நீதிக்கான குரல்....
உனது கருத்துக்கள் அதிகாரத்தில்
இருப்பவர்களிற்கும் அருவருடிகளிற்கும் சுயநலக் கும்பல்களிற்கும் கசப்பாக இருக்கலாம்;
ஆனால் அடிமட்டத் தொண்டனிற்கும் அநீதியை எதிர்த்து நிற்கும் ஏழையின் செவிகளிற்கும் இனிப்பாக
இருக்க வேண்டும். சமூக நடப்பு, சாணக்கியம் என்பவற்றையும் தாண்டி சத்தியத்திற்காக உனது
குரல் ஓங்கி ஒலிக்கட்டும். இந்த உலகம் பல பிரமாக்களையும், பிதாமகர்களையும் சந்தித்து
இருக்கிறது. இவர்கள் நிலையற்றவர்கள். இவர்கள் எடுத்துக் கொண்ட உண்மை மட்டுமே நிலையானது.
அதுவே உலகை மாற்றிய அற்புதக் கருவிகள். அந்த உண்மைதான் காந்தியாக, கார்ல் மார்க்ஸாக
நமக்குப் பயன்பட்டது. சுயநல, அயோக்கியத்தனம் சார்ந்த இந்த பூமிப் பந்தை நல்வழிக்கு
உருட்டும் நெம்புகோலாக உன்னால் இருக்க முடியாமல் போகலாம்; வாய்மூடி மௌனமாக நகரும் சுயநல
மனித சமூகத்தை உன்னால் ஒன்றுபடுத்த முடியாமல் போகலாம்; தர்மத்திற்காக போராடும் வர்க்கத்தை
உன்னால் ஒன்றிணைக்க முடியாமல் போகலாம். ஆனாலும் என்ன? காதில் விழுவதை கணக்கில் எடுக்காமல்
நெஞ்சில் எழுவதை சொல். உன் வார்த்தைகளால் நீதி கிடைக்காமல் போனலாலும் கூட, அது நாளை
அநீதி செய்ய இருப்பவர்களிற்கு எச்சரிக்கையாக இருக்கட்டும். கோபத்துடன் எழுபவன் நட்டத்துடன்
உட்காருவான் என்று ”கோச்சடையான்” சொல்கிறது. ஆனாலும் சமூகக் கோபம் தேவையானது. நீதிக்கான
உன் கோபம் தொடர்ந்து ஒலிக்கட்டும். உன் குரல்வளையை மற்றவர்கள் நெரித்தாலும் உன் குரல்
ஓங்கி ஒலிக்கட்டும். தனிமனித நட்புக்களையும், கதிரை சார்ந்த இலாப நட்டக் கணக்குகளையும்
தாண்டி அவை வெளியே வரட்டும். உண்மையை முதலில் அலசி ஆராய்ந்த பின்பு பேசக் கற்றுக் கொள்வோம்
அனைவரும். வாழ்வின் முடிவு எல்லோருக்கும் பொதுவானது, அது மரணம் எனும் மகிமை. அதுவரைதான்
நம் ஆட்டம். வயிறும் உடலும் பசிக்கும் வரைதான் வாழ்வு.......