A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, September 26, 2014

அணையாத தீபம்.


 

 

சிங்கத்திடம் சிக்காத எங்கள் தங்கம்

வங்கத்தின் நச்சுவாயில் வீழ்ந்ததுவே

கட்டுவனில் குண்டுபட்டும் குலையா அவனுடல்

சொட்டுத்தண்ணி அருந்தாமல் துடித்து வீழ்ந்ததுவே

 

ஊர்கூடித் தேரிழுத்த வீதியிலே

ஊர்கூடி ஓலமிட வந்ததுவே

கந்தனை சுற்றிவந்த கூட்டமெல்லாம்

சிந்தனை மறந்து மைந்தனைச் சுற்றி நின்றதல்லோ

 

உடலுருகிச் சுருங்கினாலும் உள்ளம் உறுதிபெற

கடல்பெருகிக் கந்தனடி சேர்ந்ததுபோல்

அலை அலையாய் அறந்தமிழர் அங்குகூடி

இளந்தமிழன் இன்னுயிரை இறைகாக்க வேண்டினரே

 

அடுத்தகட்டம் என்னவென்று அனைவரும் விழித்தபோது

அண்ணல்வழியே துணைவழியென்று விழித்தவனே

வஞ்சகக் கிருஸ்ணனின் வாரிசுகள் வஞ்சிப்பார் என்றறிந்தும்

துஞ்சாமல் களம்புகுந்து அண்டைய நாட்டின் முகத்திரையை கிழித்தவனே

 

உண்ணாமல் நீகிடந்த வீதியினை

எண்ணாமல் இருக்க முடியலயே

அண்ணா அண்ணாவென அழுத முகங்கள் எல்லாம்

கண்முன்னால் வந்துநிற்க நெஞ்சுகலங்கிறதே

 

பார்த்தீபா! பார்த்தீபா

பார்த்தாயா? எங்களினம் படும்பாட்டை

என்ன சொல்ல? என்ன சொல்ல?

என்னினத்தின் நிலைதனை என்னசொல்ல?

 

புத்தி கெட்ட பிக்குவெல்லாம்

புத்தர் பெயர்சொல்லி பிழைக்கிறான்

கத்தியும் கள்ளப் புத்தியுமாய்

வட கிழக்கை கிழிக்கிறான்

 

கொப்பிழந்த குரங்குபோல

தமிழன் தாவித்தாவி தவிக்கிறான்

தனதுவளம் தமிழர்நிலம் மறந்துபோய்

தார்வீதி கண்டு மலைக்கிறான்

 

என்ன சொல்ல? என்ன சொல்ல?

என்னினத்தின் ஈனத்தினை என்னசொல்ல

நடந்ததெல்லாம் சொல்ல நாலைந்து பக்கம்வேணும்

சொல்லச்சொல்ல நம்மானம்தான் கெட்டுப்போகும்

 

தியாகங்களை மறக்காதே தமிழா!!

 

நன்றி.

அ.பகீரதன்

 

No comments:

Post a Comment