A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, February 17, 2012

ஆசான், அமரர், ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் இறுதி நிகழ்வில் நான் ஆற்றிய இரங்கல் உரையின் எழுத்துருவாக்கம்


முழுமையும் நிறைவும் பெற்ற அற்புதமான வாழ்க்கை வாழ்ந்த எங்கள் ஆசான் அமரர் ஆசிரியர் சிவசாமி அவர்களின் இறுதி நேரத்தில் நாம் அவர் வாழ்க்கை பற்றிய சில நல்ல நினைவுகளை மீட்டுப்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரே பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்தும்கூட எனக்கும் அவருக்குமான கால இடைவெளி ஏறக்குறைய 45 ஆண்டுகளாக இருந்த காரணத்தால் அவரிடம் கல்வி பயிலுகின்ற சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. ஆனாலும் அவரிடம் கல்வி கற்ற எனது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் ஊடாக அவர்பற்றி நான் அறிந்த விடயங்கள் பெருமைக்கும் மகிழ்ச்சிக்குமுரியவை. அந்தச் சம்பவக் கோர்வைகளை, அவருடைய மாணவனாகவே இருந்து அனுபவித்த புலவர் ஐயா அழகாக விபரிக்கும் நாபக்குவம் உள்ளவர்.

அமரர் வெறும் கல்விமானாக மட்டும் இல்லாமல், பாடத்திட்டத்தை மட்டும் மாணவர்களிற்கு புகுத்தும் ஆசிரியராக இல்லாமல், அன்பை, அறத்தை ஆளுமையை தனது மாணவர்களிற்கும் தனது குழந்தைகளிற்கும் ஊட்டி வளர்த்த பெருமைக்குரியவர்.

படித்தவர்களைவிட அதிகம் வியாபாரிகளை உருவாக்கிக் கொண்டிருந்த எங்கள் பிரதேசத்தில் அதிகம் கல்விமான்களை உருவாக்க அக்கறையோடு உழைத்து வெற்றிபெற்ற ஆசிரியர்களில் மிகமுக்கியமானவர் ஆசான் அமரர் சிவசாமி ஆசிரியர் அவர்கள். 

ஒரு மனிதன் கோடீஸ்வரனாகவோ அல்லது பெரும் தலைவனாகவோ அல்லது அதிகாரம் நிறைந்தவனாகவோ மரணிப்பதைவிட, நல்லவனாக, கடமையை சரியாக செய்த மனிதனாக மரணிப்பது மிக மேலானது; அது எங்கள் ஆசிரியருக்கு முழுமையாக கைகூடியிருக்கிறது.

மனிதனும் வாழ்க்கையும் ஒன்றுபோலத் தெரிந்தாலும் வெவ்வேறானவை; சிலரை வாழ்க்கை தொட்டுப்பார்க்கிறது; சிலரை வாழ்க்கை உரசிப்பார்க்கிறது; சிலரை வாழ்க்கை கண்டுகொள்வதே இல்லை. மிகச் சிலரைத்தான் வாழ்க்கை ஆரத்தழுவி அரவணைக்கிறது. எங்கள் ஆசிரியர் அவர்கள் வாழும் கலையை சரியாக அறிந்திருந்தபடியால் வாழ்க்கையை சரியாக வாழ்ந்தார். வாழ்க்கை அவரை அரவணைத்துக் கொண்டாடியது. 

பேச்சிற்காகவோ பகட்டிற்காக நான் சொல்லவில்லை. ஒருமனிதன் 82 ஆண்டுகள் சமூகத்தளத்தில் குறைகுற்றாமல் இல்லாமல், நோய்பிணி இல்லாமல், தொழிலில் கடமை தவறாமல், குழந்தைகள், பேரக்குழந்தைகள், நல்ல உறவினர்கள் என வாழ்வை அனுபவித்து வாழுந்து தன்னையும் தன்குடும்பத்தையும், தன் சமூகத்தையும் சிறப்பாக கவனித்தல் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. அந்த வரம் ஆசிரியருக்கு வாய்த்திருக்கிறது, அந்த வரத்தை, நேர்மையின் ஊடாக, அறிவின் ஊடாக, தன் பண்புகள் ஊடாக, துணிச்சல் ஊடாக, யோகா ஊடாக ஆசிரியர் மெய்ப்பித்து, அந்த வரத்தை வாழ்வாக்கியிருக்கிறார்.

தனது குழந்தைகளை அன்பானவர்களாகவும் ஒழுக்கசீலர்களாகவும் கல்விமான்களாகவும் சமூக அக்கறையுள்ளவர்களாகவும் உருவாக்கி, தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி என வள்ளுவன் வகுத்தபடி தான் வாழ்ந்தது மட்டுமல்லாது மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்று வள்ளுவன் சொன்னபடி பிள்ளைகளுடைய புகழ்மிக்க வாழ்வையும் தீர்க்க ஆயுளோடு பார்த்து இரசித்திருக்கிறார். அனேகமான வட இந்திய தெனிந்தியக் கோயில்கள் உட்பட ஆப்பிரிக்கா கண்டம் தவிர எல்லாக் கண்டங்களிலும் தங்கி அனுபவித்திருக்கிறார்.

இறுதியாக அவருடைய மரணத்தைப் பாருங்கள், ஒரு கிழமைக்கு முன்பாக குடும்ப வைத்தியர் வயதுமுதிர்ந்த இளைஞன் என்று பாராட்டி மாத்திரைகளை குறைக்க சொல்லி இருக்கிறார்.  கடைசி இரு நாட்களும்  சுவிஸிலிருந்து வருகை தந்திருந்த மைத்துனர் குடும்பத்தோடு உணவருந்தி பேசி மகிழ்ந்திருக்கிறார். காலையில் மனைவியை கண் வைத்தியரிடம் சரியான நேரத்திற்கு போகும்படி நலம் விசாரித்து அனுப்பி இருக்கிறார். கடைசி மகள் மாலை 3.30 உணவூட்டி இருக்கிறார், பின்பு மனைவி மேற்சட்டை போட்டிருக்கிறார், வாழ்ந்த இல்லத்திலெயே மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளிற்கு முன்னால் இரண்டாவது மகளின் மடியில் மிக இலகுவாக, ஆசுவாசமாக சுவாசத்தை நிறுத்தி இருக்கிறார். அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறையுள், பாசம் அந்த நான்கையும் கடைசி மணித்துளியிலும் ஆண்டவன் அவருக்கு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் என்பது வரமல்லாமல் என்னவென்பது.

இப்படியெல்லாம் ஒரு மனிதன் சிறப்பாக வாழ்ந்து அழகாக மரணிப்பதற்கு முக்கியமான அமைப்பு ஒன்று இருக்க வேண்டும். அந்த அமைப்பு என்னவென்றால் அவருக்கு அன்பான, குணமான, இதய சுத்தியுள்ள மனைவி வாய்த்திருக்கிறது. அம்மா, இதயம் பூராகவும் வலி இருந்தாலும் நீங்கள் சிறப்பாக வாழ்ந்தீர்கள் என்று உங்களை தேற்றிக்கொள்ளுங்கள். நல்ல மனிதனின் வாழ்விற்கு, அந்த மனிதனின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்தீர்கள் என்று உங்களை ஆற்றிக் கொள்ளுங்கள்.
வாழ்வாங்கு வாழ்ந்த அமரர், எங்கள் ஆசான், எங்கள் வழிகாட்டி, குரு, அமரர் சிவசாமி ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக் கொண்டு, அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஆறுதல் அடைவோமாக.
சுபம்!

No comments:

Post a Comment