A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, October 21, 2011

காதல் பரவசம் (பகுதி 2)


பிச்சையும் எடுத்து விடுவேன்
உனக்கு சில்லறைகள் தேவைப்பட்டால்

வண்ணாத்துப் பூச்சிகளை
எனக்குப் பிடிக்கிறது
அவை உன்னைப் போல
மென்மையாக இருப்பதனால்

பிச்சையும் எடுத்து விடுவேன்
உனக்கு சில்லறைகள் தேவைப்பட்டால்

எதையும் இரவல் வாங்காதவன்
கவிதைகளைக் கூட இரவல்
வாங்குகிறேன் உனக்காக

உயிரையும் விட்டுவிடலாம்
முடியாது இருவரும் ஓருயிர்

சபரி மலையெல்லாம்
எதற்கு நீ தானே என்தெய்வம்

என் புத்தகத்திற்குள்-இப்போ
மயிலிறகு இல்லை
அங்கே உன் கூந்தல் முடி

எத்தனை தடவை
அம்மா அமுதூட்டியிருப்பாள்
அத்தனையையும் சில கச்சான்
துண்டுகளால் வென்றுவிட்டாய்

என் அறையில் இருந்த
நடிகையின் படங்களை
உடைத்துவிட்டேன் அருகதையற்றவை
உன்னருகில் இருக்க

நீ முன்பே பிறந்திருந்தால்
எடிசனுக்கு இலகுவாக இருந்திருக்கும்
மின் இழைக்கு பதிலாக
உன் கூந்தல்முடியை பயன்படுத்தியிருக்கலாம்

நியாயம்தான் உன்வகுப்பு ஆண்கள் 
எல்லாம் பரீட்சையில் தோற்றது.
பரவாயில்லை பலர்
கவிஞர்கள் ஆகியிருப்பார்கள்!

எந்த தோல்விகளிற்கும்
நான் தயார் இல்லை-இப்போ
நீயும் சேர்ந்தல்லவா
தோற்கடிக்கப்படுவாய்

உனக்கு வேறேதும் வேலையில்லையா?
எப்போதும் என் நினைவுகளோடு
கொஞ்ச நேரமாவது விலகியிரு
தாயுடன்பேச, அவள் சிலுவை சுமந்தவள்.

நீ முத்தம் தந்து
விலகிச் சென்றபோது
உன் காலடிச் சலங்கை ஒலிக்குள்
ஊசலாடியது என்உசிர்.

அம்மி, அருந்ததி, மூன்று முடிச்சு.......
அதெல்லாம் எதற்கு?
நான் முழுதாக உனை
நம்புகிறபோது.

மல்லிகைப் பூக்களை
வாங்கிவரப் போவதில்லை
உன் கூந்தலைவிட
அவை நறுமணமா என்ன?

முதலிரவெல்லாம் வேண்டாம்
ஆயுளுக்கும் உன்சிரிப்பொலிகள் போதும்
நிர்வாணம் வேண்டாம்-அது
என்காதலை கொச்சைப்படுத்திவிடும்

குழந்தையை மட்டும்
கேட்டு விடாதே-உன்
பிரசவ வலியால் நான்
இறந்து போய் விடலாம்.

குழந்தை எதற்கு? உன்காலடி
மண்கொண்டு-உனைப்போல
மலர் ஒன்றை பிரசவி
அதுபோதும் எனக்கு

தூக்குத்தண்டனையை எதிர்த்து
குரல் கொடுத்தவன்-இப்போ
தூக்குத்தண்டனை வழங்குகிறேன்
காதலிக்காத எல்லோருக்கும்.

என் இதயம்
வருடலாய் இருக்கிறது
இரு இதயங்களும்
சேர்ந்து இயங்குவதாலோ?

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment