A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, August 7, 2015

அத்தனைக்கும் ஆசைப்படவா?



ஆசைகளின் தொடர்ச்சி
நீள் பாதையாய் நீண்டுபோய்க் கிடக்கிறது
வெகுதூரம் நடந்தும் இளைப்பாற மனமின்றி
கால்கள் நகர முனைகிறது

முடிவில்லா ஆசைகளின்
முற்றுப்பெறா பயணத்தில்
தொலைந்து போகிறது வாழ்வெனும் மகிமை
எல்லோர் வாழ்வும் கூண்டுக்கிளியாய் ஆசைச்சிறையில்

உச்சரிக்கப்படும் ஒவ்வொரு சொல்லிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
மனிதனின் ஆழ்மன ஆசைகள்
கீழ்த்தரம் மேல்த்தரம் எனும் பாகுபாடின்றி

குருதி குடிக்கும் வெறியோடு
நரகபலிக்காய் காத்திருந்த மனித மனங்கள்
போட்ட வேசங்கள் கூக்குரலாய் தெருவெல்லாம்
கைகொட்டிச் சிரிக்கிறது மனச்சாட்சி எனும் அறிவு

முடிவிலியாய் காமமும்
அறிவிலியாய் ஆணவமும்
அடிமனதின் ஆயிரம் வன்மங்களாய்
பரிகசித்துச் சிரிக்கிறது படைத்துவிட்ட இயற்கை

நாகரீகம் போட்ட வேலிக்குள்
நசியுண்டுபோய் உயிர் வாழத் துடிக்கிறது காதல்
காமச் சிறகுகளின் விசையில் ஒட்டிக்கொண்டு
குற்றுயிராய் வாழ்கிறது காதல்

புசிக்கப்படா காமம் காதலெனும் முகமூடியுடன்
கட்டுப்படா ஆணவம் அதிகாரமெனும் அகராதியுடன்
ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைத்துவிட்டு
அடங்கிப் போகிறது சவப்பெட்டிக்குள்

விபச்சார விடுதிக் கதவில் சாய்ந்து நின்றபெண்ணும்
சமூகத்தால் பத்தினி பட்டம் பெற்ற பவித்திரப் பெண்ணும்
பாவம் சபித்தபடியேதான் விடைபெற்றுப் போகிறார்கள்
சமூகச் சிறையின் கம்பிகளை உடைக்க மீள்பிறப்பெடுப்பதாக

மானுடக் காதலையும் மனித விடுதலையையும்
நேசித்த மகத்தான மனிதன் ஒருவன்
குறுந்தெருவில் முடியைப் பிய்த்து எதையோ பேசியபடி
நீண்டு நடந்து தொலைக்கிறான் வழிப்போக்கனாய்

வாழ்வின் முடிச்சுக்களை
ஒவ்வொன்றாய் அவிழ்க்க அவிழ்க்க
மேலும் இரகசியப் பூட்டுக்களால் 
இறுகிப் போகிறது வாழ்க்கை

வலி சுமந்து சுமந்து பழகிப் போனது மனசு
விடைபெறும் நேரத்திலும் விடைபெறா அல்ப ஆசைகள் இன்னும் பாக்கியாய்
மானுடத் தேடலற்று வாழ்வின் மகிமை தொலைத்து
தேசாந்திரியாய் சுற்றி அலைகிறது மனமும் அறிவுகெட்டு

நன்றி
நட்புடன்,

அ.பகீரதன்

No comments:

Post a Comment