A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Tuesday, February 4, 2014

பலூனின் சுதந்திரம்


காற்றடைக்கப்பட்ட பலூன்

ஊசிக்காக காத்துக் கிடக்கிறது….

 

ஊசிகள் சில இன்னும்

தூண்டில் ஊசிகளாக

 

ஊசிகள் சில இன்னும்

தாசிகளின் மேற்சட்டையில்

 

ஊசிகள் சில இன்னும்

விருந்தாளியின் பல் இறுக்குகளில்

 

பார்வைக்கு

அழகாகத் தெரியும்

பலூனிற்குள் காற்றின் சுதந்திரம்

கேள்விக்குறி யாக்கப்படுகிறது?

 

பலூன் ஊதப்படுகின்றது

குழந்தைக்கு கும்மாளம்

ஊதியவனிற்கு சிம்மாசனம்

காற்றிற்கு மட்டும் அவமானம்

 

காற்றின் துணையோடு

பலூன் பறக்கிறது

பலூனிற்கு சுதந்திரம்

காற்றிற்கு நிர்ப்பந்தம்

 

காற்றின் துணையோடு

பட்டம் பறக்கிறது

பட்டத்திற்கும் கொண்டாட்டம்

காற்றிற்கும் விடுதலை

 

பட்டம் கயிறிடம்

சுதந்திரத்தை இழந்து கிடக்கிறது

காற்றிற்கு விடுதலை வழங்கிவிட்டு

 

பட்டத்தின் பெருந்தன்மை

பலூனிற்கு இல்லை

அதுதான் பட்டம் உயரப் பறக்கிறது

பலூன் தாழப் பறக்கிறது

  

காற்றிற்கு புரியவில்லை

பலூனின் பலவீனம்

 

பலூன் சூம்பிக் கிடப்பதாய்

ஒப்பாரி வைக்கின்றன ஊசிகள்

 

காற்றடைக்கப்பட்ட பலூன்

ஊசிக்காக காத்துக் கிடக்கிறது

 

ஊசிகளோ

சல்லாரி அடிப்பவர்களால்

நாதஸ்வரத்தில் தொங்கிக் கிடக்கிறது

 

காற்றின் சுதந்திரமே நம்சுவாசமாய்

சுதந்திரம் கேள்விக் குறியாகும்போது

சுவாசமும் தடைசெய்யப்படலாம்

No comments:

Post a Comment