A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, December 30, 2011

காலம்

கடிகாரக் கணிப்பு
கருவறை முதல்
கல்லறை வரை
ஆயுளாகிறது.

வாழும் வருடங்களை
ஆயுளாக அழைக்கலாம்-ஆனாலும்
விழித்த நாட்களையே
ஆயுளாக அளக்கலாம்

காலம் கடந்தும்
ஞாலம் புகழ
வாழ்ந்த சிலரோ
காலஅருமை அறிந்தார்

யாரும் அறியா
வாழ்க்கை வாழும்
நம்மில் பலரோ
காலவிரயம் அறியார்

வாங்கிய அறுவையும்
தூங்கிய பொழுதும்
ஏங்கிய இரவும்
காலத்தின் சாபம்

உழைத்த நாளும்
உதவிய பொழுதும்
கற்கை காலமும்
காலத்தின் வரம்

காலம் என்பதும் மூச்சு
தொலைந்தால் போச்சு
எதற்கடா வீண்பேச்சு
எழுந்துநீ கோலோச்சு

காலம் என்பதும் மூலதனம்
முதலிட்டால் முழுலாபம்
முடங்கிவிட்டால் இல்லைலாபம்
தூங்கிவிட்டால் என்னலாபம்

காலம் என்பதும் கடவுள்
காண இயலாது கடஉள்-நீ
காலத்தை நேசித்தால்-உனை
கடவுள் நேசிப்பான்
          
மூவைந்து முதலாய்
மூபத்து வரைக்கும்
பொன்னான வயசு
கண்ணாக கருது

அந்த வயதில்……..
கேட்பார்புத்தி கெடுவார்
கெட்டசூழலில் நுழைவார்
வாளுக்குள் விழுவார்
வயசுக்குள் தொலைவார்
வறுமைக்குள்  சுழல்வார்

ராமனுக்கு பதினான்கு
நளனுக்கு ஏழரை
சிவனுக்கு ஒன்னரை
காலம்விழுங்கிய காலம்

போனவை போகட்டும்
பொங்கடா தோழா
முடிந்தவை நல்லவை
எழுந்திடு நண்பா

கழியட்டும் இவ்வாண்டு
களிப்புடனே புத்தாண்டு
காலத்தை கொண்டாடு
கட்டாயம் வென்றாகு

உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment