A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, March 2, 2012

வா நண்பா


குதிரை குதிரை- நாம
பந்தயக் குதிரை நண்பா
உயிரை பணயம் வைச்சா
உயர்ந்திடலாம் நண்பா

எழுவோம் எழுவோம் -நாம
எழுந்துகிட்டா ஏறுமுகம் நண்பா
மனிதம் வென்று வாழ்ந்து
வளர்ந்திடுவோம் நண்பா

அணுவாய் விழுந்தோம்
உயிராய் எழுந்தோம்
விறகாய் விழுந்தால்
நெருப்பாய் எழுவோம்

தனியாய் நிமிர்ந்தோம்
சிறகாய் விரிந்தோம்
எருவாய் தாழ்ந்தால்
நீறாய் உயர்வோம்

விழுந்தாய் மீண்டும் எழுந்தாய்-புது
விதியை நீயும் வரைந்துவிடு
மீண்டும் விழுவாய் எழுவாய்-அதை
அறிவால் மனதால் உணர்ந்துவிடு

அறிவாய் நீயின்றே அறிவாய்
அறிவால் நீயும்  ஜெயித்துவிடு
அழிவாய் ஒருநாள்நீயும் அழிவாய்
அறிந்து நீதிவழி நடந்துவிடு

மனமே உனக்கு தலைவன்
மதித்து துதித்து தொண்டாற்று
அறிவே உனக்கு தளபதி
அறிந்து அணுகிஅதை உண்டாக்கு

வளர்வாய் அறிவால்
தளிர்வாய் மனசால்
புதிதாய் உருவாகு
புதியதலைமுறையை உருவாக்கு

பணத்தை உழைத்து
பலமாய் உருவாகு
உருவாகி உயர்வாகி
பத்துப்பேரை உருவாக்கு

நிலையாமைதான் வாழ்க்கை
நில்லாமால் ஓடு நண்பா
அறியாமைதான் வாழ்க்கை
அறிந்திடப் பாரு நண்பா

நன்றி.
அ.பகீரதன்

No comments:

Post a Comment