A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, January 6, 2012

முதுமை


தலை நரைத்தும்
ஆசை நரைக்கா
அறுபது முதுமையா

ஆசை அறுந்தும்
பாசம் அறுக்கா
எண்பது முதுமையா

அறிவின் வழிசென்று
அன்பை பொழிகின்ற
இளமை முதுமையா

அறிவின் தேர்ச்சி முதுமையா
அனுபவ திரட்சி முதுமையா
அன்பின் அரவணைப்பு முதுமையா

தலைநரைத்து தோல்சுருங்கி
நகம்மங்கி மார்புதொய்ந்து
கூன்விழுந்து குறிசுருங்கி …..இதுமுதுமையா

பகலுக்கு
இரவு முதுமை
இலைக்கு
சருகு முதுமை

கவிதைக்கு
உரைநடை முதுமை
பெண்ணுக்கு
தாய்மை முதுமை

வாழ்வில்
முதுமை இல்லா
புதுமை ஒன்றில்லை

மனிதனுக்கு…….
மனதின்
முழுமைதான் முதுமை

மனிதனுக்கு………
இளமையில்
கனிகின்ற அன்பே முதுமை

மனிதனுக்கு……..
இளமையில்
துணிகின்ற துணிவே முதுமை

முதுமை….
மனிதனுக்கு
காலம் வழங்கிய பொன்னாடை

முதுமை…..
மனிதனுக்கு
வருசங்கள் வழங்கிய மொய்

முதுமை
மனிதனின்
உழைப்புக்கு கிடைத்த ஊதியம்

முதுமை
மனிதனின்
இளமைக்கு கிடைத்த தண்டனை

முதுமை…..
மறுத்தாலும் ஒட்டிக் கொள்ளும்
வெறுத்தாலும் கட்டிக்கொள்ளும்

அறிவில் முதுமையும்
ஆளுமையில் இளமையும்
ஆயுள்வரை வரவேண்டும்

முதுமை பற்றி சிந்தித்து
ஒருவர் புத்தர் ஆனார்
மற்றவர்கள் என்ன ஆனார்?

கரியின் முதுமை
வைரம் போல்
உனது முதுமையும்
அர்த்தமாகட்டும்.

உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
.பகீரதன்

No comments:

Post a Comment