A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, October 6, 2011

ஈழத்து நாவல்கள் ஓர் அலசல் - பகுதி 1 ( பாசக்கடிதங்கள்)

நாவலின் பெயர்: பாசக்கடிதங்கள்

இத்தொடரின் நோக்கம்: அதிகம் கண்டுகொள்ளப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கிறது ஈழத்து நாவல்கள். அவற்றை சீர்தூக்கிப் பார்ப்பதே இத்தொடரின் நோக்கம்.

இந்நாவலாசிரியர் பற்றி:
அ.பகீரதன்,  புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார்.

வெளியீடுகள்: இது இவரது கன்னி நாவல்.

கதையின் களம்:
ஓர் கிராமத்தின் வாழ்வையும் அதன் அழகியலையும் சித்தரிக்கின்ற இந்நாவல்  வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் வாழ்க்கையையும் அவர்களின் சமூக அணுகுமுறைகளையும் அசைபோடுகிறது. கிராமத்தின் இயல்பியலை ஆகர்ஷித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை கோடிட்டபடி, சுவாரசியமான காதல் கதையுடன் பின்னப்பட்டிருக்கிறது இந்தச் சமூக நாவல். நகரத்தைப் போல கிராமமோ அதன் வாசிகளோ வாழ்வை முனைப்போடு தக்கவைக்க ஏங்குவதில்லைதினசரி தம்மைப் புதுப்பித்துக் கொள்ள துடிப்பதும் இல்லை. இருப்பினும் இங்கே மிக இயல்பான வாழ்க்கையும் சமூக மாற்றங்களும் நடந்தவண்ணமே இருக்கிறது. இது ஆழமாக இந்நாவலில் பதிவாகியிருக்கிறது. அறிவுஜீவிகளையும் ஆற்றலுள்ளோர்களையும் கிராமம் பிரசவித்துக் கொண்டேயிருக்கிறது; இலகுவாக நகரம் அவர்களை இரவல் வாங்கியபடி பிழைத்துக் கொண்டேயிருக்கிறது. கிராமம், நகரம், புலம்பெயர்ந்த தேசம் என்று மூன்று தளங்களில் இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும் அதிகம் கிராமியத்தையே மையம் கொள்கிறது.

கதையின் பின்னணி:
குறைந்த வருமானம் அல்லது வருமானமேயற்ற குடும்பங்கள், தரமுயர்த்தப்படாத பாடசாலை, வசதிகள் அறவேயற்ற ஒரேயொரு சிறிய அரசாங்க மருத்துவமனை, சுடரொளியாய் சிறிய வாசகசாலை, மத்தியில் தன்னம்பிக்கையாய்  ஓர் ஆலயம்- இவற்றை சுற்றிச் சுற்றியே வலம் வந்து தங்கள் இருப்பைத் தக்க வைக்க போராடும் கிராமத்து மனிதர்களின் வாழ்வை அருமையாக பதிவு செய்கிறது இந்நாவல். விவசாய நிலங்கள் பாழாய் போய், சிறுகைத்தொழில் வலுவிழந்து போக கடலையும், பனையையும் நம்பி வாழுகின்ற குடும்பங்களின் வாழ்க்கை முறை வாசிப்பவர்களின் மனசை நெருடுகிறது. இக்கிராமத்து மனிதர்கள் தினமும் சுமந்து திரியும் உக்கிர வெயிலும், அவர்களை அலைக்கழிக்கும் தண்ணீர்ப் பஞ்சமும், தினமும் காலை தொடங்கி மாலைவரை சமையலறையில் தாண்டவமாடும் வறுமையும், அலுப்பும் அசதியுமாய் கழிந்து போகின்ற நாட்களும் அழகிய சம்பவங்களாக வந்து போய் மனதிலே நிஜக் காட்சிகளாக பதிந்து போகின்றது.

கதாபாத்திரங்கள்:
புத்தனும் நபியும் ஜேசுவும், சேர்ந்த புதிய மனிதராய் ஆறுமுகத்தார் எப்போதும் நடந்து கொண்டார். முதலாளியின் மகனாய் பிறந்தும் மயிலர் கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மறைந்தார். நாகமுத்து எந்தவித சலனமோ கவலையோயின்றி பிறப்பு முதல் இறப்பு வரை அடிமையாகவே வாழ்ந்து மடிந்தான். வறுமை, சோகம், தனிமை, அவமானம் என்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தான் டாக்டராக வேண்டும் என்பதில் வாணி உடும்புப் பிடியாக இருந்தாள். இராணுவத்தால் வன்புணர்ச்சிக்குட்பட்டபோதும் இலக்கியா தன் ஆன்ம பலத்தை இழக்கவேயில்லை. மகிந்தன் ஊரைவிட்டு பிரிகிறபோது ஒரு பிடி மண்ணை அள்ளி வாயில் போட்டு மென்றபடி நடந்தான். முதலிரவுவரை தங்களுடைய காதலை ஆதவனும் வாணியும் சொல்லவேயில்லை. இப்படியாக ஒவ்வொரு கதாபாத்திரமும் நாவலில் இறுதிவரை உயிர்ப்புடன் உலாவருகிறது. பாசக்கடிதங்கள் மூலமாக பரிமாறப்படும் உணர்வுகள் இந்நாவலுக்குக் கலாதியானவை.

 அவள் கதிரைக்குப் பதிலாக பழைய உரலுக்கு மேலிரிந்து படித்து முதுகெலும்பெல்லாம் வலியாகிப் போனது,குளிச்சிற்று மாற்றிக் கட்டவே உட்பாவாடை இல்லாத குடும்பமடி நாங்க, மகள் படிப்பதற்காக விளக்கிடுமெண்ணையை இரவல் வாங்கிவந்த நாகமுத்து, அரிக்கேன் விளக்கின் சிம்னி உடைந்திருப்பதைக் கண்டு மனமுடைந்து உருகினான்”; ”முன்பு கொழும்பு போவதை நினைக்கும் போது ஏதோ பூலோகம் போவது போல இருக்கும் அவனுக்கு, இப்போது நினைத்தால் சிறைக்கு போவதைப் போல இருக்கிறது;
ஒரு பட்டு சங்கிலிகூட இல்லாமல் அவள் கோயில் திருவிழாவுக்குப் போகவே இல்லை, ஆனால் சில கிராமத்துத் தலைவர்கள் தங்கச்சங்கிலியோடு சாமி காவுகிறார்கள் ”. இப்படியான பல சம்பாஷணைகள் கதையின் களத்தை நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறது.

150ஆவது ஆண்டு பாடசாலையின் நிறைவு விழாவிற்கும் பாலு மாஸ்ரர் தாமதமாகவே வந்தார்; அதிகாலையில் தோட்ட வேலை செய்து விட்டு பாடசாலை வந்த ஆசிரியர் வீட்டு வேலை செய்யாத பிள்ளைகளை பின்னியெடுத்தார்”;  ஒல்லியாக இருந்த பீரி மாஸ்ரருக்கே குனிய நிமிரப் பஞ்சியாக இருந்தது”;  நகரத்திலிருந்து வந்து போகும் சங்கீத ரீச்சர் மீது ஏனோ அவனுக்கு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருந்தது, ரீச்சரும் அவனையே நெருக்கமாக வைத்திருப்பதாக அவன் உணர்ந்தான்”; அவன் அவளுக்காகவே வலிந்து வலிந்து அந்த பனைமரத்தில் ஏறினான், நெஞ்சல்லாம் சிராய்த்துப் போயிருந்தது”, “விளையாட்டுப் போட்டியில் அவளும் தன் இல்லத்திற்கு தெரிவாக வேண்டும் என்று பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தான்”  இப்படி பல கோணங்களில் பாடசாலை வாழ்வும் அழகாக பதிவாகியிருக்கிறது.

முதலாவது கரும்புலித்தாக்குதல், காந்தி மறுபடியும் ஈழத்தில் மரணம்”,
முன்னாள் எதிர்கட்சிச் தலைவர் படுகொலை, முன்னணி இயக்கத்தின் தலைவர் வயல்வெளியில் சுட்டுக் கொலை என்பவை பற்றிய வாதங்கள் இடைச்செருகளாய் நாவலுக்குள் அத்துமீறினாலும், “சகோதர யுத்தம் நடந்த போதே விடுதலைப் போராட்டமும் இறந்து விட்டதாக மகிந்தன் கூற அதை அலட்சியப் படுத்திய ஆதவனின் விதம் மகிந்தனுக்கு எரிச்சலூட்டியது.போன்ற அரசியல் கருத்துக்கள் சிந்தனையூட்டுகிறது. ”;

இலக்கியா இராணுவ முகாமில் தனக்கு நடந்த  பாலியல் கொடுமைகளை யாரிடமும் சொல்லவில்லை”; நாற்பது மைல் தூரம் நடந்து இடம்பெயர்ந்த போதும் அவர்களுக்கு கால்கள் வலிக்கவில்லை; மனசுதான் வலித்தது. இடம்பெயரும்போது மனிதர்களோடு மனிதர்களாக தவறிய தனது நாயை நினைத்துத் தினமும் அழுதாள்”;  தன்னுடைய பேராசிரியரை இராணுவம் கொலை செய்யும் நிமிடம் வரை ஆதவனுக்கு ஏனோ இயக்கத்திற்கு போகவேண்டும் என்று தோணாமல் போய்விட்டது”; இவ்வாறு யுத்தத்தின் வடுக்களையும் விளைவுகளையும் இந்நாவல் பதிவு செய்யத் தவறவில்லை.

ஆண்டவன் வரம் கொடாவிட்டாலும் பின்தொடரும் பக்தனைப் போல, நான் பின் தொடர்வேன். விளைந்த வேளாண்மையை வெள்ளத்திடம் பறி கொடுத்த ஏழை விவசாயி போல நிர்க்கதியாய் நாகமுத்து நின்றான்”. தண்டிய சோற்றில் காகத்தின் எச்சம் விழுந்த நிலையாக”; ”குறத்தியை மணந்த குன்றக் குமரனுக்கு கோடி பக்தர்கள் இல்லையா?போன்ற பல சொற்றொடர்கள் நாவலுக்கு அலங்காரமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் சம்பவங்களையும் விவரிக்கின்றபோது அவை அப்படியே மனதிலே காட்சிகளாக உருப்பெறுவது இந்நாவலுக்கு கிடைத்த வெற்றி எனலாம்.

வாழ்வியலுக்குள் வறுமை, விதவைகளிற்கு மறுமணம், சீதனக் கொடுமை, சமூக ஏற்றத்தாழ்வுகள், யுத்தத்தின் வடுக்கள், தேச விடுதலை என்ற பல பரிமாணங்களில் கதை நகர்ந்து செல்கிறது. சொந்தக் கிராமத்தில், பாடசாலைப் பருவத்தில் தொடங்கிய நான்கு கதாபாத்திரங்கள் நட்போடு வளர்ந்து, அற்புதமான காதல் களத்திற்குள் சென்று, சுவாரசியம் அடைந்து, தேசவிடுதலை நோக்கி நகர்ந்து,  புலம்பெயர்ந்த தேசத்திற்குள் ஊடுருவி நாவல் முற்றுப் பெறுகிறது.

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment