A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Saturday, November 5, 2011

ஈழத்து நாவல்கள் ஓர் அலசல் - பகுதி 3 (தியாகப் பயணம்)



இத்தொடரின் நோக்கம்: அதிகம் கண்டுகொள்ளப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கிறது ஈழத்து நாவல்கள். அவற்றை சீர்தூக்கி ஊக்கிவிப்பதே இத்தொடரின் நோக்கம்.

நாவல் பெயர்: தியாகப் பயணம்

இந்நாவலாசிரியர்:
புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.கே.மகேந்திரன், (M.A)
புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து 1996 அமரத்துவம் அடைந்தவர். பேச்சு, எழுத்து, அரசியல், பொதுவாழ்க்கையில் நீண்ட பங்காற்றியவர்(மேலும் அறிய பிற்சேர்க்கையை பார்க்கவும்).

வெளியீடுகள்:  1 அரசியல் கட்டுரைத் தொகுப்பு, 1 சிறுகதைத் தொகுப்பு, 1 நாவல். இது இவரது கன்னி நாவல், 176 பக்கங்களைக் கொண்ட சமூகநாவல். 15 வயது முதல் 45 வயது வரை பல பத்திரிகைகளில் எழுதியுள்ளார், இலங்கை வீரகேசரி உட்பட.

கதையின் களம்:
இது ஒரு சமூக சீர்திருத்த நாவல். ஓர் கிராமத்தில் வாழுகின்ற கல்வி கற்ற முற்போக்குவாதியின் சமூக தனிப்பட்ட வாழ்க்கை முறையை களமாக தெரிவு செய்திருக்கிறார் ஆசிரியர். கல்வி கற்ற மனிதர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின்மீது வெறும் ஆளுமையை செலுத்தாமல் சமூக அக்கறையுள்ளவர்களாகவும், தனிமனித ஒழுக்கசீலர்களாகவும், மக்களின் எதிர்கால நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களாகவும் வாழ வேண்டும் என்கின்ற வாழ்க்கைமுறையை களமாக உருவகித்து எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். இனமுரண்பாடுகளின் விளைவாக கனடாவிற்கு புலம்பெயர்ந்தாலும் அவர்கள் தாயகம் பற்றிய நினைவுகளோடு வாழ்வதையும், தாயக நிர்மாணப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்ற மனோநிலையில் இருப்பதையும் கோடிட்டபடி பயணிக்கிறது இந்நாவல். யாழ்ப்பாணம், கொழும்பு, தமிழ்நாடு, கனடா என கதாபாத்திரங்கள் நகர்ந்து கதையை சுவாரசியமாக நகர்த்திச் செல்லுகின்றன.

கதையின் பின்னணி:
ஓர் கிராமத்தின் முத்தான மூன்று நண்பர்களையும், தொழிற்சங்கத்தலைவர் ஒருவரையும் வைத்து இக்கதை பின்னப்பட்டிருக்கிறது. வியாபாரம், கல்வி, வெளிநாடு என பிரிந்து போகின்ற மூன்று நண்பர்களின் நேர்த்தியான வாழ்க்கையையும், சத்தியமூர்த்தி என்கின்ற கதாபாத்திரத்தின் இலட்சிய வாழ்க்கையையும் அழகாக காண்பிக்கிறது இந்நாவல். நெறி பிறழாமல், நீதியின்பால் வாழ்கின்ற வாழ்வின் சவால்களையும், சலிப்புக்களையும், துன்பங்களையும் அதற்கெதிராக போராடுகின்ற வாழ்வையும் இந்நாவல் பதிவுசெய்திருக்கிறது. யுத்தகாலப் பகுதியை நாவலின் காலமாக கொண்டுள்ளபடியால் யுத்தத்தின் நெடிய வாசனை நாவலின் இறுதிவரை படர்கிறது.

கதாபாத்திரங்கள்:
உயர்கல்வி கற்கின்ற மதி, தனம், பரம் என்ற முத்தான மூன்று நண்பர்களும் அவர்களுடைய அயல் கிராமத்தில் வாழுகின்ற தொழிற்சங்கத்தலைவர் சத்தியமூர்த்தி என்கின்ற மத்தியவங்கி அதிகாரியும், மதியின் வீட்டில் வளருகின்ற தாசன் என்கின்ற நண்பனும், வதனா, சாந்தி என்கின்ற உபரிக் கதாபாத்திரமுமாக வளர்கிறது கதை. சத்தியமூர்த்தியினுடைய இலட்சியத்தால் ஆகர்சிக்கப்பட்ட மதி அவருடைய தாசனாக மாற, அந்த நட்பால் சத்தியமூர்த்தி விரும்பி மதியின் சகோதரியை மணம் புரிகிறார். பின்பு அவர் வாழ்ந்த இலட்சிய வாழ்வால் சத்தியமூர்த்தியின் வேலை பறிபோக, வறுமையால் மதி பல்கலைக்கழகத்தை விட்டு வெளிநாடு போக, காதலியையும் விட்டு தாசன் இயக்கத்திற்குப் போக, பரம் லண்டன் போக, தனம் முதலாளியாக கதை வீரியம் கொள்கிறது. தலைசிறந்த பேச்சாளானாகவும் தொழிற்சங்கவாதியாகவும் வருகின்ற சத்தியமூர்த்தி சத்தான கதாபாத்திரமாக வளர்ந்து வர, அவர்வழி வந்த மதியினுடைய வாழ்வும் இலட்சிய வாழ்வாக மாறுகிறது. தாசன் இயக்க முரண்பாடுகளால் வெளியேறி தனது காதலியோடு இணைய, மதி கோடி சீதனத்தை உதறிவிட்டு வதனாவை திருமணம் செய்ய கதை நிறைவு பெறுகிறது.

·          சேரிப்புறத்தில் சீரழிபவனை சிறப்பிக்கவேண்டுமென்று சிந்திக்காத தொழிற்சங்கவாதியும் பாமரனை பண்டிதனாக்க வேண்டுமென்று யோசிக்காத அரசியல்வாதியும் நாட்டுக்குத்தேவையற்றவர்கள் - சத்தியமூர்த்தி
·          தஞ்சமடைய வழியின்றித் தவிக்கும் மக்களின் நெஞ்சத்தில் கொலுவிருக்கும் கோமானாகவே உங்களைக் காண ஆசைப்படுகிறேன். தவறி நாட்டைவிட்டு நீங்கள் புறப்பட்டால் நீங்கள் பயணப்படும்போது களனி ஆற்றில் என் பிரேதம் மிதக்கும் என்று மதிவாணனும்
·          இலஞ்சப்பேய்கள் நிறைந்த இந்நாட்டில் பஞ்சப்படுவோரின் பணத்தில் மஞ்சங்கட்டுவோர் மலிந்திருக்கும் இந்நாட்களில் இலட்சத்தில் ஒருவராக இலங்கும் இவரையாவது நான் சாகவிடுவதாவது என்று வதனாவும்
·          எடமோனை கொத்தார் அந்தப்பொடிச்சியை வைச்சிருக்கிறாரடா – மனோன்மணி
·          என்னைக் கொல்லுங்கோ நான் பழிகாரி; வெட்டிப் புதையுங்கோ – மலர்
·          நாயகரா நீர் வீழ்ச்சியில் பெரும் கேள்விகள் இருக்கவில்லை. கனடிய குடிவரவு அதிகாரிகள் அனுதாபத்தோடு நடந்து கொண்டனர்- மதிவாணன்
இவ்வாறாக ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர்ப்புடன் வலம் வருகின்றன.


குறை-நிறை
ஆடம்பரமில்லாமல், அவசரமோ திணிப்போ இல்லாமல் தெளிந்த நீரோடை போல கதை நகர்கிறது. கிராமத்தில் தொடங்கி கொழும்பு போய் அங்கிருந்து கனடா தமிழ்நாடு என நடைபயின்று மிகச் சாதாரணமாக யதார்த்தமாக கதை சொல்லப்ப்ட்டிருக்கிறது. எண்பதுகளின் நடுப்பகுதியை கதையின் காலமாக தேர்ந்தெடுத்தபடியால் இயக்கமுரண்பாடுகள், இயக்க மோதல்கள் வேதனையோடு பதிவாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தனங்களும் அட்டூழியங்களும் பல இடங்களில் வந்து போகின்றது. உதவி புரிந்த தமிழ் பொலிஸ்காரனே இயக்கத்தில் இணைவதாக வருவது யதார்த்தம். தரப்படுத்தல், இன அடக்குமுறை, இயக்க பூசல்கள், எல்லாம் அழகாக பதிவாகியிருக்கிறது. ஆழமான நட்பு, சீதனக்கொடுமையின்மை, சாதியமின்மை, வெளிநாட்டு வாழ்க்கைகள், குடும்பச் சந்தேகம், ஊரவர் மனோநிலை எல்லாவற்றையும் கலந்து உதயமாகி இருக்கிறது. நல்ல சொல்லாடலும், அளவான அடுக்கு மொழியுமாக அற்புதமான படைப்பு இது. இருப்பினும் சமசமாஜக்கட்சியின் தலைவர் என்.எம். பெரே ராவின் அரசியல் நிகழ்வுகள், ஔவையார் பாடல், சித்தர்பாடல், அரசியல் சம்பவங்கள் மற்றும் சத்தியமூர்த்தியின் நீளமான பேச்சு என்று சில விசயங்கள் அநாவசியம் போல தென்படுகிறது. முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். “இந்த நாவல் எனது கருத்துக்களைச் சொல்வதற்கான வடிகாலே தவிர.... சிலவேளை நாவல் வரைவிலக்கணங்களை மீறிவிடலாம்”. சமூக அக்கறையுள்ளவர்கள் அனைவரும் படித்துப் பயன்பெறக் கூடிய நாவல் இது.

பிற்சேர்க்கை:
அமரர் சட்டத்தரணி எஸ். கே. மகேந்திரன், M.A, பதினைந்து வயதில் அரசியல், பேச்சு, எழுத்து பொதுவாழ்வில் இணைந்தவர். தனது கிராமத்தில் 15 வயதில் வாசகசாலை அமைத்து அறிவகம் என பெயரிட்டு பொதுவாழ்வில் ஜொலித்தவர். 15 வயதில் தொழிலாளர் தோழன் என்ற நாடகத்தை இயக்கி நடித்தது முதல் கொண்டு நிறையவே எழுதியும் பேசியும் வந்தார். அவருடைய பேச்சு மற்றும் அறிவாற்றலால் தமிழருசுக் கட்சியில் இளைஞர் பேரவையில் முன்னிலை வகித்தவர். ஈழத்தின் தலைசிறந்த ஒரு சில பேச்சாளர்களில் முன்னால் நின்றவர். கடுமையான ஒழுக்கசீலராகவும், தன்னை தான் சார்ந்த கொள்கையில் நிலைநிறுத்திகொள்ள போராடியவராகவும் நான் அறிவேன்.
புலம்பெயர்ந்து, கனடாவிலும் பொதுவாழ்வில் முஸ்தீபோடு போராடி வெற்றிகண்டவர். அவருடைய கனவுகள் பலிக்கும் தருணத்தில், திடீரென மாரடைப்பு எனும் மர்மத்தால் காலனவன் 1996 ல் அவரைக் களவாடிக் கொண்டான். இவர் ஓர் அறிவுக்களஞ்சியம். ஈழத்தமிழ் சமூகத்திற்கு இந்த மாமனிதரின் இழப்பு பேரிழப்பு ஆகும். 

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment