A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, October 14, 2011

காதல் பரவசம் (பகுதி 1)

மலர்களை முத்தமிடுகிறேன்
வாசனைக்காக அல்ல.
அவளின் கூந்தலில்
குடி இருந்ததனால்.

முடிந்தவரை யாரோடும்
பேசாமலிருக்கிறேன்
அவளோடு பேச வார்த்தைகள்
போதாமல் போய்விடலாம்!

கனவுகள் எல்லாம்
இப்போது காணப் பிடிக்கிறது.
அவள் இடையிடையே வந்து
கண்சிமிட்டி முத்தமிடுவதனால்.

அவள் பாதச்சுவடுகளை,
பின்பற்றியபடி நடக்கிறேன்,
முடிவில் எங்கோ அவளைக்
கண்டுவிடலாம் என்ற தவிப்பில்.

காத்திருப்புக்கள் எனக்கு
அலுப்பதேயில்லை அவள்
கட்டாயம் வந்துவிடுவாள்
என்ற கற்பனையில்

வெயில், மழை, குளிர், கொசுக்கடி
எதுவும் வலிப்பதில்லை
வலிக்கிறது அவள்
குடையின்றி நிற்கையில்

சிலவேளை வெயிலையும்
நான் இரசிக்கிறேன்
அவள் குடையோடு
வருவதனால்

செத்தவீட்டில் கூட
அழுவதில்லை அவள்
எப்போதும் என்நினைவில்
இருப்பதனால்

கிரிக்கெற், கிளித்தட்டு, கிட்டியடி..
எதுவும் விளையாடப்
பிடிப்பதில்லை அவள்
பார்வையாளராகாத பொழுதுகளில்

புத்தகங்கள் பிடிப்பதில்லை,
கணக்கு புத்தகங்களை
மட்டும் காவித்திரிகிறேன்
அவளின் கேள்விகளிற்காக

யார்மீதும் பொறாமை இல்லை
அவளுடைய நாயைத் தவிர
நான் உட்கார முடியாத இடத்தில்
உட்காந்திருக்கிறது அவள் மீது

அம்மா எனக்கு பைத்தியமாம்
நண்பன் இன்ஃபாருவேஷனாம்
மாமா எனக்கு வயசுக் கோளாறாம்
ஆசிரியர் மயக்கமாம்

இது எதுவுமில்லை அது
என் தவிப்புகளின் நிவாரணி
என் வாழ்வின் முழுமை
என் வாலிபத்தின் அழகு

இது எதுவுமில்லை அது
என்உயிருக்குள் இன்னோர்
உயிரைக் கலக்கும் விஞ்ஞானம்
இயற்கையோடு கலக்கும் மெய்ஞானம்

நான் அன்றே இறந்து விட்டேன்
அவளைப் பார்த்த பொழுதுகளில்
மீண்டும் இறந்துவிடுவேன்
அவள் பிரிகிறபோது

இரு இறப்புக்கும் இடையில்
ஓர் புதிய வாழ்க்கை
கால்கள் தரையில் படாமல்
வாழ்கின்ற ஆனந்தப் பரவசம்.

நட்புடன்,
அ.பகீரதன்


No comments:

Post a Comment