A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, December 16, 2011

கவிதைகள்


அள்ளிக்குவித்த எருக்கூட
ஐம்பதுரூபாய் நோட்டானது
எழுதிக்குவித்த கவியெல்லாம்
இன்று என்னானது?

சலிக்காது எழுதியகவியெல்லாம்
சல்லிக்காசு ஈட்டவில்லை
மல்லிகாக்கு எழுதியகவியை
சொல்லிக்க யாருமில்லை

விசார மனசுகொண்டு
வீணான கனவுகண்டு
வீணாவுக்கு வடித்தகவியெல்லாம்
வீணான கதையாரறிவார்?

காசி பிறந்தமண்ணில்
கவிஎழுத நாதியில்லை
புதுவை பூத்தமண்ணில்
எதுகை மோனையில்லை

பாரதியின் கவிதைகளை
பாதியிலே தூங்கவிட்டு
வாலியின் வரிகளிலே
ஜாலியாய் தூங்குவதோ?

மானிடம் வளர்த்த
கவியின்று-சினி
மாவிடம் கிடக்குதே
சிக்குண்டு

காதற் கவிபாடும்
பிழைப்புக் கவிஞனுக்கு
உழைக்கும்வழி தெரிகிறது-ஏனோ
உழைப்பின்வலி புரிவதில்லை

கழிவறை கழுவும் கடைநிலை பெண்ணுக்கும்
கருவறை தந்த அன்னையின் மண்ணுக்கும்
கல்லறை துயிலும் கார்த்திகைப் பூவிற்கும்
கற்றறிவாலே நற்கவிபாட வரமொன்று தாமுருகா
 
குறிதவறா கோலொன்று தாமுருகா
நெறிபிறழா வாழ்வொன்று தாமுருகா
வெறிகுறையா வேகமும் தாமுருகா
பார்புகழ படிப்பவர்நாபுகழ பாவொன்றுதாமுருகா

அன்பின் வழியொழுகி அதுவேமுடிவாகி
அனைத்தையும் நேசிக்கும் ஆளுமைதாமுருகா
உனையேநாடி என்இருப்பைத்தேடி முடிகண்டு
காலமெல்லாம் காதல்செய வரமொன்றுதாமுருகா

 
அ.பகீரதன்

No comments:

Post a Comment