A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, January 27, 2012

துறவறம்


முருகனைப் படைத்துநீ-இரு
முந்தானை கொடுத்தவனே
துறவறம் எதற்கு சொல்லடா?

கட்டிலில் கனியிருக்க
கட்டியவள்(ன்) கனிவிருக்க
துறவறம் எதற்கு நில்லடா?

கற்க நிறையவுண்டு
கண்டறிய இன்னுமுண்டு
துறவறம் என்ன சொல்லடா?

ஐந்தறிவு ஜீவனுக்கே
அழகாய் வாழ்விருக்கு
சொந்தறிவு இருந்துமா
சொந்தபந்தம் துறக்கிறாய்?

மொட்டுஒண்ணு மலர்ந்தல்லோ
மாலையா விழுந்ததடா
அணிந்து மகிழ்ந்தவனே
அதற்குள் அறுப்பதென்ன?

ஆயிரம் பூவிருக்க
வண்டிற்கென்ன துறவறம்?
ஆழ்கடல் நீரிருக்க
மீனிற்கென்ன துறவறம்?

பசுந்தரை நோக்கியல்லோ
பசுமாடு துறவுபூணும்
வாழும்கலை புரிபட்டா
துறவறம் எதற்குவேணும்

அகண்ட உலகமடா
ஆயிரம் கலகமடா
ஆழ்கடல் வாழ்விருக்கு
அள்ளிநீ பருகடா

துறவறம் துறவடா
அறநெறி வாழ்வடா
துணிந்துவானில் பறவடா
துறந்துஎன்ன பலனடா

பூமிக்குநீ பாரமில்லை
பூவிற்குநீ பகையுமில்லை
புதிய உலகுகண்டு
பூவாளம் பாடடா

வாழ்க்கையறியா இளமையடா
வாழ்வில்அதுவே இனிமையடா

வாழ்க்கையறிந்த பருவமடா
எல்லாம் ஒரு மாயமடா
எளிதில் ஆறா காயமடா

துறவறம்
என்பது மருந்தாடா
துறந்தவர்
மனசும் நிறைந்ததாடா

படைத்தவன் படியளப்பான்
பாமரனின் பேச்சப்பா
உன்விதியை தினமும்
படைப்பவன் நீயப்பா

இனியதை நினைத்து
இல்லறம் வென்று
இயற்கையோடு இசைந்துவிடு.


உங்கள் நேரத்திற்கு நன்றி.

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment