A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, October 30, 2011

முன்னேறு( Motivation)

விதைக்கொரு விதைக்கொரு இலக்கு
விண்ணினை அடைவது அதன் கனவு
உனக்கொரு உனக்கொரு இலக்கு
உச்சத்தை தொடுவது கனவு

விளக்கினை எரிப்பதும் காற்று
விளக்கினை அணைப்பதும் காற்று
வருவதை தினமும் ஏற்று
வாழ்வினை பறை சாற்று

கனவுகள் நல்வாழ்வினை அளிக்கும்-வெற்று
கனவுகள் நல்நாளினை அழிக்கும்
கடமைகள் சுகத்தினை அளிக்கும்-வெற்று
கடமைகள் காலத்தை அழிக்கும்

அறிவெனும் கண்கொண்டு நோக்கு
அடைவது முடிவென்று தாக்கு
வாய்மை காப்பது நல்வாக்கு
வளர்ச்சிக்கு அதுவே நற்போக்கு

விழியது வழியும் நீரை
வியர்வை வழியே சிந்து
விதிதனை மெல்ல நொந்து
வழித் தடையினைத் முந்து

தினம் ஒரு தடை-நம்
இனம் ஒரு தடை
உறவொரு தடை-நம்
உறக்கமும் தடை

கோளது எதிர்ப்பினும் வீழாய்-கொடிய
நோயது தாக்கினும் மாளாய்
ஊழ்வினை உறுத்தினும் உறங்காய்-உன்
உயிரினை இழப்பினும் தோற்காய்

வாழ்வெல்லாம் தடைகள் வரினும்
வறுமையில் தினமும் விழினும்
இலக்கினை அடையும் வரைக்கும்
இமைகளை ஒருவிழி மூடாய்

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment