A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, December 23, 2011

வாழ்க்கை


வலியே வாழ்வென்று
வாடி கிடப்பதன்றி
வரமே வாழ்வென்று
ஓடி உருப்படடா

நிலையற்ற வாழ்வென்று
நிந்தனை செய்யாமல்
நித்தமும் உனதென்று
நித்திரையை வதைத்துவிடு

பணமே கேடென்பார்
பாலுணர்வு துன்பமென்பார்
துறவே சுத்தமென்பார்
கிடைத்தால் பல்லிழிப்பார்

உலகே சாபமென்பார்
உழைப்பில் மோகமற்றோர்
வாழ்வே சோகமென்பார்
வாழத் தாகமற்றோர்

தாமறிந்த உலகையே
தத்துவமாய் விட்டுசென்றார்
தாமிசைந்த வழிதனையே
தத்ரூபமாய் சொல்லிசென்றார்

தத்துவம் குப்பையடா
மொத்தத்தில் குழப்பமடா
வாழ்க்கை சொர்க்கமடா
வாழப்பல மார்க்கமடா

பிடித்தபடி நடந்துவிடு
பிறர்நோகா இருந்துவிடு
பிறர்நலமாய் வாழ்ந்துவிடு
பிறவிப்பயனை அடைந்துவிடு

பணத்தின் அருமையினை
பாதிவயதில் நீயறிவாய்
பணத்தை தேடுகையில்
மீதிவயதை நீதொலைப்பாய்

தேடிக்குவித்த செல்வம்
தேடாமல்குவிந்த செல்வம்
நாடாமல் இருந்துவிடு
நாளெல்லாம் வாழ்ந்துவிடு

கோடான வழியுண்டு
கோபுரமாய் நீவாழ
கேடான வழியெதற்கு
வாடாநீ வழியமைத்து

மூலதனம் இல்லையென்று
மூலையில் முடங்காமல்
மூளையை தனமாக்கி
முன்னேறு முடிந்தவரை

ஆயுதம் இல்லையென்று
அழுது ஆற்றாமல்
அறிவாயுதம் கொண்டு
ஆயத்தம் ஆகிவிடு

மனத்தை கட்டிவிடு
தினத்தை திட்டமிடு
சினத்தை விட்டுவிடு
தனத்தை வட்டமிடு

பணமே இலக்கு-அதை
மனமே விலக்கு
குறி இலக்கை-அங்கே
குவி அகத்தை

எதுவும் உனதில்லை-நம்மோடு
எள்ளும் வருவதில்லை
தினமும் இதைநினைத்து-அனு
தினமும் வாழ்ந்துவிடு

நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment