A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, May 25, 2012

வேண்டாமே குழுச்சண்டை


எழுதாத பொருளொன்றை
எழுதுகிறேன் மனம்நொந்து
வழுவாதே நீதிதம்பி
வள்ளுவனுக்கு நீதம்பி

கூடிக் கூழ்குடித்து
கூட்டாக வாழ்வுசெஞ்சு
குழுமமாய் வாள்பிடித்து
குதூகலமாய் வாழ்ந்தஇனம்

யாதும்ஊரே யாவரும்கேளீர்
தீதும்நன்றும் பிறர்தரவாரா
சொன்னவையோ பலகோடி
வென்றவையோ ஒருகோடி

சிற்றறிவாய் சிந்தித்து
சீக்கிரமே நிலைதளர்ந்து
சிறுபிள்ளையாய் அடம்பிடித்து
குழுக்குழுவாய் சீஇது என்னவேலை?

இனாமாய் புகழடைய-என்
இனமா உனக்குவேணும்
கனவாய் எல்லாமாச்சுதடா
இரக்கம்கொஞ்சம் காட்டுங்கடா

பதவிக்காய் பத்துப்பேர்
தொழிலிற்காய் பாதிப்பேர்
புகழிற்காய் மீதிப்பேர்
தமிழிற்காய் யாருங்கடா

அறிவாலே உயருங்கடா
செறிவாக உழையுங்கடா
நேர்மையுள்ள தொண்டனுக்கு
நேரம்வரும் தடைதாண்டுதற்கு

புழுப்புழுவாய் நெளியுதங்கே உன்னினம்
புரியாமல் குழுக்குழுவாய் பிரிந்தென்ன பலன்
ஆசையாலே அழுக்கழுக்காய் உக்குதடா உன்மனம்
அறியாமையாலே அடிமைகள் குழுக்குழுவானால் என்னபலம்

மாட்டீன்லூதரின் கடின உழைப்பு
மாற்றமானது ஒபாமாஎனும் கறுப்பு
விதையுங்கடா சேர்ந்து இன்று
விளையும் ஒருநாள் பெருநெல்லு

நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

Sunday, May 13, 2012

அன்னையர் தினம்


அன்பும் காதலும் மட்டுமே மனித மனதை அமைதிப் படுத்தக்கூடியவை; அதிலும் தாய்மை தரும் அன்பும் அரவணைப்பும் வாழ்வையே அர்த்தமாக்கக் கூடியவை. தாய்க்காக நாம் செலவழித்த காலங்கள் மிகச்சொற்பம், ஆனாலும் தாய் நமக்காக செலவழித்த காலங்கள் ஏராளம்; நாம் தாய்க்காக செய்தவை மிகச்சொற்பம், தாய் நமக்காக செய்தவை  கணக்கில்லாதவை. நாம் அலட்டிக்கொள்ளாமல் அன்றாடம் சுவாசிக்கும் காற்றைப்போல, அன்னை அனுதினமும் அன்பை அள்ளி அள்ளி வீசியவள். அந்த எதிப்பார்ப்பில்லாத அன்னையின் அன்புதான் நம்மை மனிதனாக்கியது. நம்வாழ்வை சுவாரசியப்படுத்தியது. அம்மா என்பவள், வெறும் இடுப்புவலியை மட்டும் பொறுத்தவள் அல்ல; வாழ்க்கை பூராகவும் எங்களுக்காக எல்லா வலிகளையும் பொறுப்பவள். அம்மாக்கள் செய்கின்ற தியாகம் அளவிடற்கரியது. அதுதான் அம்மாக்களை எல்லோருக்கும் பிடிக்கிறது. அவள் தொலைதூரத்தில் இருந்தாலும், வானத்தில் இருந்தாலும் நமக்காக வாழ்த்திக் கொண்டேயிருப்பாள். நாமும் அவள் நலனுக்காய் இன்றாவது பிரார்த்திப்போம். என்தோழி சோபனா, ஏதோ கொஞ்சம் சொல்லப் போகிறாளாம்; பொறுமையிருந்தால் நின்று கேளுங்கள். 

நான் தான் சோபனா, இப்போது வயது முப்பதையும் தாண்டி தாய்மைக்குள் பிரவேசிக்கிறேன். எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. நான் மூத்தவள், அம்மாவுடன் நெருக்கமாகப் பழகியவள். அம்மாவின் பாசத்தை அப்படியே அள்ளிப் பருகியவள் என்றுகூட சொல்லலாம். அம்மா அனுபவித்த வாழ்வியல் போராட்டங்களை எல்லாம் பக்கத்திலிருந்து பார்த்தவள். ஆனாலும் எங்களிற்காக அம்மா அடைந்த வேதனைகளும், போராட்டங்களும், சகிப்புத்தன்மையும் அப்போது எனக்குப் புரியவில்லை; ஆனால் இப்போது நினைத்தால் புல்லரிக்கும்; பாசத்தின் உச்சம் தாய் மட்டுமே என்று என்நா உச்சரிக்கும். திருமணப் பந்தத்திற்குள் நான் அகப்பட்டுக் கொண்டபோதுதான் அம்மாவின் பிரிவு எனக்கு வலிக்கத் தொடங்கியது. ஆணாதிக்க சூழலில் சிக்குண்ட தமிழ்த்தாய் சந்தித்த எல்லா அவஸ்தைகளையும் அம்மா எங்களிற்காக சகித்துக் கொண்டாள். நாங்கள் மட்டுமே தன் உலகமென தன் வட்டத்தைச் சுருக்கிக்கொண்டாள். தனக்காக அவள் எதையும் அனுபவிக்க முற்ப்பட்டதில்லை. ஆனாலும் எங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் அவள் ரசித்தாள். எங்களை வளமூட்ட அவள் தினமும் தேய்ந்தாள். 12 வயதில் எனக்கு கடுமையான செங்கமாரி நோய் ஏற்ப்பட்டு ஒருமாதமாக வைத்தியசாலையில் இருந்தேன். அந்த நாட்களில் தாய் காட்டிய கருணையும் அன்பும் இரக்கமும் இப்போதும் எனக்கு வரம்போல இனிக்கிறது. தாய் என்பவள் ஒரு தெய்வம்தான்.

அம்மா நிலாவைக்காட்டி அமுதூட்டியவை எல்லாம் எனக்கு நினைவில்லை. ஆனாலும் அம்மா முதன் முதலாக எனக்கு அடித்தது இப்போதும் நினைவிருக்கிறது, அப்பா குறுக்கே வந்து அந்த தடியைப் பறித்து எறிந்துவிட்டு அம்மாவை முறைத்தபடி சென்றதும் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது. அம்மா கண்டிப்பானவள்; கண்மூடித்தனமாக என் நேர்மையை நம்பியவள்; மிகக்கேவலமான பொய் ஒன்றை சொன்னதற்காகத்தான் மூர்க்கமாக அப்படி அடித்தாள். அவள் கோபித்தால் சிவந்துவிடுவாள்; கண்ணை அடிக்கடி வெட்டுவாள்; உதட்டை பல்லால் இறுக்கிக் கடித்துக்கொள்வாள். நான் ரசித்த நீலாம்பரி என் அம்மா; என்வரையில் மிக அழகானவளும் கூட.

அன்று 14 ஆவது பிறந்தநாள் எனக்கு. காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது. பாடசாலை விட்டு நானும் என் தோழியும் வந்துகொண்டிருந்தோம். காற்றின் தீண்டலில் என் பாவாடை மேலே எழுந்து எழுந்து அடங்கியது. தோழி என்காதிற்குள் கிசுகிசுத்தாள். எனக்குத் தெரியாமலே எனக்குள் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் சிறுமி என்ற சுதந்திரம் என்னிடமிருந்து பறிபோன தருணம். கொஞ்சம் பயந்துபோய் அம்மாவிடம் சொன்னேன். அம்மா என்னை கட்டியணைத்தாள்; அவளின் ஆனந்தக்கண்ணீர் என் கன்னங்களில் பட்டு என்னை ஆசுவாசப்படுத்தியது. அம்மாவிடம் மட்டுமே பகிர்ந்து கொண்ட பல நிகழ்வுகளில் இது முக்கியமான ஒன்று.  பூப்புனிதச் சடங்கை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டுமென அப்பாவிடம் அம்மா அடம்பிடித்து  வெற்றியும் கண்டாள்.

என்னை ஒரு மருத்துவிச்சியாக்கிப் பார்க்க வேண்டுமென அம்மா படாதபாடுபட்டாள். எனக்காக படிப்பதைத்தவிர எல்லாம் எனக்குச் செய்தாள். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் என்னோடு சேர்ந்து அவளும் எழுந்து தேநீர் போட்டுத்தருவாள். என் கவலையீனமும் சூழ்நிலைகளும் நான் வெட்டுப்புள்ளிக்குள் அகப்பட்டு கோட்டை விட்டேன். பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்த்துவிட்டு கண்கலங்கியபடிதான் அம்மாவிடம் சொன்னேன். எனது ஏமாற்றத்தைப் புரிந்துகொண்டு தனது ஏமாற்றத்தை காட்டிக்கொள்ளாமல் சமாளித்தாள். அம்மாவின் உச்சகட்ட சகிப்புத்தன்மையது. அப்படியொரு வலியை நான் அவளுக்கு கொடுத்திருக்கக்கூடாது. ஆனாலும் நான் தோற்கடிக்கப்பட்டேன். அப்பா எனக்காக ஒரு புதிய லுமாலா சைக்கிளை வாங்கிவந்தபோது என்னைவிட என் அம்மாதான் பெரும் சந்தோஷமடைந்தாள்.

தம்பியின் தீவிரமான நோயால் அம்மா நொந்துபோயிருந்த பேரிடியாக அப்பா திடீரென இறந்து போனார். அம்மாவிற்கு அப்போது வெறும் 41 வயதுதான்; எனக்கு வயது 22. யாருக்கும் நடக்கக்கூடாத துன்பம் எங்களிற்கு நேர்ந்தது.  ஜீரணித்துக்கொள்ளமுடியாத அந்த இழப்பிலும் அம்மா என்மீது அழமாக கருணை கூர்ந்தாள். வாலிபக் குழப்பங்களாலும் வயதின் தடுமாற்றங்களாலும் நான் அலைக்கழிக்கப்பட்டபோதும் அம்மா ரொம்ப பொறுமை காத்தாள். தன்வாழ்வின் மீதான அவநம்பிக்கையான தருணங்களிலும் என்வாழ்வின் மீது நம்பிக்கை வைத்தாள். தன் இருண்ட காலங்களிலும் என் எதிர்காலத்திற்க்காய் கோயில் கோயிலாய் ஏறி இறங்கினாள். தான் தடுமாறிய தருணங்களிலும் அவள் எனக்கு வழிகாட்டினாள். ஆம்….. எந்தாயை நான் தினமும் சுவாசிக்கிறேன்.

கால ஓட்டத்தின் நியதியால், அம்மா என்னை வழியனுப்ப கட்டுநாயக்கா விமானநிலையம் வந்தாள். நான் அப்பாவைப் போல ரொம்பவும் அழகாக இருந்தேன். என்நகரத்து அழகிகளில் நான்தான் ரொப் என எண்ணி திமிரோடு வாழ்ந்த காலங்களும் உண்டு. எனக்கு வரன் கிடைத்து நான் கனடா பயணமாகிறேன். அம்மா அழுகையை அடக்கிக்கொண்டு நின்றாள். அவளுக்கு ஆறுதலாக இருந்த கடைசி உறவும் தொலைதூரம் போவதை தாங்கமுடியாமல் திணறினாள். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டாள். அந்தக் கணங்களில் அப்பாவை நான் ரொம்பவும் மிஸ் பண்ணினேன். கவலைப்படாமல் போய்வா என்று அப்பா சொன்னமாதிரி உணர்ந்தேன். அம்மா கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி ஒன்றையும் கழட்டி மாட்டிவிட்டாள். உணர்வுகளின் கொதிப்பை ஆற்றுப்படுத்த முடியாமல் இரண்டுபேரும் அழுதுவிட்டோம். கடைசியாக மூன்று முத்தங்கள் தந்தாள். அவை எனக்குள் ஆயுள் கைதியாக அடங்கிக்கொண்டன. பிரியாமல் இருவரும் பிரிந்தோம். அம்மாவை தனியேவிட்டு நான் திருமணம் என்கின்ற சுபவாழ்வில் தூக்கி வீசப்பட்டேன்.

எல்லாப் பெண்களையும் போலவே நானும் தாய்ப்பாசத்தை கணவனின் பாசத்தால் ஈடுகட்டலாம் என  கற்பனையோடு பறந்தேன். ஆணின் மேலாதிக்க மனோநிலை, ஆணாதிக்க வளர்ப்பு, பெண்ணின் மனதை புரிந்து கொள்ளமுடியாத ஆண்மையுணர்வு, தன்னலம் போன்ற பலகாரணிகளால் தாயின் பாசத்தின் ஒரு பங்கைக்கூட கணவன்மார்களால் நிறைவேற்ற முடிவதில்லை. இத்துர்ப்பாக்கிய சூழலில்தான் ஒருபெண் வாழ வேண்டியிருக்கிறது. தாய் தந்தையரின் பாசம் அந்திமழைபோல, கணவனின் அன்பு நீர்த்தடாகம் போல. மழை எதிர்ப்பார்ப்பின்றி பொழிந்து கொண்டேயிருக்கும். மழையில் நனைவது சுகம். நீர்த்தடாகத்தில் அப்படியல்ல. நீர்த்தடாகத்தில்  பாதுகாப்பு உணர்வோடு அந்த வட்டத்திற்குள் நின்று நனைய மட்டுமே முடியும். மழையில்தான் மெய் மறந்து நீராடமுடியும். அம்மாவின் மடிமீது தூங்க ஆசையாக இருக்கிறது. அம்மாவிடம் பேச்சு வாங்கவும் ஆசையாக இருக்கிறது. அம்மாவின் கருசனை; அதற்கு ஏதுஇணை.

நன்றி.
நட்புடன்.
அ.பகீரதன்

Friday, May 4, 2012

காதலித்துப் பார்


என்விதியே ஒருதனி வழிப் பாதை
அங்கேஉன் விழியே  தனியொரு காதை
நினைவுகள் கனவுகள்  தினம் மலருது
வெறும் கவிதையாய் வெந்து கருகுது

நீயது நீலவிழியது மாநிறம் உன்அழகு
மேயுதுகண்ணு தாவுதுமனசு நீவந்து பழகு
வாடுது  துணைதேடுது நீஎந்தன் உலகு
தேடுது மனம்கூடுது உளமது இளகு

உன் இதழது உதடது தேனதுகசியுது  சொர்க்கம் 
சோர்வெது சுகமது  உன்மார்பதுநீஅழகிகள்  வர்க்கம்
உன்உடையது உன்இடையது என்விழிகளில் மரிக்கும்
மென்சிரிப்பொலி நற்கொலுசொலி என்செவியினில் தரிக்கும்

கருங்கூந்தலது கட்டுடல்மேனியது கொண்டது மாநேசம்
அழகிலே உன்திமிரது அசைவிலேநீ தேரதுஆகா அதுசுகம்
மலரிலும்  மல்லிமலரிலும்  இனியது  உன்வாசம்
என்மனசிலும் உள் உயிரிலும் நீயே  தினவாசம்

கடலதுதினம் அலையினை வருடுது அதுவாழ்தல்
உடலது உயிரது உன்அணைவினை தேடுதுகாதல்
மலரதுஅனுதினம் அதன்வாசனை நுகருது அதுமோகம்
மனசதுகொடியது உன்நினைவினை நாடுது இதுதாகம்

காதல்பழையது  காலவலியது வருவது சுலபம்
கழிவது தனிமையில் காலம்கழிவது அவலம்
கனிவது இனிமையில் காதல்பொழிவது உலகம்
கைகொடுப்பது காதல்தொடுப்பது கனிந்திடு கமலம்


உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்