A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, October 27, 2011

ஈழத்து நாவல்கள் ஓர் அலசல் - பகுதி 2 (வேருலகம்)

இத்தொடரின் நோக்கம்: அதிகம் கண்டுகொள்ளப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கிறது ஈழத்து நாவல்கள். அவற்றை சீர்தூக்கிப் பார்ப்பதே இத்தொடரின் நோக்கம்.
நாவல் பெயர்: வேருலகம்

இந்நாவலாசிரியர்:
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மெலிஞ்சு முத்தன், வயது 36.
புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருபவர்.

வெளியீடுகள்: 3 கவிதைத் தொகுப்புக்கள், ஓர் குறுநாவல்.
இது இவரது கன்னி நாவல், 60 பக்கங்களைக் கொண்ட குறுநாவல்.

கதையின் களம்:
புலம்பெயர்ந்து வாழுகின்ற ஒருவன் சொந்த மண்ணில், தான் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கையை அலசிப் பார்க்கின்ற ஒரு முயற்சியாக இந்த குறுநாவல் எழுதப்பட்டிருக்கிறது. ”அரிப்புத்துறைஎன்கின்ற ஓர் கற்பனைக் கிராமத்தை கதையின் களமாக உருவகித்து திமிலர் என்ற வகைக்குள் அடங்குகின்ற அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்வை அழகாக பதிவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தையும் அதன் கொடூரங்களையும் கோடிட்டபடி ஓர் கடற்றொழில் செய்யும் மனிதர்களின் கதை மெல்ல நகர்கிறது. அரிப்புத்துறை என்கின்ற கிராமத்தின் வரலாற்றை அழகான கற்பனையில் நிறுத்தி, அதன் இயல்பைச் சொல்லி அங்கே வாழுகின்ற மனிதர்களின் வாழ்வியலை, வலிகளாகவும் அவலங்களாகவும் பதிவுசெய்து இருக்கிறது இந்நாவல்.

கதையின் பின்னணி:
பிரான்சு நாட்டில், மாமாவின் வீட்டில் வளரும் பவானியை உபகதாபாத்திரமாக ஏற்று புலம்பெயர்ந்த வாழ்வின் அவலங்களையும் புலம்பெயருகிறபோது ஏற்படும் வலிகளையும் பிரயாணத்தின் இடர்களையும் மேலோட்டமாக, ஆனால் அழகாக சொல்லியபடி ஆரம்பிக்கிறது நாவல். மிக இலகுவாக கைதியாக்கப்படவும் அகதியாக்கப்படவும் கூடிய ஒரு இனத்தில் பிறந்தவன்என்கின்ற சலிப்போடு முதல் அத்தியாயம் ஆரம்பிக்கிறது. அரிப்புத்துறை என்கின்ற புனைக்கிராமத்தையும் அந்த மனிதர்களின் இயல்பான வாழ்வையும் கொண்டு கதை பின்னப்பட்டிருக்கிறது. மனித இரவுகளில் கனவுகளின் பங்கு கனமானவை. கனவுகளூடாக தன் எண்ணங்களைப் பதிவு செய்கின்ற யுக்தியை இந்நாவலில் கையாண்ட விதம் வித்தியாசமானது. வாழ்வின் போக்கும் யுத்தத்தின் வலியும் கனவுகளின் சித்திரமாக நாவலின் இறுதிவரை வந்து கொண்டேயிருக்கிறது.

கதாபாத்திரங்கள்:
ஓர் இளைஞனின் பால்யப் பருவங்கள், பெரியம்மா, பெரியப்பா, கண்மணி மாமி, மாமா, மாமியின் மகள் சசியக்கா, சேமாலை அண்ணன், பக்கத்துவீட்டு பொன்னுக்கிழவி, சந்தியாக்கிழவன் என்ற உறவுகளோடு பயணித்து இயல்பான ஒரு சமூக வாழ்வை பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் இயல்பாகவும் அவர்கள் பேசுகின்ற மொழியும் வாழ்வும் தனித்துவமாகவும் இருப்பது இந்நாவலுக்கு ஓர் சிறப்பு.
·         பொன்னுக்கிழவியின் கணவன் சந்தியாக் கிழவன், ஒரு அரூபமான புள்ளியில் நின்றுதான் கதைகளைத் தொடங்குவார். அறிவுத்தளத்தில் நின்று கதைப்பதேயில்லை”  என்பதனூடாக சமூகத்தளத்திலிருந்து விலகி வாழும் ஓர் மனிதனாக சந்தியாக்கிழவன் வருகிறார்.
·         பெரியப்பா தன் மனைவிக்கு எல்லாம் தெரியும் என்று நம்பினார்”,  பெரியப்பாவின் இன்னொரு உறுப்புப் போல அவரின் முகத்தில் பீடி இருக்கும்”,
·          ”பெரியம்மா சீலை கட்டும்போது பெரியப்பா குந்திப்பிடிச்சுக் கொண்டு கொய்யகத்த இழுத்து சரி பண்ணுவார்.
·         மாமி சிரிப்பதென்பது ஆபூர்பமான விசயம்,
·         உலுந்தையின் இறங்குப் பெட்டியில் மாமியின் உட்பாவாடை இருந்தது.
·         படுக்கையிலிருந்த பொன்னுக்கிழவிக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தது பூச்சியாடு.
·         சேமாலை அண்ணன் சசியக்காவை கேட்டார், “பொம்பிளையளும் குசு விடுவினமோ”  இவ்வாறாக கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் யதார்த்தமாக நகர்த்தப்பட்டிருக்கிறது.

குறை-நிறை:
மொழியின் கனதி குறையாமல், கதையின் காத்திரம் சிதையுறாமல் நாவல் நகர்கிறது; கனவுகளூடாக கதை சொல்லும் தந்திரமும் வெற்றியடைந்து இருக்கிறது; பிரபஞ்ச தத்துவங்களும் இரசிக்ககூடியவை. புதிய நாவலாசிரியருக்குரிய தடுமாற்றம் இல்லாமல் கைதேர்ந்த மொழியாளுமையும் சம்பவங்களை வர்ணிக்கின்ற யதார்த்தமும் கைவரப்பெற்றிருக்கிறது. கதையை வாசிக்கிறபோது கதைமாந்தர்கள் மனதில் படிவதும் ஓர் கற்பனை உலகைத் தூண்டிவிடுவதும் இக்குறுநாவலின் வெற்றி எனலாம். ஓர் அதிகாலையில் அந்தக்கிராமத்து ஆண்கள் எல்லோரையும் சிங்கள இராணுவம் சுட்டுக்கொன்றார்கள் என்ற சம்பவங்கள் யதார்த்தமாக, அற்புதமாக இருக்கிறது.  பெரியம்மா கூட்டக் கூட்ட பூவரசு இலைகளை உதிர்த்த படியே இருக்கும், பொறுக்கப்படாத எருக்கட்டிகளோடு பொக்கிளிப்பான் வந்த முகத்தைப் போலக் கிடந்தது பனங்கூடல், பெரியப்பா சோம்பேறி அதுதான் மூச்சு விட அவர் முயற்சி செய்யவில்லையோ என்று தோன்றியது, விமானப் பணிப்பெண்ணைப் பார்த்தால் எங்கள் ஊர் மீன் விற்கும் திரேசக்காவிற்கு கோட்டுப் போட்டுவிட்டதைப் போல இருந்தது”. இவை போன்ற மெருகூட்டக்கூடிய சொற்பிரயோகங்கள் கலாதியானவை.  

சராசரி வாசகனுக்கு பிடிபடாத வகையில் சில குறைகள் இருக்கிறது. நாவலை அத்துமீறிய பிரபஞ்சதத்துவங்களும், தொடர்ந்து இடையிடையே வரும் கனவுகளும் கதையை புரிந்துகொள்வதில் இடையூறாக உள்ளது. கதைக்கு வெளியே போய், அப்பப்போ கனவுகளாகவும் சம்பவங்களாகவும் வருகின்ற காமக்கிறுக்கல்களை தவிர்த்து இருக்கலாம் எனப்படுகிறது. ஒருகட்டத்தில் வெறுப்பின் விழைவாக, வாழுறத்திற்கு ஒரு துண்டு நிலத்தை பிச்சை கேட்டு திரிகிற மசிராண்டி, உனக்கு கெட்ட கேட்டிற்கு ஒரு ஆண்குறியா என்று தன்னைத்தானே நொந்து கொள்வது இயல்பை மீறிய, வசனமுதிர்ச்சியின்மைபோல தென்படுகிறது. டேய் என்ன நீ கல்யாணம் முடியனடா? என பவானி கேட்பது கொஞ்சம் யதார்த்தமின்மையோ எனப்படுகிறது. உலுந்தை என்கின்ற போராளி சைக்கிளில் பொதுமகனோடு போய் இராணுவத்தின் தலையை வெட்டிவருவதும் அதற்கான விளக்கங்களும் ஆசிரியர் தடுமாறுகின்ற இடங்களாகப்படுகிறது. கணவனையிழந்த சசியக்கா இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதும், ஓடிப்போவதும் இந்தக்கதைக்கு அவசியமில்லை எனப்படுகிறது. இருப்பினும் நாம் எல்லோரும் வாசித்து இரசிக்கக்கூடிய நாவல் இது.

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment