A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, November 25, 2011

காதலியின் கல்லறை (பகுதி 2)


கல்லூரிப் பெண்ணுக்கு
கல்லறையில் என்னவேலை?
கல்யாணப் பெண்ணுக்கு
கல்லறைமீது என்ன காதல்?

கர்ப்பமல்லோ தரிக்க வேணும்-ஏன்
கல்லறையை தரிசித்தாய்?
தேனிலவல்லோ போக வேணும்-ஏன்
தேய்நிலவாய் ஆனாய்?

என்னில் வீழ்வதென்று
விண்ணில் வீழ்ந்தாயோ?
என்னை வெல்வதென்று
இயமனிடம் தோற்றாயோ?

நான் இரவல் வாங்கியதால்
இயங்க மறுத்ததோ உன்னிதயம்-என்
கவிதைகளை இரசிப்பதற்கா
கல்லறையில் தூங்குகிறாய்

காதல் வலித்ததென்றா
கல்லறையை நீ தேர்வு செய்தாய்
இந்தச் சில்லறையின் சேட்டையாலா
அந்தக் கல்லறையில் ஓய்வுபெற்றாய்

அப்படியே நிலைத்திருக்கு
அழகான நினைவெனக்கு
கண்ணீர் துளியோடு
கடைசியாக நீ சென்றகாட்சி

மந்திரமாய் புன்னகைத்து-என்னுள்
தந்திரமாய் வந்தவளே
விருந்துண்ணும் வயதினிலே
மருந்துண்ட மர்மமென்ன?

இரட்டைப் பின்னலிட்டு
இயல்பான முகம் அமைந்து
பாடசாலை போறபெண்ணே
பாடையிலே போறெதென்ன?

பள்ளிச் சிறுமியடி-என்
பருவத்துச் சிறுக்கியடி
அள்ளி அணைக்குமுன்னே
கொள்ளி அணைச்சதென்ன?

தொடும்தூரம் நின்றுகொண்டே
தொலைபேசியில் வருபவளே
தொலைதூரம் சென்றுவிட்டு
தொலைபேசியை எங்குவிட்டாய்?

முத்தங்கள் தந்ததில்லை-நீ
முந்தானை விரித்ததில்லை-என்னுள்
எப்படிநீ கலந்தாயோ-ஏன்
கல்லறையில் வீழ்ந்தாயோ?

அடைந்துவிட நானிருக்க-நீ
அடங்கிவிட்ட கொடுமையென்ன?
சேர்ந்திடவே நாளிருக்க
சேர்ந்துவிட்ட சேதியென்ன?

சுண்ணக்கல் வேண்டாம்-என்கண்மணிக்கு
சுடுகாடும் வேண்டாம்
இதயத்தில் இருப்பவளை-என்
இல்லத்தில் வைத்திடுங்கள்

மலர்வளையம் வேண்டாம்-என்கண்மனிக்கு
மந்திரமும் வேண்டாம்
என்எண்ணத்தில் இருப்பவளை
என்னிடத்தில் தந்திடுங்கள்

கல்லறையில் உறங்குகிறோம்
உயிரோடு நானும் உயிரில்லாமல் நீயும்
உன்னோடு வாழத்தான் முடியவில்லை
ஒன்றாய் சாகமுடிகிறதா பார்ப்போம்

வாடிக்கிடக்கிறேன் உன்பூந்தோட்டத்தில்
நானும் ஒரு பூவாய்-அவை
வாடி விழுகின்றன சோகத்தில்-நான்
விழுந்து வாடுகிறேன் மரணத்தில்

உங்கள் நேரத்திற்கு நன்றி.

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment