A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, April 3, 2014

மனதில் பட்டது


நீதிக்கான குரல்....
உனது கருத்துக்கள் அதிகாரத்தில் இருப்பவர்களிற்கும் அருவருடிகளிற்கும் சுயநலக் கும்பல்களிற்கும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் அடிமட்டத் தொண்டனிற்கும் அநீதியை எதிர்த்து நிற்கும் ஏழையின் செவிகளிற்கும் இனிப்பாக இருக்க வேண்டும். சமூக நடப்பு, சாணக்கியம் என்பவற்றையும் தாண்டி சத்தியத்திற்காக உனது குரல் ஓங்கி ஒலிக்கட்டும். இந்த உலகம் பல பிரமாக்களையும், பிதாமகர்களையும் சந்தித்து இருக்கிறது. இவர்கள் நிலையற்றவர்கள். இவர்கள் எடுத்துக் கொண்ட உண்மை மட்டுமே நிலையானது. அதுவே உலகை மாற்றிய அற்புதக் கருவிகள். அந்த உண்மைதான் காந்தியாக, கார்ல் மார்க்ஸாக நமக்குப் பயன்பட்டது. சுயநல, அயோக்கியத்தனம் சார்ந்த இந்த பூமிப் பந்தை நல்வழிக்கு உருட்டும் நெம்புகோலாக உன்னால் இருக்க முடியாமல் போகலாம்; வாய்மூடி மௌனமாக நகரும் சுயநல மனித சமூகத்தை உன்னால் ஒன்றுபடுத்த முடியாமல் போகலாம்; தர்மத்திற்காக போராடும் வர்க்கத்தை உன்னால் ஒன்றிணைக்க முடியாமல் போகலாம். ஆனாலும் என்ன? காதில் விழுவதை கணக்கில் எடுக்காமல் நெஞ்சில் எழுவதை சொல். உன் வார்த்தைகளால் நீதி கிடைக்காமல் போனலாலும் கூட, அது நாளை அநீதி செய்ய இருப்பவர்களிற்கு எச்சரிக்கையாக இருக்கட்டும். கோபத்துடன் எழுபவன் நட்டத்துடன் உட்காருவான் என்று ”கோச்சடையான்” சொல்கிறது. ஆனாலும் சமூகக் கோபம் தேவையானது. நீதிக்கான உன் கோபம் தொடர்ந்து ஒலிக்கட்டும். உன் குரல்வளையை மற்றவர்கள் நெரித்தாலும் உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். தனிமனித நட்புக்களையும், கதிரை சார்ந்த இலாப நட்டக் கணக்குகளையும் தாண்டி அவை வெளியே வரட்டும். உண்மையை முதலில் அலசி ஆராய்ந்த பின்பு பேசக் கற்றுக் கொள்வோம் அனைவரும். வாழ்வின் முடிவு எல்லோருக்கும் பொதுவானது, அது மரணம் எனும் மகிமை. அதுவரைதான் நம் ஆட்டம். வயிறும் உடலும் பசிக்கும் வரைதான் வாழ்வு.......