோர்வே
பாழாய் போனதே எம்வேய்

இந்தியத் தலையீடு இழுக்கு
எண்பதுகளில் தெரியுமே உமக்கு
ஈழம்தான் இறுதி இலக்கு
எப்படிப் பிசகியதோ உங்கள் கணக்கு
 
உலக மாற்றமென்று
உண்மை தோற்றிடுமோ
உலகப் பொருளாதாரமென்று
உழைப்பு தோற்றிடுமோ
 
எண்ணாடும்சேர்ந்து எண்திசையும்வந்து
ஏறிநின்று அடித்தபோதும்-எழுந்து நின்று
மறத்தமிழன் நாமென்று மார்புதனை கொடுத்தீரே-உமை
மறப்பதென்றால் மறுஜென்மம் வேண்டுமய்யா

விண்ணிலிருந்து கண்ணீரை தாருங்கள்
விடுதலையாய் மீண்டும் வாருங்கள்
மண்ணிலிருந்து மரமாய் நிமிருங்கள்
தமிழருக்கு வரமாய் வாருங்கள்

தமிழினம்....
தவித்துக் கிடக்கிறது
தனித்துக் கிடக்கிறது
செய்வதறியாது
செத்துக்கிடக்கிறது

சேர்ந்தியங்க யாருமில்லை
சேர்ந்தழவே நாதியில்லை
செய்வதற்கு நிறைய உண்டு
செய்வதற்கு யாருண்டு

நெஞ்சை நிமிர்த்திடு மனிதா
நீதி கிடைத்திடும் ஒருநாள்
சத்தியமாய் வாழடா தமிழா
சமத்துவம் வந்திடும் திருநாள்

வாழ்த்துவோம்
வணங்குவோம்
வழிபடுவோம்
வழிசமைப்போம்

நட்புடன்,
அ.பகீரதன்






Friday, November 25, 2011

காதலியின் கல்லறை (பகுதி 2)


கல்லூரிப் பெண்ணுக்கு
கல்லறையில் என்னவேலை?
கல்யாணப் பெண்ணுக்கு
கல்லறைமீது என்ன காதல்?

கர்ப்பமல்லோ தரிக்க வேணும்-ஏன்
கல்லறையை தரிசித்தாய்?
தேனிலவல்லோ போக வேணும்-ஏன்
தேய்நிலவாய் ஆனாய்?

என்னில் வீழ்வதென்று
விண்ணில் வீழ்ந்தாயோ?
என்னை வெல்வதென்று
இயமனிடம் தோற்றாயோ?

நான் இரவல் வாங்கியதால்
இயங்க மறுத்ததோ உன்னிதயம்-என்
கவிதைகளை இரசிப்பதற்கா
கல்லறையில் தூங்குகிறாய்

காதல் வலித்ததென்றா
கல்லறையை நீ தேர்வு செய்தாய்
இந்தச் சில்லறையின் சேட்டையாலா
அந்தக் கல்லறையில் ஓய்வுபெற்றாய்

அப்படியே நிலைத்திருக்கு
அழகான நினைவெனக்கு
கண்ணீர் துளியோடு
கடைசியாக நீ சென்றகாட்சி

மந்திரமாய் புன்னகைத்து-என்னுள்
தந்திரமாய் வந்தவளே
விருந்துண்ணும் வயதினிலே
மருந்துண்ட மர்மமென்ன?

இரட்டைப் பின்னலிட்டு
இயல்பான முகம் அமைந்து
பாடசாலை போறபெண்ணே
பாடையிலே போறெதென்ன?

பள்ளிச் சிறுமியடி-என்
பருவத்துச் சிறுக்கியடி
அள்ளி அணைக்குமுன்னே
கொள்ளி அணைச்சதென்ன?

தொடும்தூரம் நின்றுகொண்டே
தொலைபேசியில் வருபவளே
தொலைதூரம் சென்றுவிட்டு
தொலைபேசியை எங்குவிட்டாய்?

முத்தங்கள் தந்ததில்லை-நீ
முந்தானை விரித்ததில்லை-என்னுள்
எப்படிநீ கலந்தாயோ-ஏன்
கல்லறையில் வீழ்ந்தாயோ?

அடைந்துவிட நானிருக்க-நீ
அடங்கிவிட்ட கொடுமையென்ன?
சேர்ந்திடவே நாளிருக்க
சேர்ந்துவிட்ட சேதியென்ன?

சுண்ணக்கல் வேண்டாம்-என்கண்மணிக்கு
சுடுகாடும் வேண்டாம்
இதயத்தில் இருப்பவளை-என்
இல்லத்தில் வைத்திடுங்கள்

மலர்வளையம் வேண்டாம்-என்கண்மனிக்கு
மந்திரமும் வேண்டாம்
என்எண்ணத்தில் இருப்பவளை
என்னிடத்தில் தந்திடுங்கள்

கல்லறையில் உறங்குகிறோம்
உயிரோடு நானும் உயிரில்லாமல் நீயும்
உன்னோடு வாழத்தான் முடியவில்லை
ஒன்றாய் சாகமுடிகிறதா பார்ப்போம்

வாடிக்கிடக்கிறேன் உன்பூந்தோட்டத்தில்
நானும் ஒரு பூவாய்-அவை
வாடி விழுகின்றன சோகத்தில்-நான்
விழுந்து வாடுகிறேன் மரணத்தில்

உங்கள் நேரத்திற்கு நன்றி.

நட்புடன்,
அ.பகீரதன்