A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, January 1, 2012

கடிகாரம்

கடிகாரம் இந்த ஆண்டை உதறித் தள்ளிவிட்டு புதிய ஆண்டிற்குள் நுழைகிறது. கடிகாரத்திற்கு எந்த அவஸ்தையும் இல்லை; குற்ற உணர்வும் இல்லை; வயோதிபம் பற்றிய கவலை இல்லை; அடுத்த ஆண்டிற்கான திட்டம் இல்லை; தன்னை மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை.கடமையை செய்த திருப்தியோடு புதிய ஆண்டோடு ஒட்டிக்கொள்கிறது. பாவம் மனிதன்! அப்படியல்ல. தன்னை அசைபோட்டுப்பார்க்கிறான்; கழியும் ஆண்டின் அறுவடை பற்றி அங்கலாய்க்கிறான்; தன் தோல்விகளிற்காக கண்ணீர் சிந்துகிறான். மறுபக்கத்தில் அடைந்த வெற்றிகளுக்காக அவனால் ஆனந்தப்பட முடியவில்லை; மனசு முழுவதும் நிரம்பியிருக்கும் ஆசைகள் தடுக்கிறது. மனிதனுக்கு ஏனோ ஆனந்தப்படுவதைவிட அவஸ்தைப்படுவதில் ஆர்வம் அதிகம்.  தான், தனது குடும்பம், தனது நாடு என்று ஓராயிரம் கற்பனைகள். ஆசையும் கற்பனைகளுமாக அவன் அலைக்கழிக்கப்படுகிறான்.

சராசரி மனிதனுக்கு சந்திரனில் கால் வைக்கும் ஆசை எல்லாம் கிடையாது. தன்வாழ்வுக்கு தேவையான வருமானம்; அன்பை பொழிகின்ற குடும்பம்; தன்னை புரிந்துகொள்கின்ற சுற்றம்; அடுத்தகட்ட வளர்ச்சிக்கான சிறிய முன்னேற்றம். ஆனாலும் இவற்றுக்கான அவனுடைய போராட்டம் மிகப்பெரியது. விலைவாசியும் தேவையின் நீட்சியும் பொருளாதாரச் சிக்கலை உருவாக்கியிருக்கிறது; நகரமயமான வாழ்க்கையில் குடும்பத்திலிருந்து அவன் தனிமைப்படுத்தப்படுகிறான்; நல்ல சுற்றமோ, புரிந்துகொண்ட நண்பர்களோ இல்லை என்று ஏங்குகிறான்; வளங்களும் வசதிகளுமாக பரந்துவிரிந்து கிடக்கும் இந்தத்தேசத்தில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு துணையின்றி அவதிப்படுகிறான். வாழ்க்கை என்பது வரமல்ல சாபம் என்று தன்னைத்தானே நிந்திக்கிறான்.

பாவம் மனிதன்! எத்தனை துயரங்களை வலிகளை சுமந்து வந்தவன்; எத்தனை விட்டுக் கொடுப்புகளை செய்தவன்; பாசத்திற்கும் நேசத்திற்குமாக அலைந்தவன். உருப்படியாக எதையாவது செய்யவேண்டும் என அலைபவன். வழமைபோலவே வெற்றிகளும் தோல்விகளுமாக கழிந்த ஆண்டுகளை கடந்து, புதிய ஆண்டிற்குள் அவன் பிரவேசிக்கிறான். மனமெங்கும் நம்பிக்கையும் நல்லெண்ணமுமாக புத்தாண்டை வரவேற்கிறான். வாழ்க்கை நீர்க்குமிழி போல என்பார்களே, அவன் அறிந்ததுதான்; பிரபஞ்ச தத்துவங்களும் அவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். ஆனாலும் வாழ்வை முறைப்படி வாழவே இந்த உலகத்திற்கு அவன் அழைக்கப்பட்டிருக்கிறான். உலகத்தேவைகளில் அவனும் ஒரு புள்ளி; உலகை இயக்குவதில் அவனுக்கும் ஒரு சிறுதுளி பங்குண்டு; அவன் கடமை தவறமுடியா கருமி. ஆனாலும் அவனிடம் இருப்பதெல்லாம் இந்த மனம் என்ற மந்திரக்கோல்தான். அதை வைத்துதான் அவன் உலகப்பந்தை தொட்டுப்பார்க்கிறான்; அந்த மனம் என்ற பொக்கிசத்தை வைத்துதான் போராட்ட வாழ்வை  வெற்றிகொள்கிறான். தைக்கொண்டுதான் துக்கத்திலிருந்தும் துவண்டுவிடாமல் இயங்குகிறான்.

உண்மைதான், மனம் என்பது மகாசக்தி வாய்ந்தது; நம்மிடம் இருக்குக் மிகப்பெரிய ஆயுதம். அதை சரியாக இயக்க கற்றுகொண்டவர்கள் வாழ்க்கையை உண்மையாகவே ஜெயிக்கிறார்கள். அவர்களுக்கு மனதால் நேரத்தை மீதப்படுத்தவும் நேரத்தை சரியாக உபயோகிக்கவும் முடிகிறது. காலத்திற்கு அதிகம் கட்டுப்படாமல், அவர்கள் காலத்தை கட்டுப்படுத்துகிறார்கள். தோல்விகளிற்காக அதிகம் வருந்தாமல், வெற்றிகளிற்காக அதிகம் ஆர்ப்பரிக்காமல் வாழும் சமநிலை கைவரப்பெறுகிறார்கள். மற்றவரை நோகாடிக்காமலும், மற்றவர்களுடைய கடும்சொற்களால் காயப்படாமலும் வாழும் பக்குவம் வந்துவிடுகிறது. இந்த மனோநிலைதான் அவர்களை முன்னோக்கித் தள்ளுகிறது. மனக்கட்டுப்பாடு உள்ளவர்களை அதிகம் உடல் உபாதைகளும் தீண்டுவதில்லை. சோம்பேறித்தனமும் இயல்பாகவே விலகிக் கொள்கிறது. அவர்கள் லௌலீக வாழ்விலும் சரி, ஆன்மீக வாழ்விலும் சரி இலகுவாக முன்னேறுகிறார்கள்.

சரி, இந்த மனதை ஆளும் சக்தியை எப்படி வளர்த்துக்கொள்வது? இந்த வித்தையை யார் சொல்லித்தருவார்கள்? குரு தேவையா? புத்தகங்களிலிருந்து கிடைக்குமா? கோயிலில் ஏதாவது உண்டா? தியானத்தின் மூலம் அடையலாமா? துறவறம் போகலாமா? மேற்சொன்ன வழிமுறைகள் சிலவேளை சிறுதுளிதான் உதவலாம்; ஆரம்ப கட்ட படிமுறையாக அமையலாம். மனதை ஆள்வது என்பது அவ்வளவு இலகுவானது அல்ல; விரைவாக ஓரிரு ஆண்டுகளிற்குள் அடையமுடிவதும் இல்லை. இது ஒரு பரிணாம வளர்ச்சி. எடுத்த எடுப்பிலே வெட்டிச் சாய்க்க முடியாது. மனம் எப்போதும் பேராசைகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்; மனம் எப்போதும் சூழலை உள்வாங்கி அதற்கேற்றால் போல் ஆசைகொள்ளும், அந்தரப்படும். இதை தவிர்க்கவே ஞானிகளும் ரிஷிகளும் காடுகளிற்கும் இமய மலைக்கும் போய் ஒளிந்து கொண்டார்கள். இந்த சூழ்நிலைக்கைதியாக அடைபட்டுக்கிடக்கும் மனதை என்ன செய்வது? சராசரி மனிதன் எப்படி அதை எதிர்கொள்வது?

மனதை இலகுவாக பயிற்றுவிக்க முதலில் கடந்தகால கசப்புகளிலிருந்து மனதை நீக்குங்கள்; அன்பாக இருக்கவும்,  பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்; மற்றவர்மீது பொறாமை கொள்ளாதீர்கள்; அதிகமாக சுயநலமாக இருக்காதீர்கள். சமூகத்திலிருந்து அதிகம் ஒதுங்கிக் கொள்ளாதீர்கள்; ஆழமாகவும் இறங்காதீர்கள். மனைவி, குழந்தைகள் உட்பட எதுவும் உங்களிற்கு சொந்தாமனதல்ல என்ற மனோநிலையில் எப்போதும் இருங்கள்; அதிகம் விதியை, கர்மாவைப் பற்றி அலட்டிக்கொள்ளாதீர்கள்; புகைத்தல் மது அருந்துதல், பெண் சல்லாபம், அரட்டை அடித்தல் போன்றவற்றை உங்கள் சூழலிற்கு ஏற்பக் கட்டுப்படுத்தி குறையுங்கள், முடிந்தால் முற்று முழுதாக தவிருங்கள். சூதாட்டம் போன்றவற்றை பொழுதுபோக்கோடு நிறுத்திக்கொள்ளுங்கள்; உங்களுக்கு அதிகம் ஒத்துவராத கட்டுப்பாடுகளை, சமூக விதிமுறைகளை, பழக்கவழக்கங்களை பின்பற்றவேண்டும் என்று அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். ஆணவத்தை அப்படியே தலையிலிருந்து இறக்கி தரையில் வையுங்கள், கடைசிவரை உங்களோடு வரக்கூடிய பொழுது போக்கு ஒன்றை  தீவிரமாக இரசியுங்கள்; முடிந்தால் பங்குபற்றுங்கள் (இசை, சினிமா, விளையாட்டு, வாசிப்பு, உடற்பயிற்சி), வங்கிக்கணக்கை சாதகமாக வைத்திருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நாளுக்கு 8 -11 மணித்தியால உழைப்பையும், 6-8 மணித்தியால தூக்கத்தையும் கடைப்பிடியுங்கள். நாம் பலமாக இருக்கும் வரைதான் நமக்கான உறவுகளும் இந்த உலகமும் சொந்தம் என்கின்ற தத்துவத்தை மறந்துவிடாதீர்கள். முக்கியமாக, தோல்விகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் ஒவ்வொரு ஆண்டையும் திட்டமிடுங்கள்.

இறுதியாக, வெற்றி தோல்வி என்பது அவரவர் தேவைகளையும் விருப்பங்களையும் பொறுத்து வேறுபடும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான கனவு; வெவ்வேறான இலக்கு.; சிலருக்கோ பொழுதுபோக்குதான் இலக்கு. எனவே உங்கள் தேவைகளை உங்கள் சூழலுக்கேற்ற வகையில் திட்டமிடுங்கள். அதிஸ்டம், துரதிஸ்டம் என்கின்ற மாயமானைப் பார்த்து ஏங்காமல், திட்டமிட்டு கடினமாக உழையுங்கள். உழைப்பும் ஈடுபாடும் இல்லாவிட்டால் உங்கள் எதிர்கால இலக்கு சந்தேகம்தான். நலமோடு வாழுங்கள்; எல்லோரையும் வாழ்த்துங்கள்.

புத்தாண்டில் பிரவேசிப்போம்
புதியதற்காய் பிரயாசைப்படுவோம்
புதியவற்றை பிரசவிப்போம்
புதியமனிதராய் பிரகாசிப்போம்.

உங்கள் நேரத்திற்கு நன்றி,
நட்புடன்,
,பகீரதன்

No comments:

Post a Comment