A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, February 10, 2012

கற்பு


ஆணுக்கும் கற்புண்டு
பெண்ணுக்கும் கற்புண்டு
அறியாத எவருக்கும்
அழிவிற்கு வாய்ப்புண்டு

அவளென்ன கல்பூண்டா
நீயென்ன கற்கண்டா
இருவேறு அளவுண்டா
இருவரும் ஒன்றல்லா

அம்மி மிதித்தாளே
அருந்ததி பார்த்தாளே
அல்லாமே சடங்கப்பா
அறத்திற்கு அடங்கப்பா

அம்மணமாய் இருவருமே
அக்கணமே திருவரமே
ஆயுள்வரை கைகூடணுமே
அதுவரை கற்புநெறிவாழணுமே

வகிடு பிரித்துஇழுத்து
வதனத்தில் பொட்டுவைத்து
முந்தானைமறைத்து முதுகையும்மூடி
முட்டாள்பயலே இதுவல்ல கற்பு

 
கற்பெனும் பெரும்பொருள்
கன்னியரின் உடைக்குள்ளா?
கற்றறிந்த மடையனே
கற்றதேஉனக்கு தடைக்கல்லா?

பூமியின் கற்பு
புவியீர்ப்பு விசையாகும்
சாமியின் கற்பு
சந்தையிலே விலைபோகும்

காற்றின் கற்பு
கடைக்கோடியிலும் சுவாசமாகும்
கடவுளின் கற்பு
கொள்ளையரின் கைவசமாகும்

பணக்காரனின் கற்பு
ஏழைக்கும் இரங்கணும்
படித்தவனின் கற்பு
பாமரனுக்கும் பயன்பெறணும்

தோழனின் கற்பு
தோல்வியிலும் தோளாகணும்
துணையின் கற்பு
துன்பத்திலும் பாலாகணும்

உங்கள் நேரத்திற்கு நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment