A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Wednesday, October 12, 2011

தொலைந்து போனவை


தாய் முலையில் முகம் புதைத்து
தாய்ப்பால் நான் குடிக்கையிலே
எம்புள்ள தாய்மொழியில்
தங்கமெடல் எடுப்பான் எண்டு
நினைத்திருப்பாள் எந்தாயி


வருசமூன்று காத்திருந்து
விசயதசமி நாள் குறிச்சு
வாழை இலையறுத்து
நல்லரிசி தடவி
நிறைகுடம் மேல் வைத்து
வெற்றிலை நுனிநறுக்கி
வெண்பா பாடிமுடித்து
அழுதபுள்ள என்கையணைச்சு
அ ஆ என்றெழுதி
ஏடு தொடக்கையிலே
அம்மாவின் தமிழ்ச்சிரிப்பு
ஆயுளுக்கும் அமுதமது.


பூவரச இலை ஒடிச்சு
புதுசாய் குழல் செஞ்சு
பிறந்த மேனியுடன்
பீப்பீ என்றபடி வட்டமிட்டு
நான் வரவே
ஆச்சி அடிச்ச தமிழ் ஜோக்கு
அப்படியே தேங்கி நிற்கும்

கோயில் விழாதனிலே
கட்டிநின்ற
வாழைக்குழையறுத்து
வழவுக்குள் மறைந்து நிக்க
கோயில் கிழவன் தந்த
வசைவரம் வார்த்தைகளாய்
அப்படியே நினைவிருக்கும்

பள்ளிக் காதலியும்
பருவத்தின் தோழியரும்
முத்துச் சொல்லெடுத்து
முத்தமாய் பொழிந்த வார்த்தை
முதுமையிலும் வந்து நிற்கும்.

அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் வசைமொழிகள்
குருவின் வழிகாட்டு
தோழியின் கவிதை
எல்லாமென் தாய்மொழியின்
துணை வந்தேன்

அழுகையில் தாலாட்டாய்
முதலிரவில் முனகலாய்
மரணத்தில் ஒப்பாரியாய்
தனிமையில் இசையாய்
எல்லாமும் எல்லாமென்
மொழிவழியே அடைந்தேன்.

மொழியின் வழியேதான்
மௌனத்தையும் ரசித்தேன்.
மொழியின் வழியேதான்
வாழ்வையும் கண்டு கொண்டேன்.
மொழி என் அடையாளமானது.
என் உயிருமானது

எப்போதும்
எல்லாமாக என் மொழி

என்னுலகெங்கும்,
பரந்து கிடந்த தாய்மொழி
இப்போ என்வீட்டுக்குள் கூட
முடங்க இடமில்லை.

என்தாயின் மொழி வேறு
என்மகவின் மொழிவேறு
இருவருக்கும் வெவ்வேறு உலகங்கள்
இடையில் நான் எதற்கு?

புலம்பெயர்வால் என்னிலிருந்து
தொலைந்தவை ஏராளம்
மொழி தொலைத்தது
என்னையே என்னிடமிருந்து.

அதுதான் நம் கடவுளுக்கே
வேறுமொழி ஒவ்வாதோ?

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment